நிறுவனம்:தம்பலகாமம் பட்டிமேட்டுச் சிந்தாமணி விநாயகர்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:09, 27 பெப்ரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=தம்பலகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பலகாமம் பட்டிமேட்டுச் சிந்தாமணி விநாயகர்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் தம்பலகாமம்
முகவரி தம்பலகாமம் பட்டிமேட்டுச் சிந்தாமணி விநாயகர், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


செந்நெற்கழனிகள் பலசூழ்ந்து விளங்கத் தம்பலகாமத்தின் எழில் மிகு மேடுகள், திடல்களுள் சிறந்து விளங்கும் பட்டிமேட்டில் ஆலமரத்தடியில் வீற்றிருந்து அடியார்களின் அல்லல் களைந்து வருபவர் இவர். பட்டிமேட்டில் சிறந்த சிவபக்தராய் விளங்கியவர் சுப்பிரமணிய உடையார். தம்பைநகர் வளர் ஹம்சகமனாம்பிகா தேவி சமேத கோணேசரை உதயத்தில் தரிசித்து வந்தே அன்றாட விடயங்களைக் சுப்பிரமணிய உடையார் மேற்கொள்பவர்.

பெரியம்மை கொடுநோய் திருகோணமலையில் தலைவிரித்தாடிய காலமது. தம்பலகாமமும் அதற்கு விதிவிலக்காயமையவில்லை. ஒரு திடலில் இருந்து மற்றோர் திடலுக்கு செல்லுவதோ அல்லது ஒரு மேட்டில் இருந்து மற்றோர்மேட்டிற்கு செல்லுவதோ தடைசெய்யப்பட்டது. குடியிருப்புக்குச் சுவாமி தரிசனத்திற்கு சென்று வந்த சுப்பிரமணிய உடையாரது நித்திய கர்மானுஷ்டானம் தடைப்பட்டது. ஆலடியில் எழுந்திருந்த விநாயகன் ஆதரவளித்தான்.

கோணேசரது தரிசனத்தை செய்ய முடியாது வருந்திய சுப்பிரமணிய உடையாருக்கு ஆலடியான் அருள் சுரந்தான். தங்கம்மா நமசிவாயம் சுப்பிரமணிய உடையாரது தமக்கையார் ஆலடியானுக்கு ஆலயம் அமைக்க முற்பட்டார். இவர் தான் தம்பலகாமம் கோணேசர் ஆலயத்திற்கு கொடித் தம்பம் தாம்பரத்திலிருந்து திருப்பணி செய்து கொடுத்தவர். செங்கற் திருப்பணி ஆரம்பமானது. ஆலமரத்தடியில் அமைந்த விநாயகர் செங்கல் திருப்பணியாலான ஆலயத்தினுள் எழுந்தருளினார். அழகுற ஆலயம் அமைந்தது. உடையார் குடும்பத்தாருடன், வைராவியர் குடும்பமும், தோம்பர் குடும்பமும் உறவுமுறையால் இணைந்தது போல் திருப்பணியிலும் ஒன்றிணைந்து அர்த்த மண்டபம், மகா மண்டபம் கொண்ட ஆலயம் தோன்றியது. ஆலடிப் பிள்ளையார் பிள்ளையாரானார்.

1933ஆம் ஆண்டு மூலஸ்தானம் இடிபாடு கொண்டு காணப்பட்டது. தங்கம்மா நமசிவாயம் கற்பணி ஆரம்பித்து கற்பக்கிரகமமைத்தார். 1933 இல் தைத்திங்கள் புனர் பூச நன்நாளில் விநாயகனுக்கு கும்பாபிஷேகம் கண்டனர். பிரம்மஸ்ரீ இ. ஞானசேகர குருக்கள் திருகோணமலை விஸ்வநாதர் ஆலய அர்ச்சகர் அவர்களால் கும்பாபிஷேகத் திருப்பணி நிறைவுற்றது.

1933 ஆம் ஆண்டு ஆரம்பமான அலங்கார உற்சவம் தொடர்ந்து 10 வருடங்கள் நடைபெற்று வந்தது.1942இல் தைத்திங்கள் தங்கம்மா நமசிவாயம் தனது 105ம் வயதில் உயிர் நீங்க, இரண்டாம் உலகயுத்த குண்டு தாக்குதலோடு உற்சவம் நின்றுவிட்டது. மீண்டும் சில காலங்களின் பின் புனருத்தாரண கும்பாபிஷேகத்தை மயில்வாகன குருக்கள் மகன் சிவஸ்ரீ சிவசுப்பிரமணியக்குருக்கள் மூலம் நிறைவு செய்தார். 1977ஆம் வருடம் திருகோணமலை பிரம்மஸ்ரீ தி. சிவசுப்பிரமணியக் குருக்கள் மூலம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 1978ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் சித்திரை நன்நாளில் மீண்டுமோர் கும்பாபிஷேகம் இடம்பெற்றது. சுன்னாகம் பிரம்மஸ்ரீ சர்வேஸ்வரக் குருக்களது தலைமையில் பஞ்சகுண்டங்கள் அமைத்து கும்பாபிஷேகம் இடம்பெற்றது. 1933ம் ஆண்டும், 1948ஆம் ஆண்டும் ஏக குண்டங்கள் கொண்ட மகா கும்பாபிஷேகங்களின் பின் 1982 ஆகஸ்ட் 23ஆம் திகதி தம்பலகாமம் பட்டிமேட்டு சிந்தாமணி விநாயகன் பஞ்சகுண்டங்கள் அமைத்து கும்பாபிஷேகம் கண்டார்.

2002.03.31 மீண்டும் நான்காவது கும்பாபிஷேகம் இடம்பெற்றது.