நிறுவனம்:பள்ளிக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:11, 27 பெப்ரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=பள்ளிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பள்ளிக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் பள்ளிக்குடியிருப்பு
முகவரி பள்ளிக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்ப் பிரதேசத்தின் மிகப் பழம்பெரும் கிராமமான தி/ பள்ளிக்குடியிருப்பு வயலும் வயல் சார்ந்த மருதநிலத்தில் அமைந்துள்ளது. மருத நிலத்தின் ஒரு பெயர் பள்ளி என்பதனாலும் பள்ளிக்குடியிருப்பு எனப் பெயர் பெறக் காரணமாய் அமைந்தது.

மகாவலி நீர்வளமும், குளங்களின் நீர்நிலைகளும் கிராமத்தைச் சூழ நெல்வயல் வெளிகளை என்றும் பசுமைகுன்றாது, நெல் சிறப்பாக விளைவதனாலும், பிரம்பின் அளவு தடிப்பாக ஒவ்வொரு வேளாண்மையும் வளர்வதால் சூழவுள்ள வயல் வெளிக்கு பிரம்புவெளி எனக் காரணப்பெயர் வரலாயிற்று. இங்குள்ள மக்கள் தொன்றுதொட்டு தமது குலத்தொழில்களாக நெற்செய்கையையும், கால்நடை வளர்ப்பினையும் மேற்கொண்டிருந்தனர்.

குளக்கோட்ட மன்னனால் கோணேசர் கோயிலுக்கு நெல் தானியங்கள் வழங்கும் கிராமமாக 7 குடி மக்களைக் குடியேற்றியதாகவும், சிந்து நாட்டு வேளாளர்களே இங்கு குடியமர்த்தப்பட்டதாகவும், பழைய வரலாறுகள் கூறுகின்றன. தி/ பள்ளிக்குடியிருப்பிலிருந்து 1957 களின் பின்னர் தி/ சிறினிவாசபுரமும், 1970 களின் பின்னர் தங்கபுரம், இத்திக்குளம் முதலான கிராமங்களும் விரிவடைந்துள்ளன. இவ் ஆலய வரலாறானது 1850ம் ஆண்டிற்கு முன்பிருந்தே இருந்திருக்கலாமென ஊகிக்கப்பட்டாலும், 1875ம் ஆண்டின் பின்பு சிறப்பாகப் பெரிய ஆலய அமைப்பு வடிவில் உருவாக்கப்பட்டுள்ளமையை வாழ்ந்த மூத்தோர் வாயிலாக அறியமுடிகின்றது.

ஆலயத்தினை ஊரின் மத்தியில் அமைப்பதற்குத் திரு. சின்னத்தம்பி என்பவர் பிடியரிசி சேர்த்து, அதை ஏலத்தில் விற்றுப் பணம் சேர்த்ததாகவும் தனது கூடுதலான பங்களிப்போடு நிறுவியதாகவும் கூறப்படுகின்றது. அன்னாரது முயற்சியின் பயனாகச் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததும், ஆகமவிதிப்படி அமைந்ததுமான இவ்வாலயம் இப் பிரதேசத்தில் சிறந்த சிற்ப அமைப்புக்களுடன் கூடியதுமாக இருக்கின்றமை பெருமைப்படவேண்டிய விடயமாகும்.

நிர்வாக அமைப்பானது முறையாக ஏழு குடிமக்களில் இருந்தும் ஒவ்வொருவர் தெரிந்து எடுக்கப்படுவார்கள். இவர்கள் அடப்பன்மார் என அழைக்கப்படுவார்கள். இவர்களுள் முதற்குடி என உமணகுடியிலிருந்து தலைமை அடப்பன் தாய்வழியாகத் தெரியப்பட்டு மணியகாரராக இருப்பார். (தலைவராக) ஏனையவர்கள் பெரிய குடிகளில் இருந்து செயலாளர், பொருளாளராக கடமைக்கு அமர்த்தப்படுவார்கள். அதன் வழியாக திரு. கோணாமலை, திரு. காளியப்பு, திரு. மு. கணபதிப்பிள்ளை ஆகியோர்களின் வழி வழியாக 1950 களிலிருந்து திரு. க. மாரிமுத்து என்பவர் தலைமை மணியகாரர் அல்லது முதல் அடப்பனாகத் தெரிவு செய்யப்பட்டார். 1957 பெரு வெள்ளத்தின் பின் 1960 இன் போது கும்பாபிஷேகம் நடந்ததாக அறிய முடிகின்றது.

அவ்வேளையில் தலைவராக திரு. க. மாரிமுத்து அவர்களும், செயலாளராக திரு. சி. கந்தையா (விதானையார்) அவர்களும் ஏனைய சிறப்பான அங்கத்தவர்களோடு நீண்ட காலம் பணியாற்றி ஆலய வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள். சிறப்பாக பக்தி மேம்பாட்டிற்காக திரு. சி. கந்தையா (விதானையார்) அவர்கள் கூட்டுப் பிராத்தனைகளைத் தினம் நடாத்துவதும் விசேட தினங்களில் சிறப்புச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தும், விஷேட தினம், திதிகளைச் சிறப்பாகச் செய்தும் இக்கிராமம் பூரண சைவப் பாரம்பரிய பழக்க வழக்கங்களுடன் மக்கள் வாழ சிறப்பான நிர்வாக முறையாக இருந்து வந்துள்ளதை அறிய முடிகின்றது.

இரண்டாவது தடவையாக 1976களின் போது ஆலய பரிபாலன சபைத்தலைவராகவும், இந்து இளைஞர் மன்றத் தலைவராகவுமிருந்த திரு. ஆ. குணராஜரெட்ணம் அவர்களும், செயலாளராக இரா. கோபாலபிள்ளை, பொருளாளராக சிவலிங்கம் அவர்களும் இருந்து அனைத்து பொதுமக்கள், இளைஞர்களின் முழு முயற்சியால் நடாத்தப்பட்டது.

ஆலய பரிபாலனசபை அமைக்கப்பட்டு திரு. செ. விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் சிறப்பாகப் பணி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்றது. 1985களின் பின்னர் இவ்வாலய நிர்வாகமுறையில் 10 திருவிழா அங்கத்தவர்களும், 10 குடியினரிலிருந்தும் குடித்தலைவர் அல்லது அங்கத்தவர் தெரியப்பட்டு எல்லோருக்கும் ஒவ்வொரு வருடம் தலைவராக இருந்து பணியாற்றும் பெரும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இது திருவுளச்சீட்டு எடுக்கும் முறையில் தெரிவுகள் இடம்பெறும். இதே போல் முக்கிய பதவிகளுக்கும் (செயலாளர், பொருளாளர்) திருவுளச்சீட்டு முறையில் தெரிவு இடம்பெற வழி செய்தமை எல்லோருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கும் செயலாகவும், வீணான போட்டிச் செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் சிறப்பாகச் செயற்படவும் வழிவகுத்தது.

குறிப்பாக 1992களில் வன்செயலால் ஆலயம் பாதிக்கப்பட்ட வேளையில் வடகிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டு அமைச்சில் 25,000 ரூபா நிதியைப் பெற்றுதர உதவிய தலைவராக இருந்த திரு. க. சண்முகராசா அவர்கள் நினைவு கூரவேண்டியவராவார். 2000ம் ஆண்டு எமது சித்திவிநாயகரின் அருள்பாலிப்பின் நிமித்தம் தற்போதைய நிர்வாக சபையினர் பொதுமக்களின் ஒத்துழைப்போடு பாரிய கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களது பங்களிப்பும் காத்திரமாக அமைந்தது.

இங்கு பஞ்சாயத்து அமைப்பிலான ஒரு நிர்வாக முறை இருந்திருக்கிறது. ஒவ்வொரு குடியில் இருந்தும் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் சேர்ந்து முடிவுகள் எடுப்பர். (உ+ம்) திருமணங்கள், பூப்புனித நீராட்டுவிழா, வேறு சங்கத்தலைவர், உறுப்பினர் தெரிவுகள் முதலிய விடயங்களில் இவ் அடப்பன்மாரின் அனுமதி வேண்டும். இதில் தட்டம் வைத்தல் (வெற்றிலை வைத்தல்) முதல் தட்டம் முதல் தலைமை அடப்பருக்கும், ஏனையவர்களுக்கும் வைத்து வரவழைத்து அனுமதியைப் பெறுவர். இம் மரபு தற்காலத்தில் அருகி வந்தாலும் கிராமத்தின் ஒற்றுமை செயற்பாடுகள் தொடர்கின்றமையை அறியமுடிகிறது. (உ+ம்) மரணவீடு ஒன்று நடைபெற்றால் வேளாண்மை அறுவடை நடைபெற்றாலும் அதை நிறுத்திவிட்டு அனைவரும் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளதைக் குறிப்பிடலாம்.

10 திருவிழாக்கள் உள்ளன. முன்பு ஆரம்ப எழு குடியினருக்கும் ஏழு திருவிழா, போக மீதி 1, 2, 4ம் திருவிழாக்களில் 1ம் திருவிழா பொதுவாகவும், 2ம் திருவிழா உமண குடியினராலும், சலவைத் தொழிலாளி சின்னத்தம்பி அவர்களாலும் முன்பு நடத்தப்பட்டது. பின்னர் இவை தற்போது 1ம் திருவிழா வெள்ளக்குடியினருக்கும், 2வது திருவிழா ஆசாரி குடியினருக்கும், 4ம் திருவிழா மாலயன் குடியினருக்கும் வழங்கப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன.

1964 களுக்கு முன்பு இங்கு திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன. 7ம் திருவிழாவினைத் தொடர்ந்து சுவாமி வெளிவீதியில் சப்பறத் தேரில் உலாவருவதும், விசேடமாக யாழ்ப்பாணத்திலிருந்து பிரபல நாதஸ்வர மேளக்காரர்கள் 7, 8 சோடியினர் அழைக்கப்படுவதும், சின்னமேளம் எனும் நாட்டிய நாடகம், வாண வேடிக்கைகள் இடம் பெறுவதும் குறியப்பிடக்கூடிய சிறப்பம்சங்களாகும்.

1985களின் முன்னர் ஆவணியில் நடாத்தப்பட்ட திருவிழாக்கள் 1985களின் பின் பங்குனி உத்தரத்தில் தொடங்கி நடாத்தப்படுகின்றது. இது காலபோக அறுவடையை மையமாக வைத்து மாற்றப்பட்டது. 1980களின் முன்னர் கோவில் ஐயருக்கு வரியாக ஒவ்வொருவரும் 10 நாள் நெல் கொடுக்கும் வழக்கம் இருந்து பின்னர் அவற்றை பணமாக மாதச் சம்பள அடிப்படையில் வழங்கப்படுகின்றது. பத்துத் திருவிழா முடிவில் பூங்காவனத் திருவிழா, தீ மிதிப்பு, தீர்த்தம், அன்னதானம் என்பனவும் நடைபெறுகிறது.நித்திய பூசைகளாக தினம் மூன்றுவேளை நடைபெறுகிறது. திருவிழாவோடு கந்தசஷ்டி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. 6 நாட்களும் விஷேட அபிஷேகத்துடன் திருவிழாவாக அண்மைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படுகின்றது. அத்தோடு திருவெம்பாவை, பிள்ளையார் காப்பு, கேதார கௌரிகாப்பு விரதம், சிவராத்திரி, புதுவருடப்பிறப்பு முதலானவைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

பௌதீகவள விருத்தியை நோக்கும் போது கோயில் அமைப்பு காணியும், கலாச்சார மேடை அமைந்த புறவீதிப்பகுதியும் திரு. சி. தம்பாப்பிள்ளை சகோதரர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முறைப்படியானதும் முன்னர் வேலைப்பாடுகளையுடையதுமான ஆகம சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அறியக் கிடைத்த ஆதாரங்களின்படி வைரவர் கோயில் திரு. ப. முத்துக்குமார் குடும்பத்தினரும், மடப்பள்ளி புனருத்தாரணம் திரு. ஆ. கனகரெட்ணம் குடும்பத்தாரும், மதில்கள் 10, 9, 8, 7ம் திருவிழாக்காரர்களாலும், விழா மண்டபம் உமண குடியினராலும், தெற்கு வாசல் மண்டபம் தோப்புச்சி குடியினராலும், முருகன் ஆலயம் திரு. கந்தையா தவராசா குடும்பத்தினராலும், மணிக்கோபுரம் திரு. பொ. அழகுதுரை குடும்பத்தினராலும், நவக்கிரகக்கோயில் த. ஈ. வி. பு அமைப்பினராலும், காரியாலயம் படைத்தார் குடியினராலும் நிறைவு செய்துகொடுக்கப்பட்ட பாரிய தேவைகளாகும்.

எழுந்தருளி பிள்ளையார் விக்கிரகம் திரு. செ. விநாயகமூர்த்தி குடும்பத்தினராலும், முருகன் விக்கிரகம் திரு. சி. கந்தையா குடும்பத்தினராலும் வழங்கப்பட்டன. இன்னும் பல ஆலயபௌதீகவள தேவைகள் பலராலும் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. வயல்காணிகளாக ஒவ்வொரு ஏக்கர் நிலத்தை திரு. செ. விநாயகமூர்த்தி குடும்பத்தினரும், திரு. மா. கனகசிங்கம் குடும்பத்தினரும் வழங்கியுள்ளனர். பலர் மாடுகளையும், நிதியுதவியும், சரீர உதவிகளையும் காலம் காலமாக வழங்கி ஆலய வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள்.

இக்கிராம ஏனைய வழிபாடுகளாக முக்கியம் பெறுபவை கொம்பு விளையாட்டு, ஐயனார், நாவன்மார், வன்னித்தம்பிரான், அம்மன், நாகதம்பிரான், மோராண்டகுள பிள்ளையார், தங்கபுர தங்கவிநாயகர், சிறினிவாசபுர கற்பகவிநாயகர், கிராண் குளக்கட்டிலுள்ள அம்மன் பிள்ளையார் மற்றும் இத்திக்குள பிள்ளையார் போன்ற ஆலயங்களும் எம்மவரின் வழிபாடுகளாகவுள்ளன.

தங்கபுரத்தில் 1986களின் பின்னர் நாகம்பாள் ஆலயம் பொதுமக்கள் உதவியுடன் திரு. சிவலிங்கம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வைகாசி பௌர்ணமியில் விசேட பொங்கல்விழா இடம்பெறுகிறது. பல கிராமத்து மக்களும் இதில் கலந்து வழிபடுவார்கள்.

1960களில் ஆலய நிர்வாகமுறையில் சலவைத் தொழிலாளிக்கும் திருவிழாக்கள் வழங்கப்பட்டிருந்தன. அனைவரையும் ஒரேகுடும்பமாக மதிக்கும் பண்பும் கோயில்களின் வண்ணக்கர்கள், கங்காணம் முதல் அடப்பன், மணியகாரன் என்ற முறைகளால் விழாக்காலங்களில் ஏற்படும் சர்ச்சைகளில் இருந்து விடுபட தியாக சிந்தையோடும், விட்டுக் கொடுப்புகளோடும் மூத்தோரின் வழிகாட்டலோடும், 10 குடிகளுக்கும் சமமாக தலைவராகவும் எனைய பொறுப்பான பதவிகளை வழங்கும் வாய்ப்புக் கிடைத்து ஒவ்வொருவரும் சிறப்பாகத் தமது பதவிக்காலத்தில் ஆலயத்தை நிர்வகித்து வருவதும் எல்லாவிடயங்களிலும் எல்லோரும் ஒத்துழைத்து ஒரே குடும்பமாகச் செயற்பட்டு வரும் பாங்கு, இப்பிரதேசத்திற்கு ஒரு முன்மாதிரியானது எனக் கூறுவதில் பெருமையடைவதோடு எதிர்காலச் சந்ததியினரும் இப்பாரம்பரியத்தை மதித்து மனித நேயம் தொடர்ந்து வாழ, கிராமம் ஒற்றுமையில் சிறக்க தியாக, தியான பக்தியுணர்வோடு நீடூழி வாழ சித்திவிநாயகர் அருள்பாலிப்பார்.