ஆளுமை:ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:59, 5 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஸ்ரீலஸ்ரீ ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு 1977.09.01
ஊர் திருக்கோணமலை (இந்தியா)
வகை சைவ சமய துறவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சோமேஸ்வரானந்தகிரி என்னும் சுவாமி ஒருவர் சில தசாப்தங்களுக்கு முன்னர், குச்சவெளி பிரதேசத்தில் உள்ள செம்பிமலை என்னும் பெயர் கொண்ட மலையின் உச்சியில் உள்ள புராதனகாலச் சிவன் ஆலயத்தில் சில காலங்கள் தங்கியிருந்து பூசை செய்து வந்தார். இங்கே பல்வேறு வகையான கட்டட தொல்பொருட்சின்னங்கள் காணப்படுவதன் காரணமாக தற்காலத்தில் சிவ வழிபாட்டுக்கு அதிகாரமிக்கவர்களால் அடிக்கடி தடங்கல் ஏற்படுவதுமுண்டு. அடியார்களின் நோய்கள் தீர்த்தும், பல சித்துக்கள் செய்தும், மக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கியும் வந்த இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அறியப்படுகின்றது. இந்தியாவின் காஷ்மீரில் பிறந்த இவர், தனது 11 ஆவது வயதில் தாயை விட்டுப் பிரிந்து ஒரு மகரிஷியின் துணையுடன் நாடு, நகரம், காடு, குகைகள் என பலவிடங்களிலும் திரிந்த காலத்தில் பாங்குவா என்னும் இடத்தில் வேடுவ வடிவத்தில் சிவபெருமானைச் சந்தித்தார். அவரினால் வழங்கப்பட்ட மாயமணியையும் பெற்றுக் கொண்டார்.

பின்னர் கிஷ்கிந்தா என்னுமிடத்தில் சத்திரமொன்றில் சில காலங்கள் கிருஷ்ணபகவானுடன் தங்கியிருந்து அவரது பல யாகங்களையும் கண்டு கொண்டார். பகவான் இவருக்கு ஏடு ஒன்றைக் கொடுத்து, அதிலுள்ள விபரங்கள் யாவற்றையும் விபரித்து, பின்னர் இலங்கைக்குச் சென்று அங்கு நாகராஜன் மலை இருக்கின்றது. அதில் ஏட்டில் உள்ளபடி சிவலிங்க ஆலயம், அதனோடு பல அதிசயங்களும் உள்ளன. அங்குள்ள ஊர் ஒன்றில் இருக்கும் முதியவர் ஒருவர் அடியவர்களுக்கு கலியுகத்தின் மகிமை என்னும் நூல் பற்றி விளக்கிக் கூறிக்கொண்டிருப்பார். அவரை அணுகினால் அந்த இடத்தை அடையலாம் என அருளியதன் பிரகாரம் சுவாமி அவர்கள் விடைபெற்று இலங்கை நோக்கி வந்தார்.

தலைமன்னாரை வந்தடைந்து மாய மணியின் உதவியுடன் பெண் ரூபமாக உருமாறி வீட்டு வேலைக்காரியாகச் சிலகாலங்கள் கழித்தார். பின் ஆண் ரூபமாக மாறி கதிர்காம யாத்திரிகர்களுடன் சேர்ந்து முல்லைத்தீவு, வற்றாப்பளை, கொக்கிளாய், திரியாய். குச்சவெளி ஆகிய இடங்களுக்கு வந்து கும்புறுப்பிட்டியை அடைந்தார். அங்கு அடியவர்களோடு வருகையில் ஓர் வீட்டில் கலியுகத்தின் மகிமை பற்றி விளக்கிக் கூறப்பட்டதை அறிந்து அங்கு சென்று முதியவர் ஒருவரைச் சந்தித்தார். தான் தேடிவந்த முதியவர் இவரே என அறிந்து கொண்டு அடியவர்கள் கலைந்து சென்றதன் பின்னர் பகவான் கூறிய விடயங்கள் பற்றிக் கேட்டறிந்தார். அந்த வைத்தியர் கோணாமலை என்பவரின் சம்மதத்துடன் அன்று மாலை அவரது மகளுடன் மூவருமாக குச்சவெளி சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கின்ற நாகராஜன் மலையை அடைந்து மேலே சென்று சகல விபரங்களையும் அறிந்து கொண்டார். அத்தோடு அங்கு இரண்டு சுவாமிமார்களையும் கண்டு கொண்டார். அதன் பின்பு மீண்டும் கும்புறுப்பிட்டி வந்து மட்டக்களப்பு வழியாக கதிர்காமம் சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு தலைமன்னார் ஊடாக இந்தியா சென்றார்.

சில காலங்களின் பின்னர் 1934 ஆம் ஆண்டு மறுபடியும் இலங்கைக்கு வந்து கொழும்பில் இருந்த தொழிலதிபர் திருவாளர் கனகராசா அவர்களின் உதவியோடு குச்சவெளிக்கு வந்தார். செம்பி மலையில் சிவலிங்கப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கும் பணியையும் மேற்கொண்டார். இவ் ஆலய திருப்பணி வேலையில் கும்புறுப்பிட்டி குச்சவெளி மக்களும், மட்டக்களப்பிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய அன்பர்களும், செட்டிபாளையம் சிவன் ஆலய அன்பர்களும், சுவாமியிடம் அன்பு கொண்ட ஏனைய கிராம அன்பர்களும் அயராது பாடுபட்டிருந்தார்கள். சுவாமி அவர்கள் உடல் யாகம், அக்கினி யாகம் என்பன செய்து மூலமூர்த்தியாக உள்ள சிவலிங்கப் பெருமானுக்கு 1938 இல் கும்பாபிசேகம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இங்கு இரு ஆச்சிரமங்களும் அமைந்திருந்தன.

செம்பிமலை ஆலயத்தின் வலது பக்கத்தில் சிறிதான ஒரு கட்டடம் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது செம்பிமலைச் சுவாமியின் கட்டளைப்படி கட்டப்பட்டதாகும். ஒரு காலத்தில் சுவாமி அவர்கள் தான் தியானத்தில் இருக்கப்போவதாக கூறி, தன்னைச் சுற்றிலும் முற்றாக சீமெந்துக் கட்டடத்தினால் மூடிக் கட்டி விடுமாறும் கூறினார். அதன்படி அமைக்கப்பட்ட கட்டடமே இதுவாகும். இங்கு சுவாமி அவர்கள் கூறியபடி மக்கள் முன்னால் வைத்து தனது வயிற்றுப்பகுதியை தானே கிழித்துக்கொண்டு அக் கட்டடத்தினுள் 21 நாட்கள் தியானத்தில் இருந்தார். மக்களும் அவரை உள்ளே வைத்து மூடிக் கட்டிவிட்டனர். பக்தர்கள் வெளியேற்றத்தைக் காண இரவு பகலாக விழித்திருந்ததாகவும். அக்கால காவல் படையினரும் காவல் காத்து நின்றதாகவும் கூறப்படுகிறது. சுவாமி கூறிய காலம் நிறைவடைந்ததன் பின்னர் மக்கள் கட்டடத்தின் வாசல் பகுதியை உடைத்துப் பார்த்த போது எதுவித பாதிப்புகளும் இன்றி சுவாமி அவர்கள் அதனுள்ளிருந்து உயிருடன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வெளியே வந்து, ஆலயத்தின் தெற்குப் பக்கமாகவுள்ள கதவின் வழியாக மூலமூர்த்தியான சிவலிங்கப் பெருமானைத் தரிசித்ததார். அவ் வேளையில் தியானமிருந்த மூடிய அறையில் புது நறுமணம் வீசியதாகவும், பூக்கள் வாடாமல் இருந்ததாகவும் இக்காட்சியை நேரில் கண்ட பெரியோர்கள் கூறியுள்ளனர்.

மட்டக்களப்பு பக்தர்களின் வேண்டுகோளின் பிரகாரம் குருக்கள்மடம் என்னும் இடத்தில் 1940 ஆம் ஆண்டளவில் கிருஷ்ண பகவானின் ஆலயம் ஒன்றை அமைத்து, யாகங்கள், கும்பாபிசேகம் செய்து ஆண்கள் திருவருள் சங்கம், பெண்கள் திருவருள் சங்கம் போன்றவற்றை அமைத்து ஆத்மீக செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் அறியமுடிகின்றது. இதே போன்று செட்டிபாளையம் என்னும் ஊரில் அருள்மிகு சோமகலாநாயகி சமேத சோமநாத லிங்கேஸ்வரர் ஆலயத்தையும் அமைத்ததோடு அங்கும் ஆண்கள் திருவருள் சங்கம், பெண்கள் திருவருள் சங்கம் என்பவற்றை ஆரம்பித்து மக்களுக்கு நல்வழி காட்டினார்.

கூட்டுப்பிரார்த்தனைகள் நடாத்துதல், வீடுகளில் காலையும் மாலையும் வழிபாடியற்றலை ஊக்குவித்தல், பண்ணிசை பாடுதல், சமய அறிவுப் போட்டிகளை நடாத்துதல் போன்ற சமயப் பணிகளும், பிடியரிசித் திட்டம், பொது வேலைகளில் மக்களுடன் பங்கெடுத்தல், ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி செய்தல், ஏழை மக்களுக்கு உடுதுணிகள் வழங்குதல் போன்ற சமூகப் பணிகளும், 1947, 1952 காலப்பகுதியில் மட்டக்களப்பு பட்டிருப்புத் தொகுதியில் அரசியல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

சுவாமி அவர்களால் அமைக்கப்பட்ட ஸ்ரீ செம்பீஸ்வரர் ஆலயத்தினையும், ஆலயத்திற்குச் சொந்தமாகவிருந்த கால்நடைகள், காய்கனிச்சோலைகள், வயல்கள் முதலானவை கும்புறுப்பிட்டி தேசிங்குராஜா, செட்டிபாளையம் முருகப்பர் ஆகியோரால் பின்னாட்களில் பராமரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

சுவாமி அவர்கள் தங்கியிருந்து மக்களுக்காக சத்சங்கம் செய்து வந்த குருக்கள் மடத்தில் தற்போது "ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி நினைவாலயம் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது இங்கு "ஆனந்தகிரி அறப்பணி மன்றம்" என்னும் அமைப்பும் மக்களுக்கான சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் அமைப்புக்கள் சுவாமியின் பால் அன்பு கொண்ட தொண்டர்களினால் இன்றுவரை முன்னெடுக்கப்படுவதைக் காணலாம்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு வரும் போது அங்குள்ள மக்களையும் அழைத்துக் கொண்டு செம்பிமலைக்கு வந்சி பூசை வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டார். மக்கள் இவரை செம்பிமலைச்சுவாமி என்றே அழைத்தனர். இவ்வாறாக ஒரு துறவியாக வாழ்ந்து மக்களுக்கான வழிகாட்டியாகத் திகழ்ந்த சுவாமி அவர்கள் சில காலங்களின் பிள்னர் 1976 அளவில் மீண்டும் இந்தியா திரும்பியதாகவும், அங்கு திண்டுக்கல் என்னுமிடத்தில் 1977.09.01 அன்று சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு பல தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்து வாழ்ந்த செம்பிமலை சுவாமியின் வாழ்க்கை வரலாறு, அவரால் தன்னை முன்னிலைப்படுத்தாது மறைமுகமாக அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட "கிருஷ்ணம்மாள் என்னும் மாயப்பெண்" என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது என பெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.