நிறுவனம்:நிலாவெளி சித்திவிநாயகர் கோவில்
பெயர் | நிலாவெளி சித்திவிநாயகர் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | நிலாவெளி |
முகவரி | நிலாவெளி சித்திவிநாயகர் கோவில், நிலாவெளி, திருகோணமலை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
திருக்கோணமலை நகரத்தில் இருந்து பதினாறு கிலோ மீற்றர் தூரத்தில் "நிலாவெளி" என்ற சைவக் கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இப்பொழுது ஒரு பகுதியில் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் வாழ்கின்றர்கள். இக்கிராமத்தின் மத்தியில் சித்தி விநாயகர் ஆலயம் காணப்படுகின்றது.
இந்தக் கிராமத்தின் பண்டைக்கால வரலாற்றைப் பார்க்கும்போது பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரத்தோடும், பெரியகுளத்திலுள்ள நாகனார் கோவிலோடும் தொடர்புடைய சம்பவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குளக்கோட்டு மன்னன் திட்டம் பண்ணி வைத்த கோணேசர் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள "இந்துவெளி" என்ற இடமே பிற்காலத்தில் "நிலாவெளி" என்று பெயர் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. கோணேசர் ஆலயத்தில் செய்யப்படும் யாகங்கள், வேள்விகள், அன்னதானங்கள் முதலியவற்றினால் கிடைத்த "சாம்பல்" கொட்டப்பட்டு, வெண்மையான வெளியாகக் கிடந்ததால் "இந்துவெளி" எனப்பட்டதாம். இதுவே "நிலாவெளி" எனக் கூறப்படுகின்றது. நிலாவெளிக்குத் தென்மேற்குத் திசையிலுள்ள "பெரிய குளம்" என்ற இடத்தில் இராஜராஜசோழனால் கட்டப்பட்ட “நதனார்" கோவிலுக்கு நிலாவெளியிலிருந்து மாடுகள் மானியமாகக் கொடுக்கப்பட்டதாக ஒரு கல்வெட்டு நாதனார் கோவிலில் காணப்படுகின்றது.
மேலே கூறப்பட்ட இரண்டு வரலாறுகளினாலும் பன்னெடுங் காலத்திற்கு முன்பே நிலாவெளி சைவத் தமிழ்க் கிராமமாக இருந்து வந்துள்ளதென்பது புலனாகின்றது. கோணேசர்கோவில் நிர்வாகத்தை நடத்துவதற்காகக் குளக்கோட்டு மன்னனால் நியமிக்கப்பட்ட கனகசுந்தரப் பெருமாள் நிலாவெளியில் தான் இருந்ததாகவும், கோணேசர் கோவிலில் காப்புக் கட்டுதல், விழா நடத்துதல் ஆகிய பணிகளை அவர் செய்துவந்ததாகவும் கோணேசர் கல்வெட்டு கூறுகின்றது.
போத்துக்கீசரால் 1624ஆம் ஆண்டு கோணேசர் ஆலயம் அழிக்கப்பட்ட பின்பே திருக்கோணமலையைச் சூழவுள்ள கிராமங்களில் ஆலயங்கள் தோன்றியிருக்கின்றன. தற்போது சித்திவிநாயகர் கோவில் இருக்குமிடத்தில் ஓலைக்கொட்டிலால் அமைக்கப்பட்ட சிறிய ஆலயம் இருந்து வந்துள்ளது. இந்தக் கோவிலை இன்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் திரு. ஆறுமுகம் ஆழ்வாப்பிள்ளை என்பவரை தர்மகர்த்தாவாகக் கொண்டு நிலாவெளி மக்கள் கற்கோவிலாகக் கட்டினார்கள். இந்தக் கோவிலுக்கு 1908ஆம் ஆண்டு முதன்முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று தொடக்கம் இவ்வாலயம் சிறப்பாக நடத்தப்பட்டு வந்திருக்கின்றது. திரு. கயிலாயபிள்ளை கெஜரெத்தினம் என்பவருடைய முன்னோர் இவ்வாலயத்தைப் பரம்பரையாகப் பேணிப் பாதுகாத்து வந்துள்ளார்கள்.
இரண்டாவது உலக மகாயுத்தத்தினாலும் பின்னர் ஏற்பட்ட கோரப் புயலினாலும் இவ்வாலயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் கிராம மக்களின் ஊக்கத்தினாலும் திரு. கந்தப்பர் கணபதிப்பிள்ளை என்ற பெரியாருடைய தியாகம், விடாமுயற்சியினாலும் மீண்டும் திருப்பணிகள் செய்யப்பட்டு 1972ஆம் ஆண்டு இரண்டாம் முறை கும்பாபிஷேகம் நடைபெற்று ஆலயம் சிறப்புற நடத்தப்பட்டு வருகின்றது.
கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நபனமண்டபம், ஸ்தம்பமண்டபம், யாகசாலை, பாகசாலை, களஞ்சியம் என்பனவற்றைச் சாஸ்திர ரீதியாகக் கொண்டு அமைக்கப்பட்ட சிறந்த ஆலயமாகக் காணப்படுகின்றது. கருவறையில் விநாயகப் பெருமானுடைய விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. மகாமண்டபத்தில் விநாயகர், சந்திரசேகரர், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர் முதலிய எழுந்தருளி விக்கிரகங்கள் இருக்கின்றன. வைரவருக்கும், சண்டேஸ்வரருக்கும் தனிக் கோவில்கள் உண்டு. மணிக்கோபுரமும் கட்டியிருக்கின்றார்கள். உச்சிக் காலம், மாலைச்சந்தியாகிய நித்திய பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தில் திருவிழா ஆரம்பமாகிப் பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. ஆவணிச்சதுர்த்தி, பிள்ளையார் கதை, கந்தசஷ்டி, திருவெம்பாவை, திருக்கார்த்திகை, சிவராத்திரி முதலிய விசேட காலங்களில், சிறப்புப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாலயத்திற்கு வன்னிமரம் தலவிருட்சமாக இருந்து வருகின்றது. இவ்வாலயத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் சைவக் குருக்கள் பரம்பரையே பூசை செய்துகொண்டு வருகின்றது. அதற்குமுன் பிராமணர்கள் பூசை செய்து வந்தார்களாம். சமீபகாலத்தில் பூசை செய்துகொண்டிருந்த சிவஸ்ரீ ம. சண்முகக் குருக்களுக்குப் பின் இப்பொழுது ஸ்ரீ இ. இரத்தினேஸ்வரக் குருக்கள் பூசைசெய்து வருகின்றார்.