நிறுவனம்:குச்சவெளி சித்திவிநாயகர் கோவில்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:25, 18 செப்டம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=குச்சவெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குச்சவெளி சித்திவிநாயகர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் குச்சவெளி
முகவரி குச்சவெளி சித்திவிநாயகர் கோவில், குச்சவெளி, திருகோணமலை
தொலைபேசி 0778153882/0761496637
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருக்கோணமலை மாவட்டத்தில் கட்டுக்குளம் பற்றில், திருக்கோணமலைப் பட்டினத்திலிருந்து நாட்பது கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சைவத் தமிழ்க் கிராமம் குச்சவெளி. குளக்கோட்டு மன்னன் கோணேசர் கோவிலைக் கட்டித் திருப்பணியை நிறைவேற்றியபின் கோணேசர் கோவில் தொண்டுகளுக்காகக் குச்சவெளியில் மக்களைக் குடியேற்றினான். அவர்கள் அங்கிருந்து தர்ப்பைப் புல்லில் "கூர்ச்சம் செய்து கோவிலுக்கு அனுப்பி வந்தார்கள். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியாகும். கூர்ச்சம் செய்து அனுப்பிவந்த மக்கள் வாழ்ந்தமையால், கூர்ச்சவெளி என்பது காலக்கிரமத்தில் குச்சவெளியென்று பெயர்மாற்றம் ஏற்பட்டதாகப் பெரியோர்கன் கூறுகின்றார்கள். இங்கிருக்கும் சித்திவிநாயகர் ஆலயத்தை மத்தியாகக் கொண்டு நாச்சியார்மலை, வெள்ளாட்டிமலை, செம்பிமலை, கன்னிபாய்ந்தமலை, பறையன்கல்மடுமலை, நடுவுமலை, பெரியமலை எனப் பல மலைகளும், பிராமணமடு, சின்னக் குருப்பிட்டிக் குளம், பெரிய குருப்பிட்டிக் குளம், பறையன் கல்மடு, அட்டமடு, காக்கயன் நெடுங்கேணி எனப் பல குளங்களும் காணப்படுகின்றன.

இங்கு குச்சவெளி போலீசுக்கு முன்னால் அமைந்துள்ள வீதியில் குச்சவெளி சித்திவிநாயகர் கோவில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. கடற்கரையை அடுத்துள்ள இந்தக் கிராமத்தில் வாழும் மக்களின் முக்கிய தொழில் விவசாயம். பண்டைக் காலத்தில் விவசாய விளை நிலங்களைச் சுற்றிக் காடுகள் நிறைந்திருந்தன. அந்தக் காட்டில் வேடர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் காடுகளில் தேன் எடுத்தும், கிழங்குகள் கிண்டியெடுத்தும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் ஒரு வேடன் அல்லைக் கிளங்கு கிண்டும்போது நிலத்தினடியில் ஒரு கல்லில் ஆயுதம் பட்டு அக்கல்லிலிருந்து இரத்தம் சொட்டுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தான். இந்த அதிசயத்தை அக்காலத்தில் அந்தக் கிராமத்தின் பெரிய தலைமைக்காரராயிருந்த சந்தநாதர் என்பவரிடம் வந்து கூறினான். அவர் உதவிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு போய் நிலத்தை அகழ்வித்தபோது ஒரு பிள்ளையார் திருவுருவம் கிடைத்தது. அதன் புயத்திலிருந்து இரத்தம் சுரந்துகொண்டிருந்ததாம். அந்த பிள்ளையாரைப் பயபக்தியோடு மங்கலவாத்தியங்கள் ஒலிக்க எழுந்தருளச் செய்து குச்சவெளி மக்கள் குடியிருக்கும் இடத்தில் அரசமரத்தடியில் வைத்துப் பூசை செய்வித்து வந்தார். சுமார் இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் இது நிகழ்ந்ததாக முதியவர்கள் கூறுகின்றார்கள். இந்த அரசமரம் இன்றும் இருக்கின்றது.

சந்தநாதர் காலத்தில் மண்சுவர் வைத்துக் கட்டப்பட்டு ஓலையால் வேய்ந்த கோவிலில் இருந்த பிள்ளையாரைப் பய பக்தியோடு மக்கள் வழிபட்டு வந்தார்கள். மக்களுடைய பக்தி விஸ்வாசத்திற்கேற்பப் பிள்ளையாரும் அருள்புரிந்து வந்தார். நினைத்த காரியங்கள் நிறைவேறின. நோய்கள் நீங்கின. இத்தகைய அருட்செயலால் பக்தி பெருகவே திரு. காசிநாதர் என்பவருடைய காலத்தில் இவ்வாலயம் கற்கோவிலாகக் கட்டப்பட்டது. இப்பொழுது இந்தப் பரம்பரையின் எட்டாவது தலைமுறையினரின் பராபரிப்பில் இவ்வாலயம் இருந்துவருகின்றது. கதிர்காமர், கறுவல்தம்பி, கார்த்திகேசு, வேலுப்பிள்ளை என்பவர்கள் முறையே மணியகாரர்களாயிருந்து பராபரித்து வந்த, இந்தக் கோவிலில் 1944ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1990களில் கும்பாபிஷேகம் இடம்பெற்று, இப்போது பாலஸ்தாபனம் செய்து கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று, 03.09.2023 இறுதியாக கும்பாபிஷேகம் பரிபாலனசபை மூலம் இடம்பெற்றுள்ளது.

சித்திவிநாயகர் கோவிலில் உச்சிக்காலம், மாலைச்சந்தியாகிய இரண்டுகால பூசைகளும், கும்பாபிஷேக தினத்தை முதல் நாளாகக்கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், பிள்ளையார்கதை, கந்தசஷ்டி, திருவாதிரை, ஆவணிச் சதுர்த்தி, சிவராத்திரி, சித்திராபூரணை முதலிய விசேட பூசைகளும் நடைபெற்று வருகின்றன. கந்த புராணப் படிப்பும் இங்கு நடைபெறுகின்றது. இவ்வாலயத்தில் பிராமணக் குருக்களும், சைவக் குருக்களும் பூசை செய்து வந்திருக்கின்றார்கள். 'அல்லைக் கிளங்கின் அடிமுடி கண்டோர் கல்லைப் பிளக்கும் வல்லவராவர்" என்பது இவ் வாலயத்தின் தாரக மந்திரமாக மக்களுடைய வாயில் ஒலிப்பதைக் கேட்கக்கூடியதாயிருந்து வருகின்றது. இந்த ஆலயத்திற்கும், குச்சவெளி செம்பிமலை சிவன் ஆலயத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டு வந்துள்ளன.

தற்பொழுது ஆலயம் கும்பாபிஷேகம் கண்டு அழகாக காட்சியளிக்கின்றது. மேலும், கண்ணகி, நாகதம்பிரான் ஆலயங்கள் ஆலய வெளி வீதியில் அமைக்கப்பட்டுள்ளன.