ஆளுமை:விநாயகமூர்த்தி, நாகமணி

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:13, 27 பெப்ரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகமணி விநா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகமணி விநாயகமூர்த்தி
தந்தை நாகமணி
தாய் மூத்தபிள்ளை
பிறப்பு 1940.10.05
ஊர் சேனைக்குடியிருப்பு, அம்பாறை
வகை நாட்டுப்புற கலைஞர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நாகமணி விநாயகமூர்த்தி அவர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்திற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு கிராமத்தினை சேர்ந்த ஒரு ஆளுமையுள்ள கவிஞர், நாட்டார் பாடல், கூத்து போன்ற பல்துறை கலைஞர் ஆவார். இவர் 1940.10.05 இல் ஆண்டிப்பிள்ளை நாகமணி மற்றும் கந்தப்பர் மூத்தபிள்ளை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை க/மு சேனைக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் பயின்றார். தனது 6ஆம் தரத்திற்கு பின் தந்தையுடன் சேர்ந்து கமத்தொழில் செய்தார்.இவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு ஆறு ஆண்பிள்ளைகள் அதில் தற்போது நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர் தனது 5ஆம் தரம் படிக்கும் போது காரைதீவினைச் சேர்ந்த வாத்தியார் சாமித்தம்பி பொட்டு ஐயா என்பவர் வசந்தன் கூத்து, கோலாட்டம் பழக்கி மேடையேற்றி இவருக்கு கலை ஆர்வத்தை வரவைத்தார். 1953 ஆம் ஆண்டு அவரிடம் புத்தகங்களை வாங்கிப்படித்து 15 வசந்தன் கூத்துக்களை எழுதி ஆடி அரங்கேற்றம் செய்தார்.

அதன் பின் மாரியம்மன் உற்சவ காலங்கள், பாடசாலை நிகழ்ச்சிகள் என்பவற்றிலும் மாணவர்களைப் பழக்கி மேடையேற்றியுள்ளார். அத்தோடு பெண்பிள்ளைகளையும் காவடி, கும்மியாட்டம் என்பவற்றை பழக்கி பரிசில்களையும் வாங்கியுள்ளார். 1960ஆம் ஆண்டு சராசந்தன் எனும் கூத்தில் அரசரெத்தினத்தோடு ஆடியுள்ளார். இக்கூத்தினை கார்மேல் மகளிர் பாடசாலை பெண்பிள்ளைகளைக் கொண்டு விவசாயச் செய்கையை புலப்படுத்தக்கூடிய நவீன நாட்டுக்கூத்து ஆடி பரிசில் பெற வைத்தார். 1965ஆம் ஆண்டு தம்பி குருக்கள் அவர்களால் சைவ மறுமலர்ச்சி மன்றம் உதயமாக்கி கர்நாடக சங்கீத முறைப்படி நாடகங்களில் சேர்ந்து நடித்தார். 1950, 1955 ஆம் ஆண்டுகளில் மல்யுத்தம், கம்பு சுத்துதல், பந்தம் சுத்துதல் மற்றும் சுருள்வாள் வீச்சு போன்ற கலைகளையும் கற்று அதனை பல விளையாட்டுப் போட்டிகள், பல கிராம நிகழ்ச்சிகள், கோவில் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

1970 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் குடி கொண்டுள்ள சிவமுத்து மாரியின் மீது பாடல்கள் இயற்றி அதற்கு பக்கிரசம் பாமாலை என பெயரிட்டு வெளியிட்டார். பின் சரவண சண்முகமாலை, புயல் காவியம், ஶ்ரீ சித்தி விநாயக பாமாலை, திருமுக திருப்பாமாலை, கழுகுமலைப்பத்து, மும்வை குந்த மோட்ச மாலை, உகந்தை முருகன் கும்மிப் பாடல்கள், குல தெய்வ வழிபாட்டுப் பாடல், முத்து மாரி காவியம், கருடப்பத்து, ஆதிமூலப்பத்து, பேச்சியம்மன் அகவல் - காவியம், தாலாட்டு, கும்மிப்பாடல்கள், நாகம்மை புகழ் மாலை போன்ற கலைப்படைப்புக்களை இயற்றியுள்ளார்.

அத்தோடு பல நிகழ்வுகளில் வில்லுப்பாட்டை மாணவர்களுக்கு பயிற்றுவித்து மேடையேற்றி இருக்கிறார். முக்கியமாக இறந்தவர்களுக்காக மயானத்தில் படிக்கப்படும் பஞ்சபுராணத்திற்கு பதிலாக மயானப்பத்தை இயற்றி அதனை படித்தும் இருக்கிறார். ஒவ்வொரு கோயில்களிலும் உடுக்கை வாசித்து காவியங்கள் பாடியுள்ளார். இவரிடம் கற்ற மாணவர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர்.

இவருக்கு 2007ஆம் ஆண்டு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை வாணி விழாவில் இவரை கெளரவித்து “அண்ணாவி மணி” என்ற பட்டத்தை வழங்கியது. 2003 ஆம் ஆண்டு கலாச்சார, பொதுச்சேவையில் பாரிய பங்களிப்புச் செய்தமைக்காக கெளரவிப்புச் சான்றிதழ் வின்னர் விளையாட்டுக் கழகத்தால் வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் “கலாபூஷண’’ விருது வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு கண்டி ரத்தின தீப அமைப்பால் “ரத்தின தீப” விருது வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தால் கலாச்சார பேரவை விருது வழங்கப்பட்டது.