ஆளுமை:ஜதீந்திரா, ஆரியபால

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:53, 28 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஆரியபால ஜதீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆரியபால ஜதீந்திரா
தந்தை ஆரியபால
தாய் -
பிறப்பு 07.06.1976
இறப்பு -
ஊர் திருக்கோணமலை
வகை அரசியல் ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருக்கோணமலையை சேர்ந்த திறன்மிக்க அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர் திரு. ஆ. ஜதீந்திரா ஆவார். இவர் 07.06.1976 திகதி தம்பலகாமம் புதுகுடியிருப்பில் ஆரியபால என்பவரின் மகனாக பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை ககுளக்கோட்டன் வித்தியாலயத்திலும், பின்னர் இடம்பெயர்வுக்கு உட்பட்டு ஆலங்கேணி மகா வித்தியாலயத்திலும், தனது உயர் கல்வியை திருக்கோணமலை இராமகிருஷ்ண மிஷன் இந்துக் கல்லூரியிலும் கற்றார். இவர் தனது கல்வி காலப்பகுதியில் அரசியல், தத்துவம் போன்ற துறைகளில் அதிக ஆற்றல் பெற்றிருந்ததுடன், சுட்டிக்காட்டி கதைக்கும் திறன் கொண்டவர் ஆவார். முரண்பாட்டு முகாமைத்துவம், சர்வதேச உறவுகள் போன்ற துறைகளில் கற்ற ஜதீந்திரா, தனது முதுமாணிக் கல்வியை கம்போடியாவிலுள்ள பன்ஸ்ரா பல்கலைக்கழகத்தில் முரண்பாடு, சர்வதேச உறவுகளை கையாளுதல் துறையில் பெற்றார். இவர் தீவிர வாசிப்பாளர் ஆவார். இலக்கியதுறையில் நாட்டம் கொண்டிருந்ததுடன், பல்வேறுபட்ட புத்தகங்களை வாசித்து தனது அறிவை விருத்தி செய்து கொண்டார்.

மேலும் ஆரம்ப காலத்தில் இருந்தே இடதுசாரி கருத்தியலில் ஆர்வம் காட்டிய இவர், 1997 ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்தார். இலக்கியத்துறையில் விமர்சனங்கள், சிறுகதை, கவிதை, சினிமா பல்வேறு கட்டுரைகளை எழுதி ஞானம், வெளிச்சம், பிரான்சில் இருந்து வெளியாகும் தமிழ் இணையத்திலும் வெளியிட்டார். மேலும் திருக்கோணமலை கலை இலக்கிய செயற்பாடுகளிலும் போதிய அளவு பங்களிப்புகளை செய்து வந்தார். தராக்கி என அழைக்கப்படும் டி. சிவராம் அவர்களின் எழுத்துகளில் கவரப்பட்டு அரசியல் விடயங்களில் அதிக ஆர்வம் செலுத்தினார்.

"யுத்த நிறுத்தத்தின் எதிர்காலம்?" என்ற கட்டுரை வாயிலாக 2005 ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் களம் இறங்கினார். இவரது கட்டுரைகள் தினக்குரல் பத்திரிகையில் தொடர்ச்சியாக புதிய பண்பாட்டில் என்ற பகுதியில் வெளியாகி வந்தன. இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பொங்கு தமிழிலும், பிரான்சிலிருந்து வெளியாகும் புதினப்பலகையிலும், கொழும்பிலிருந்து வெளியாகும் மாற்றம் இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டு வந்துள்ளது. இவரது விமர்சனங்களுக்காக இவர் மீதான விமர்சனங்களும் பலமுறை ஏற்பட்டுள்ளதுடன், காலச்சுவடு என்ற தமிழ்நாட்டில் இருந்து வரும் முன்னணி சஞ்சிகையில் 2012ல் "இந்தியா புலிகளை அழித்ததா?", "நோர்வே அறிக்கை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு", துரோகி, ஈழ அரசியலின் ஒரு பூமராங் என்ற இவரது கட்டுரைகளால் இந்தியாவில் தொடர்ச்சியாக எழுத முடியாத நிலையும் இவருக்கு ஏற்பட்டது.

இந்தியாவில் "சாளரம்" என்ற வெளியீட்டில் இவர் எழுதிய "காலத்துயரும் காலத்தின் சாட்சியும்" என்ற கட்டுரை 2010ல் வெளிவந்தது. மேலும் பல இணையதளங்களிலும், அம்பலம், தினக்குரல் போன்ற இதழ்களிலும் கட்டுரைகள் எழுதி வந்ததுடன், எந்தக் கருத்தையும் சொல்ல தயங்காத ஒருவராக செயற்பட்டு வந்துள்ளார். மேலும் இவர் இலங்கையின் அரசியல் சூழலிலும், புலம்பெயர் சமூக சூழலிலும் தனது ஆய்வுக் கட்டுரைகள் மூலம் பேசப்படும் ஒரு நபராக காணப்படுகின்றார். "ஏற்றமிகு இளைஞன்" என்ற கௌரவ விருதை 2013 கம்பன் கழகம் வழங்கி கௌரவித்தது. மேலும் 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய இவர், "சமூக அபிவிருத்தி ஆய்வு நிலையம்" என்ற பெயரில் அரசு சாராத நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதுடன், மனித உரிமைகள், சிவில் சமூக வலுவூட்டல் போன்ற சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார். மேலும் இவர் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக அரசியலிலும் 2015 பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கினார். இவ்வாறு விமர்சன அரசியலில் தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் திருக்கோணமலையைச் சேர்ந்த ஆளுமைகளில் இவர் ஒருவராவார்.