நிறுவனம்:அன்புவழிபுரம் ஞான வைரவர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:15, 18 செப்டம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=அன்புவழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்புவழிபுரம் ஞான வைரவர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் அன்புவழிபுரம்
முகவரி அன்புவழிபுரம் ஞான வைரவர் ஆலயம், அன்புவெளிபுரம், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் --
வலைத்தளம் -

திருக்கோணமலை அன்புவழிபுரம் பகுதியில் அமைந்துள்ள நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஒரு ஆலயம், அன்புவழிபுரம் ஞான வைரவர் ஆலயம் ஆகும். இது 1958 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த குன்றக்குடி ஆதினக் குரு மகாசன்னிதானம் குன்றக்குடி அடிகளாரால் வைரவர் சூலம் ஒன்று வைக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம் ஆகும். இதே தினத்தில் குறித்த பகுதிக்கு "அன்புவல்லிபுரம்" என பெயர் குன்றக்குடி அடிகளார் வைக்கப்பட்டது.

அந்தக் காலத்தில் திருக்கோணமலை நகரின் வடக்கே செல்வநாயகபுரம் பகுதிக்கும் கஞ்சிமடம் பகுதிக்கும் இடையில் இடையில் காணப்பட்ட காட்டுப் பகுதியில் "தட்டக்கை தெரு" எனும் ஒற்றையடி பாதையில் "திருக்கொட்டான்" என்ற வேடன் வசித்து வந்துள்ளார். அந்த வேடனின் வீட்டுக்கு முன்னால் சைவத்தமிழ் கிராமம் ஒன்றை நிறுவும் நோக்குடன் குன்றக்குடி அடிகளாரால் வேல் குற்றப்பட்டு "அன்புவல்லிபுரம்" ஞானவைரவர் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டது. குறித்த பகுதி சைவத்தமிழ் கிராமமாக எழுச்சி பெற ஆரம்பித்தது. அதன் பின்பு அவரால் ஸ்தாபிக்கப்பட்ட சூலத்தை மக்கள் கொட்டில் கட்டி வழிபட்டு வந்தார்கள். இக்கோயிலை கற்கோயிலாக அமைப்பதற்கு 1969ஆம் ஆண்டு தொடக்கம் திருப்பணி வேலைகளை சிறிது சிறிதாகச் செய்து வந்தார்கள். மக்களுடைய வசதியீனம் காரணமாக திருக்கோயில் அமைக்கும் வேலை தாமதப்பட்டுக்கொண்டு வந்தது. இதன் பின்னரே, இந்த ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் அன்புவழிபுரம் மாதர் சங்கத்தின் விடா முயற்சியால் 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதனுடன் ஆலயம் மெல்ல மெல்ல எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது. ஆலயத்தின் கிழக்கே ஒரு குளம் காணப்படுகின்றது. 'மேற்கிலும், வடக்கிலும்" மலைகளால் குழப்பட்ட இயற்கைச் சூழல், இவ் வாலயத்தின் நினைவை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றது.

இரண்டாவது கும்பாபிஷேகம் ஆலய நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டு நிர்வாகத்தின் ஊடாக இடம் பெற்றது. அருளானந்தம் பூசகரின் பங்கு ஆலயத்தின் வளர்ச்சியில் அதிகம் காணப்பட்டுள்ளது. இவர் ஆலயத்தில் ஊதியம் இன்றி சேவையாற்றியதுடன், ஆலயத்தை பாதுகாத்து, வளர்ச்சியடைய செய்துள்ளார். பின்னர் 2023ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் நான்காம் திகதி மூன்றாவது கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக புதிய ஆலயம் அமைக்கப்பட்டு இடம்பெற்றுள்ளது.

இந்த ஆலயத்தினதும், அன்புவழிபுரம் கிராமத்தினதும் வளர்ச்சியில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ராஜவரோதயம் அவர்களின் பங்கு பாரிய அளவில் இருந்துள்ளது. 75 தமிழ் சைவ குடும்பங்களுடன் குறித்த கிராமத்தின் எழுச்சியில் திருக்கோணமலையின் சேவையாளர் தொண்டர் ஐயாவின் பங்கும் காணப்பட்டுள்ளது. இன்று அன்புவழிபுரம் ஞானவைரவர் ஆலயம் தனது மூன்றாவது கும்பாபிஷேகத்தை கண்டு சிறப்பாக விருத்தி அடைந்து காணப்படுவதுடன், ஆலயம் ஸ்தாபிக்கப்பட்ட போது வைக்கப்பட்ட வைரவர் சூலம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

மேலும் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிறுத்த மண்டபம், வசந்த மண்டபங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் கருவறையில் இரண்டரை அடி வைரவர் மூர்த்தியும், வசந்த மண்டபத்தில் இரண்டடி உயரமான உலோகத்தால் செய்யப்பட்ட வைரவர் மூர்த்தியும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் நித்திய பூஜையும், வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விசேட பூஜைகளும் நடைப்பெற்று வருகின்றன. கும்பாபிஷேக தினத்தை ஆரம்பமாகக் கொண்டு பத்து நாட்களுக்கு அலங்கார உற்சவமும் நடைபெறுகின்றது. நவராத்திரி, திருவெம்பாவை முதலிய விஷேட காலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. வைகாசி பொங்கல் தினம் இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். பொங்கலை அடுத்து தீப்பாளம், தூக்குக்காவடி போன்ற மிக அற்புதமான தெய்வீகத் தன்மைகளும் இங்கு நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆலயத்தைப் பராமரிக்கும் பரிபாலன சபையில் பெண்களும் பங்குபற்றி தொண்டாற்றுவது போற்றத்தக்கதே, கோணேஸ்வரார் பெருமானுடைய நகர்வலம் நடைபெறும்போது இந்தக் கோவிலுக்கும் பெருமான் எழுந்தருளுவார். அப்போது இங்குள்ள மக்கள் இவ்வாலயத்தில் கோணேசப் பெருமானை பக்தியோடு வரவேற்று வழிபாடு செய்து பெரு கொண்டாடுவார்கள். வைரப் விழாவாகக் பெருமான் ஆண்டுக்கொரு முறை கிராம வலமும், அம்பாள் ஆண்டுக்கொரு முறை கிராம வலமும் வந்து மக்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.