நிறுவனம்:அம்/ கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை
பெயர் | கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | கல்முனை |
முகவரி | கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை, அம்பாறை |
தொலைபேசி | 0672229877 |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | www.kalmunaiwesley.com |
கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையானது கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்முனை நகரின் மத்தியில் கல்முனை மட்டக்களப்பு A4 பிரதான பாதைக்கும் கல்முனை கடற்கரை வீதிக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது.
தற்போது இது 2000 இற்கு மேற்பட மாணவர்களைக் கொண்டுள்ளது. இங்கு தரம் 1 தொடக்கம்13 வரையான தரங்கள் உள்ளன. 1814 ஆம் ஆண்டு யூன் 29 இல் இலங்கையை வந்தடைந்த மெதடிஸ்த மிஷனரிமார் இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களுக்கு பிரிந்து சென்று பணியை ஆரம்பித்தனர். பெண்களுக்கு கல்வி அறிவூட்டுவதனால் சமுதாயம் முழுமைக்கும் அறிவூட்டலாம் என்ற நோக்கோடு பெண்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் 1833 இல் மெதடிஸ்த மிஷனரிகளில் ஒருவரான அருட்திரு. ஜோச். ஜே. றிம்மர் அவர்கள் 200 பவுன் செலவில் இடத்தை வாங்கி 2000 ரூபா செலவில் கட்டடம் ஒன்றினைக் கட்டி பெண்கள் விடுதி பாடசாலையை அமைத்தார்.
பிரித்தானிய மெதடிஸ்த மிஷனரிமாரால் 1833 இல் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் விடுதி பாடசாலையும் 1901 இல் அருட்திரு கேப்ரியல் லீஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட மெதடிஸ்த ஆண்கள் பாடசாலையும் 1953 இல் ஒன்றிணைக்கப்பட்டு மெதடிஸ்த திருச்சபையின் ஸ்தாபகரான அருட்திரு. ஜோன் உவெஸ்லி அவர்களின் நினைவாக உவெஸ்லி உயர்தர பாடசாலை எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டத்தின் முதல் பாடசாலையாக 18 மாணவர்களுடன் பதிவு செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் கிடுகினால் வேயப்பட்ட நிலையிலேயே பாடசாலை காணப்பட்டது. படிப்படியாக மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது. பின் செங்கல் கட்டிடமாக மாற்றமடைந்தது. இங்கு படித்த மாணவர்களே ஆசிரியர்களாக பயிற்றுவிக்கப்பட்டு பணியாற்றினார்கள். முதல் உள்நாட்டு அதிபராக திருமதி. ஜெசி யேசுதாசன் அவர்கள் 1906-1932 வரை பணி புரிந்தார். இங்கு தமிழ் மொழி மூலமாக கல்வியே பிரதானமாக கற்பிக்கப்பட்டாலும் ஆங்கில மொழி கற்பித்தலுக்கும் முக்கிய இடம் தரப்பட்டது. இங்கு சுவாமி விபுலானந்தர், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், அரசியல்வாதி ஏ. ஆர். மன்சூர், அரசியல்வாதி எம். எச். எம். அஷ்ரப் மற்றும் எம். எம். முஸ்தபா போன்ற முக்கியமான நபர்கள் இங்கு கல்வி கற்றிருக்கிறார்கள். 1959 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் பாடசாலை தரமுயர்த்தலுக்கு உதவியாக இருந்தது.
உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் முதலாவது அதிபராக லீஸ் பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் ஜோர்ஜ் நல்லதம்பி 1954 வரை பணியாற்றினார். அவருக்குப் பின்னர் சாம் ஜே. வில்சன், திருமதி ஆர். சின்னையா, யோகம் வேலுப்பிள்ளை, கே. சுப்பிரமணியம், எஸ். மகாலிங்கம், பி. வெங்கடாசலம் (1988), பொன் முருகையா, வி. பிரபாகரன் ஆகியோர் அதிபர்களாகப் பணியாற்றினர். தற்போது அதிபராகப் திரு. செ. கலையரசன் பணியாற்றுகிறார். இங்கு கல்வி நடவடிக்கைகளைப் போலவே விளையாட்டு ரீதியாகவும் பிரசித்தி பெற்றது. இதன் மைதானம் மிகப் பெரியதும் கல்முனை கார்மேல் பாத்திமா பாடசாலை மைதானத்திற்கு அருகிலும் பாடசாலை அண்மித்தும் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மருத்துவர்கள், பொறியிலாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டதாரிகள் என இப் பாடசாலையில் இருந்து வெளியேறுகின்றார்கள்.