நிறுவனம்:திரு/ மடத்தடி, வீரகத்திப்பிள்ளையார் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:10, 12 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மடத்தடி, வீரகத்திப்பிள்ளையார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் இந்து ஆலயங்கள்
ஊர் திருக்கோணமலை நகரம்
முகவரி வீரகத்திப்பிள்ளையார் ஆலயம், மடத்தடி, திருக்கோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருகோணமலை நகரில் கதிர்காமத்தம்பி முதலியார் அவர்களால் விஸ்வநாத சுவாமி சிவன் கோயில் கட்டப்பட்டதாகவும், அவரது வழியில் பேரன் பெரிய இராசகோன் முதலியார் 1650 இல் நகரின் மத்தியில் மடத்தடி என அழைக்கப்படும் இடத்தில் தனக்கு சொந்தமான 3 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிறிய பிள்ளையார் ஆலயத்தையும் கட்டினார். அவ்வாலயம் “வீரகத்திப்பிள்ளையார் “ என்று அழைக்கப்படும். பெரிய இராசகோன் பரம்பரை வழியாக குலசேகர முதலியார், அளகைச்கோன் வேலுப்பிள்ளை என்பவர்கள் இக்கோயிலை பராமரித்து வந்தார்கள்.

1801 ஆம் ஆண்டளவில் வேலுப்பிள்ளை அகிலேசபிள்ளை, சுவாமிநாதர் பரம்பரையில் வந்த வீரகத்தி இராசகோன் முதலியார் என்பவரும் சேர்ந்து ஊர் தருமங்களுடனும் கற்பகக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஸ்நபன மண்டபம், ஸ்தம்ப மண்டபபம், சுற்றுமதில், மடைப்பள்ளி, களஞ்சியம், யாகசாலை, வாகன சாலை என்பனவும் வடக்கு வீதியில் குருக்கள் பிராமணருக்கு அக்கிரகாரமும் சங்கமர் இருக்க வீடுகளும், கோயில் பணிவிடையாளர்களுக்கு வீடுகளும், கிணறுகளும் கட்டியதுடன் ஆலயங்களுக்கு தேரும் பொன், வெள்ளி நகைகளும் சேர்த்து ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. அக்காலத்தில் ஆலயத்தில் இரண்டு கால பூஜைகள் நடைபெற்றது.

1878ஆம் ஆண்டு அ. வேலுப்பிள்ளை என்பவரின் மறைவிற்கு பின் அவருடைய மகன் திரு. வே. அகிலேசபிள்ளை (திருக்கோணேசர் வைபவம் எழுதியவர்) பராமரித்து வந்தார்கள். 1910ஆம் ஆண்டில் அகிலேச பிள்ளையின் மூத்த மகன் இராசகோன், மயில்வாகன முதலியர், சுப்ரமணியம் என்பவரும் இணைந்து ஆலயத்தை பராமரித்து வந்தார்கள்.

திரு. அ. இராசகோன் அவர்கள் அரசாங்க உத்தியோத்தில் இருந்தமையால் ஆலயப் பரிபாலனத்தை முழுமையாக ஏற்று நடத்த முடியவில்லை. தனது சகோதரன் அ. அழகைக்கோன் என்பவருடன் திரு. ம. மு. சுப்ரமணியம் அவர்களும் இணைந்து ஆலயத்தை பராமரித்து வந்தார்கள். இவர்களுடைய காலத்தில் 1942 மாசி மாதம் 06ம் திகதி நவக்கிரக கோயில் கட்டி விக்கிரககங்கள் பிரதிஸ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்திற்கு இரண்டு வீதிகளும் அமைக்கப்பட்டு இருந்தது. இவ்வாலயத்திற்கு வடக்கே தீர்த்த குளமும் இருந்தது. ஆலயவெளி மீது தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை யாவரும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

ஆவணி சதுர்த்தி திதியில் கொடியேற்றப்பட்டு பத்து நாட்கள் மகோற்சமும், தீர்த்தோற்சவமும் நடைபெற்று வந்நது. இக்காலத்தில் நான்குகாலப் பூஜைகள் நடைபெற்று வந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஆலய நடவடிக்கைகள் கைவிடப்பட்டு இருந்தது. இவ்வாலயத்தில் மகோற்சவம், நவராத்திரி, கந்தசஷ்டி, பெருங்கதை, திருக்கார்த்திகை, திருவம்பாவை, தைப்பூசம் என்பவற்றிற்கு விசேட அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது.

இவ்வாறு வந்த பரம்பரையில் திரு. அ. கணேசலிங்கம் அவர்கள் தனது 12 வயது முதல் ஆலய நடவடிக்கைகளில் தனது பங்கை ஆரம்பித்தார். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆலயம் அமைந்துள்ள பகுதி பல ஆக்கிரமிப்பிற்கு உள்ளானது. 1983ஆம் ஆண்டளவில் ஆலய திருத்தங்களை மேற்கொள்வதற்காக பாலஸ்தானம் செய்யப்பட்டது. ஆனால் 1983 இன்கலவரத்தில் ஆலயமும், அதனுடனிருந்த தளபாடங்களும் எரியூட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆலயம் படிப்படியாக அழிக்கப்பட்டு வந்ததுடன் நிலப்பகுதியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்தது. திரு. அ. கணேசலிங்கம் பல வழிகளிலும் ஆலயத்தைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகனை பொலிஸ், நீதிமன்றம் என்று பல வழிகளிலும் செலவு செய்தும் அவரது இலக்கை அடைய முடியவில்லை.

அதற்குப்பின் நாட்டில் ஒரு சிறிய அமைதி ஏற்பட்ட காலத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் முயற்சியுடன் திருக்கோணேஸ்வர பிரதம குருவும் இணைந்து அழிவிற்கு உள்ளான ஆலயத்தை துப்பரவு செய்து மீள் கட்டுமாணம் செய்ய முற்பட்ட வேளை அதற்கும் பல தடைகள் ஏற்பட்டதுடன் திருக்கோணேஸ்வர பிரதம குருவும் இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டரர்.

ஆலய அறங்காவலர் வழியில் வந்த திரு. சரவணபவன் கருவறைக்கு மீண்டும் அடிக்கல் நாட்டினார். ஆனால். அதுவும் தடைப்பட்டது. 32 வருடங்களின் பின் இன்று நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக திரு. கணேசலிங்கத்தின் மறைவிக்குப் பின் அவரது மகன் க. ஸ்ரீதரன் ஆலயத்தைப் பொறுப்பேற்று (17.09.2015) விநாயக சதுர்த்தி நாளிலிருந்து பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு தினமும் பூஜை நடைபெற்று வருகிறது.

ஆலயத்தை புணரமைப்பு செய்யும் நோக்கில் ஆலய திருப்பணிசபை உருவாக்கப்பட்டு 13.12.2015 காலை திருக்கோவில் புணரமைப்பு பணிக்கான வேலைகள் அங்குராப்பணம் செய்யப்பட்டுள்ளது. தொடச்சியாக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.