நிறுவனம்:வெள்ளை வில்வபத்திரிக் கோணேசர் கோவில்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:19, 18 செப்டம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=வெள்ளை வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வெள்ளை வில்வபத்திரிக் கோணேசர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருக்கோணமலை
ஊர் திருக்கோணமலை
முகவரி வெள்ளை வில்வபத்திரிக் கோணேசர் கோவில், திருக்கோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருக்கோணமலை நகரில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 3 Km தூரத்திற்குள் காணப்படும் இன்னொரு கோணேஸ்வரர் ஆலயம் இதுவாகும். இவ்வாலயம் திருக்கோணமலைப் நகரில், மின்சார நிலைய வீதியில் உள்ளது. ஆலயம் சிதைந்த நிலையிலிருந்து, தற்பொழுது மீள் புனரமைக்கப்பட்டு, அழகாக உள்ளது. இங்குள்ள திருவுருவங்கள் இவ்வாலயத்தின் பண்டைக்காலச் சிறப்பைக் கூறும் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. சோழர் காலச் சிற்பமுறையிலமைக்கப்பட்ட இத் திருவுருவங்கள் பின்னப்பட்டிருந்த போதிலும் ஆலயம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுப் பெருமையுடையது என்பதைத் துணிந்து கூறலாம்.

"கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணேஸ்வரம்" என்று திருஞானசம்பந்தர் பாடியருளிய கோணேஸ்வரத்தில், சோழவம் சத்தவனாகிய குளக்கோட்டு மன்னன் திருப்பணிகள் செய்து நிறைவேற்றிய காலத்தில் கோணேசப் பெருமானுக்குப் பெருவிழா எடுத்த வரலாறு கோணேசர் கல்வெட்டில் கூறப்பட்டிருக்கின்றது. கோணேசப் பெருமானுடைய மகோற்சவ முடிவில் பெருமான் நகர்வலம் வருவதாகவும், அப்போது கோணேசப் பெருமான் இவ்வாலயத்தில் ஒரு நாள் தங்கிச்செல்வதாகவும், இந்த ஆலயத்திற்கு முன்பக்கமிருந்த குளத்திற்குக் கோணேசப்பெருமான் தெப்பத் திருவிழாவுக்காக எழுந்தருளுவதாகவும் கர்ணபரம்பரையாகப் பேசப்பட்டு வருகின்றது. இக்காரணத்தினாலும், இவ் வாலயத்தைச் சுற்றி வெள்ளை வில்வமரங்களிருந்ததாலும், இவ்வாலயத்திற்கு வெள்ளை வில்வம் கோணேசர் கோவில் எனப் பெயர் அமைந்தது.

இன்னொரு வரலாற்றில், ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த திருக்கோணேஸ்வர கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக் குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான். தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப் பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில் என அழைக்கப்பட்டது எனப்படுகின்றது.

பிரித்தானியப் படைவீரராயிருந்த இந்திய முஸ்லீம்கள் “பஞ்சா" என்றொரு விழாவை வருடாவருடம் நடத்தி வந்தார்கள். அவர்கள் விழாமுடிவில் முக்கோண வடிவத்தில் அமைந்த அந்தப் “பஞ்சா" என்ற உருவத்தை இந்தக் குளத்தி விட்டு விழாவை நிறைவேற்றுவார்களாம். குளத்திற்குச் சமீபத்தில் ஒரு பள்ளிவாசலுமுண்டு. இதனால் இக்குளத்தைப் பிற்காலத்தில் தக்கியாக் குளம் என்று கூறி வந்தார்கள்.

1624 இல் போத்துக்கீசர் கோணேசர் கோவிலை இடித்தழித்தபின் கோணேசருடைய பெருவிழா நடைபெறாதபடியால் இவ்வாலயமும், குளமும் பராபரிப்பற்றுக் கைவிடப்பட்டிருந்தது. திரவியம் சேர்க்கும் பேராசையினால் போத்துக்கீசர் இவ்வாலயத்தையும் அழித்திருக்கலாம். பிரித்தானியராட்சிக் காலத்தில் தக்கியாக் குளத்தில் அவர்கள் தங்கள் குதிரைகளைக் கழுவிவந்தார்கள். அதனால் இக்குளம் "குதிரைக்குண்டு" என்ற பெயரோடிருந்ததாக திருக்கோணமலைக் கச்சேரியில் ஒரு பதிவேடு இருந்துள்ளது. பின்னர் அந்தக் குளம் தூர்க்கப்பட்டு அதன் ஒரு பகுதியில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இப்பொழுது குளம் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் அந்த பகுதியில் இல்லை.

பின்னர் சிலர் ஆலயத்தை துப்பரவு செய்து முன்பக்கத்தில் கிடுகினால் வேய்ந்த மண்டபமமைத்து பராமரித்து வந்துள்ளார்கள். திரு. செல்லையா என்பவர் ஊக்கமாக உழைத்து, ஆலயத்தை பராமரித்துள்ளார். அவருக்குப்பின் அவருடைய மகன் திரு. செ. சிவசோதிராசா என்பவர் பராமரித்து வந்துள்ளார். செங்கற்களால் கட்டப்பட்ட தாக்கமான வரிகளைக் கொண்ட கற்பக்கிரகமும், அர்த்த மண்டபமும் சிதைந்த சுவர் நிலையில் காணப்பட்டுள்ளது. கருவறையில் ஆவுடையார் இல்லாமல் சிவலிங்கம் மாத்திரம் இருந்துள்ளது. லிங்கத்தின் பிரம்மபாகம் சதுரப்பட்டமாயும், விஷ்ணு பாகம் எட்டுப்பட்டங் கொண்டதாயும், சிவபாகம் உருளைவடிவாகவும் அற்புதமான அமைப்போடு காணப்படுகின்றது.

ஆலயத்துள் கல் வெட்டொன்று பாதி உடைந்த நிலையில் இருக்கின்றது. அர்த்தமண்டபத்தில் பின்னப்பட்ட நிலையில் தெட்சணாமூர்த்தியும், அம்பாளும், நந்தி, பலிபீடமும் காணப்படுகின்றது. சிதைந்த கற்தூண்களுமுண்டு. சிவலிங்கம் பதினெட்டு அங்குலம் உயரமானது.

இப்பொழுது இந்த ஆலயம் அன்றாட பராமரிப்புடன், நித்திய பூசைகளுடன் காணப்படுகின்றது. ஆலயத்தின் அருகில் கிறிஸ்தவ மயானம் உள்ளது.