ஆளுமை:சகாதேவராஜா, தம்பிராஜா

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 18 ஏப்ரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தம்பிராஜா ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பிராஜா சகாதேவராஜா
தந்தை வேலுப்பிள்ளை தம்பிராஜா
தாய் தங்கநாயகம்
பிறப்பு 1964.09.28
ஊர் காரைதீவு, அம்பாறை
வகை ஊடகவியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தம்பிராஜா சகாதேவராஜா அவர்கள் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் தம்பிராஜா, தங்கநாயகம் தம்பதிகளுக்கு எட்டாவது மகனாகப் 1964.09.28 இல் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை காரைதீவு ராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலையிலும் உயர்கல்வியை மட்டக்களப்பு கல்லடி சிவானந்த வித்தியாலயத்திலும் கற்றார்.

1988 இல் விஞ்ஞான ஆசிரியராக விபுலானந்தா மத்திய கல்லூரியில் முதல் நியமனம் கிடைத்தது. அதன் பின்னர் 1999 இலிருந்து கடந்த 25 வருடங்களாக சம்மாந்துறை கல்வி வலயத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். 25 வருட காலமாக சமாதான நீதவானாகவும் சேவை ஆற்றி வருகிறார். பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்தார். பின்னர் கல்வி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

1986 களிலே ஊடகத்துறையில் இணைந்து கொண்டார். இதற்கு காரணம் இவரது தந்தையாரின் பத்திரிகை வாசிக்கும் பழக்கமும் இவரது சகோதரர் வீரகேசரி பத்திரிகையாளராக கடமை ஆற்றியமையும் ஆகும் . ஆரம்பத்தில் பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதிக்கொண்டு வந்ததுடன் அதன் பின்னர் காரைதீவு பிரதேசத்திற்குரிய நிருபராக சேர்ந்தார்.

1992 இல் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் மன்றத்திற்கு தலைவராக பணியாற்றிய வேளை சுவாமி விபுலானந்தருக்கு நூற்றாண்டு விழா சிலை எழுப்பியதுடன், அங்கு வருடாந்தம் வெளியிடப்படும் ‘கலைச்செல்வி’ எனும் நூலுக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார். அன்றிலிருந்து வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளுக்கு நிருபராக எழுதி வந்தார். 2004 ஆண்டில் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் அதனை மையமாகக் கொண்டு 2005 இல் ‘ஊழியில் ஆழி’ எனும் நூலை வெளியிட்டார். அதில் சுனாமியின் வரலாறு, இலங்கையில் சுனாமியின் தாக்கம், காரைதீவு பிரதேசத்தில் சுனாமியின் தாக்கம் போன்றவைகள் இடம்பெறுகின்றன. இதுவே இவரது முதலாவது நூலாகும்.

இவர் காரைதீவு விளையாட்டுக்கழகம், காரைதீவு இந்துசமய அபிவிருத்திச் சங்கம், காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மன்றம் போன்றவற்றின் ஆலோசகராகவும், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும், அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும், அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனத்தின் செயலாளராகவும், சமயங்களின் சமாதானத்திற்கான ஒன்றிய செயலாளராகவும், அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்க உபதலைவராகவும் சேவையாற்றினார்.

2007,2008 ஆண்டுகளில் இவருக்கு இரண்டு தடவைகள் ‘திகாமடுல்ல அபிமானி’ விருது அம்பாறை மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்டது. ‘வித்திய கலா ஶ்ரீ’ விருது காரைதீவு பிரதேச சபையால் நடத்தப்பட்ட வித்ய சாகித்திய விழாவில் வழங்கப்பட்டது. 2009 இல் காரைதீவு பிரதேச செயலகம் நடத்திய சாஹித்ய விழாவில் ‘விபுலமாமணி’ விருது வழங்கப்பட்டது. ‘மக்கள் சேவை ஊடக விருது’ 2007 இல் கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் வைத்து வழங்கப்பட்டது. 2008 இல் அம்பாறை மாவட்ட சிறப்பு ஊடகவியலாளர் விருது இரத்தினபுரியில் வைத்து அன்றைய அமைச்சர் மஹிந்த சமரசங்கவினால் வழங்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இத்தாலி மற்றும் பேங்க்கொக் நாடுகளில் அவர் விசேட பயிற்சி பெற்றுள்ளார். மேலும் சர்வசமயம், சமாதானம், கல்வி தொடர்பில் பங்களாதேஷ், மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பயிற்சி பெற்றார். 2019 இல் இந்துசமய கலாசார அமைச்சு ‘கலைச்சுடர்’ விருது வழங்கி கௌரவித்தது. 2011 இல் அகில இனநல்லுறவு ஒன்றியம் ‘சாம தேசமான்ய’ விருது வழங்கியது.

அதனை தொடர்ந்து சேவையின் சிகரம் எனும் நூல் வெளிட்டார். இவர் எழுதிய இந்நூலே இதுவரை காலமும் சுவாமி நடராஜானந்தருக்கு எழுதிய முதல் நூலாக இருக்கின்றது. இப்படியாக இவர் எழுத்துத் துறையிலே, பேச்சுத்துறையிலே, திறனாய்வாளராக மற்றும் ஊடகவியலாளரகவும் இருக்கின்றார். 2023 இல் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உயர்ந்த விருதான வித்தகர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இவர் சிறந்த ஆசிரியர், தொழிற்சங்கவாதி, எழுத்தாளர், பேச்சாளர், அறிவிப்பாளர், வர்ணனையாளர், பல்வேறு அமைப்புகளின் தலைவர், நிர்வாகி, சமூகசேவையாளர், சமயப்பணியாளர் போன்ற பல பன்முக ஆளுமைகளை கொண்டவராகக் காணப்படுகின்றார்.