நிறுவனம்:கிளி/ மாசார் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:15, 8 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= கிளி/மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/மாசார் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் மாசார்
முகவரி மாசார்
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -



உருத்திரபுரத்தின் தொன்மை மும்மை வரலாற்றுத்தடங்களைக் கொண்டது. ஒன்று கிறிஸ்துவுக்கு முற்பட்ட ஆதித்திராவிட மக்களின் வாழ்வின் எச்சங்கள் இவற்றை நிரூபிக்கும் வகையில் குஞ்சுப்பரந்தன் பகுதியில் கிடைக்கப்பெற்ற ஆதித்திராவிட முதுமக்கள் ஈமத்தாளிகள் மற்றுமொன்று உருத்திரபுரம் சிவாலயத்தின் பின் பகுதியில் அமைந்துள்ள சின்னபல்லவராயன் கட்டுப்பகுதியில் மீட்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களில் தியானநிலையில் உள்ள பெண் யானைகள், விளக்குகள் போன்றவை இப்பகுதியில் புலமையாளர்களால் மேற்கொள்ளபட்ட தொல்லியல் ஆய்வுகள் அகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்ட கலாசார உருவாக்கும் மேம்பாடு என்பவற்றை வெளிச்சமிட போதுமானவையாக அமைகின்றபோதும் இது பற்றிய கற்கைள் ஆய்வுகள் மேலும் ஆழமாக்கப்படவேண்டியது அவசியமாகிறது. வரலாற்றுப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் புராதன புநகரி பற்றிய ஆய்வுகளின் எல்லைக் கோடுகள் உருத்திரபுரத்தின் எல்லை வரை விரிந்திருந்திருந்தது. இரண்டாவது சோழப்பேரரசன் முதலாவது பரந்தாமன் காலத்தில் இலங்கையின் வடபுலத்தில் அவனுடைய ஆளுகைக்குட்பட்ட வன்னி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சிவாலயங்கள் இவற்றில் ஐந்து சிவாலயங்களின் இருப்பு அதன் தொல்லியல்சான்றுகள் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இப்பணியில் கிளிநொச்சி வலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற வரலாற்றுப்பாட ஆசிரியர் திரு.மேகநாதன் அவர்களின் களக்குறிப்புக்கள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. இவற்றில் முதலாவது பூநகரி கௌதாரி முனை மண்ணித்தலை சிவாலயமாகும். இது இன்று வரை பாரிய சிதைவுகளுக்குட்படாத போதும் இதனைப்பாதுகாப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அத்தோடு இதன் புறவரை அமைப்பைக் கொண்ட புதிய ஆலயத்தை அமைப்பதற்கான எந்த முயற்சிகளும் தொடரப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். இரண்டாவது சிவாலயம் நஞ்சுண்டன் கட்டு காடுகளிடையே இருந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக திரு. மேகநாதன் குறிப்பிட்டுள்ளார் இவர் எந்த அடிப்படையில் அவ்வாறான முடிவை எட்டினார் என்பது தெரியவில்லை. மூன்றாவது சிவாலயம் அக்கராயன் அண்ணாசிலையடியில் மேற்கு நோக்கிச் செல்லும்பாதையில் காட்டம்மன் கோயிலுக்கு அருகாகவுள்ள வளவு ஒன்றில் காணப்பட்டது. எனினும். இங்கும் எழுந்தருளியோ ஆவுடையாரோ கிடைக்கவில்லை. ஏனைய ஆலயச்சிதைவுகளே கிடைக்கப்பெற்றன. நான்காவது சிவாலயம் இரணைமடு ஆற்றுப்படுக்கையின் கிழக்குப்புறமாக அமைந்திருந்த ஆதி வட்டக்கச்சி மாயவனூர் கிருஸ்ணன் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்திருந்தது இதன் சிதைவுகளின் பெரும்பகுதி கிருஸ்ணன் ஆலய நிர்மாணத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக இப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். சிவாலயம் தற்போது சற்றுத்தள்ளி மாயவனூர் கிராமத்தின் மையத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலபார்வதி சிலை ஒன்று 1990 வரை ஆலயப்பரிபாலகர் இல்லத்தில்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜந்தாவது சிவாலயம் உருத்திரபுர சிவாலயமாகும். 1995ஆம் ஆண்டில் உருத்திரபுரம் கிராமத்தின் மேற்கே அடர்ந்த காட்டிடையே வேலாயுத சுவாமிகள் என்பவரால்அடையாளப்படுத்தப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டது. பல்வேறுவகையான தொல்லியல் சான்றுகள் பரவிக்காணப்பட்ட இப்பிதேசத்தில் ஆலயத்தின் அருகே குளமொன்றும் காணப்படுகின்றது. இவ்வாலயத்தின் சிதைவுகள் பற்றிய குறிப்புக்களை 1872ஆம் ஆண்டில் வடபகுதி அரசஅதிபராக இருந்த சேர் வில்லியம் தூவைனம் எனும் பிரித்தானியரும் தனது குறிப்பேடுகளில் பதிந்துள்ளார். அனைத்து கோயில்களின் அமைப்பு சதுர ஆவுடையார் என்பவற்றில் ஒத்ததன்மைகள் காணப்படுவதோடு ஆலயக்கட்டுமானமும் சிறியதாக காணப்படுகின்றன. இதனால் ஆனையிறவு கடலேரியின் மேற்கு புறத்திலிருந்து இரணைமடு ஆற்றுப்படுக்கைவரை ஒத்த தன்மையுடைய மக்கள் குடியிருப்பக்கள் காணப்பட்டமைக்கான ஊகங்களை வெளியிட முடியும். மேலும் ஆய்வுகள் மூலம் இதன் உண்மைத்தன்மைகளையும் வெளிப்படுத்த முடியும். மூன்றாவது கிளிநொச்சி எழுச்சி இரணைமடுவுடன் ஆரம்பமாகிறது 1866 ஆம் ஆண்டில் பிரித்தானிய நீர்ப்பாசன பொறியியலாளரும் தொல்லியல் தேடலாளருமான கென்றி பாக்கர் என்பவர் இரணைமடு நீர்ப்பாசன நீர்தேக்கத்திற்கான திட்டத்தை வரைந்தார். இவரின் குறிப்புகளின் படி இரணைமடு படுக்கைகளில் 3000 வருடங்களுக்கு முற்பட்ட தொல்லியல் சான்றுகள் காணப்பட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது கென்றி பாக்கர் திட்டத்தின் படி இரணைமடுவின் கீழ் 20 ஆயிரம் ஏக்கர்வரை நெற்செய்கை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழேயே சேர்.பொன். இராமநாதன் தனக்கு ஆயிரம் ஏக்கர்களைப்பெற்றுக் கொண்டார் என்பது குறிப்படத்தக்கது. 1900 ஆம் ஆண்டில் இரணைமடு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக பெரிய அளவிலான மனிதவலு தேவைப்பட்டது. இதற்காக தற்போதைய கிளிநொச்சி நகரின் அருகாமையில் ஆறுகுளம் எனும் கிளிநொச்சிக்குளம் ஒன்றுஆரம்பிக்கப்பட்டு பரவிப்பாஞ்சான் என்றும் குடியேற்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது இப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களுடன் குஞ்சுப்பரந்தன் பகுதியில் இருந்து மக்களும் கொண்டுவரப்பட்டு 1920ல் இரணைமடு குளக்கட்டின் வேலைகளின் முதலாம் பகுதி நிறைவு பெற்றது. இதன் பின்பு இரணைமடுக்குளத்தின் இடதுகரை வாய்க்கால் கிளிநொச்சிக்குளத்தின் ஊடாக குஞ்சுப்பரந்தன் வரை விஸ்தரிக்கப்பட்டது. 1939ஆம் ஆண்டில்ல் கணேசபுரம் முதலாவது குடியேற்ற திட்டமாக உருவாகியது. 1949ல் யாழ்பாண அரச செயலகத்தின் கீழ் இயங்கிய அனைத்து செயலக பிரிவுகளின் கீழும் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களைச்சேர்ந்த மக்கள் நாட்டின் உணவு உற்பத்தியை மேம்படுத்தவும் நலிவுற்ற தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பெரியபரந்தன் புதுக்குடியிருப்பு எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இக்கிராமத்தை வந்தடைந்தனர். இக்காலத்தில் இக்கிராமத்தில் குடியேறிய மக்களின் பிள்ளைகளுக்கென உருவாக்கப்பட்ட பாடசாலைக்கட்டடவேலைகள் முற்றுப் பெறாத காரணத்தினால் கூழாவடிச்சந்திக்கு அருகில் செயற்பட்டுவந்த விவசாயப் பண்ணைக்கு அருகே தற்காலிக கொட்டகை ஓன்று அமைக்கப்பட்டு கல்விப்பகுதியினரால் திரு.இ.சிதம்பரப்பிள்ளைஅதிபராகநியமிக்கப்பட்டார் இக்காலப்பகுதியில் திரு.ஜ. கிருஸ்ணபிள்ளை என்பவர் இப்பகுதி குடியேற்றத்திட்ட முகாமையாளராக கடமையாற்றினார் 1950.05.15ல் 40 பிள்ளைகளுடன் இப்பாடசாலை இரணைமடு பரந்தன் பதிய கொலணிஅரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை எனும் பெயருடன் ஆரம்பிக்கப்பட்டு 19 நாட்கள் சேவையுடன் திரு. சிதம்பரப்பிள்ளை மன்னார் கோவிற்குளம் பாடசாலைக்கு மாற்றப்பட 05.06.1950 ஆம் ஆண்டில் திரு.தி.வே கதிரவேலு அப்புஜீ என்பவர் பாடலை அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். 12.02.1951 ஆம் ஆண்டில் இப்பாடசாலை தனக்குரிய நிரந்தரக்கட்டதில் இருந்து செயற்படத்தொடங்கியது. திரு.வே.கதிரவேலு 1958வரை இப்பாடசாலையின் அதிபராக இருந்து இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு உழைத்ததை இப்பகுதிமக்கள் இன்னும் நன்றியோடு நினைவு கூருகின்றனர் காடழிப்பினால் மரங்கள் அற்றுப்போன எமது பாடசாலைச் சுற்றாடலில் பாடசாலைக்கட்டத்தின் முன்பாக முதலாவதாக நடப்பட்ட வெள்ளைக் கொழும்பான் மாமரம் நம் மண்ணில் தமிழ் வளர்த்துப் புகழ்பெற்ற இலக்கியகலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களால் நடப்பட்டதாகும். அதேபோன்று இன்று பெருவிருட்சங்கள்களாக விளங்கும் வேப்பமரங்கள் இரண்டும் திருச.குமாரவேலு திரு. பழனிவேலு இரு ஆசிரியப்பெருந்தகைகளால் நடப்பட்டது. பின்னான காலத்தில் இப் பாடசாலைச்சுற்றாடல் காலத்திற்குக் காலம் பல்வேறு அதிபர் ஆசிரியர்களால் மரங்கள் நடப்பட்டு சோலையாக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டில் விவசாய ஆய்வுக் கூடமும், 1967 ஆம் ஆண்டில் விஞ்ஞான ஆய்வுகூடமும் அமைக்கப்பட்டன. கிளிநொச்சிப்பகுதியில் முதன் முதலில் இப் பாடசாலையிலும் பளை மகாவித்தியாத்திலும் மட்டுமே விவசாய விஞ்ஞானகூடங்கள் அமைக்கப்பட்டன. 1954 ஆம் ஆண்டு தொடக்கம் சிலகாலங்களுக்கு இப் பாடசாலையில் கூட்டுறவுச்சங்கம்சிறப்புற நடத்தப்பட்டது. பாடசாலையின் முதலாவது விளையாட்டுப்போட்டி 1995 ஆம் ஆண்டில்அப்போதைய வட்டாரக் கல்வி அதிகாரி திரு. அருமைநாயகம் அவர்களைப் பிரதம விருந்தினராகக் கொண்டு சிறப்புற நடாத்தப்பட்டது. அப்போது நாவலர், வள்ளுவர், பாரதி, எனும் பெயரிலேயே இல்லங்கள் அமைந்திருந்தன. இவை 1963 ஆம் ஆண்டில் தற்போது உள்ள சேரன், சோழன், பாண்டியன் இல்லங்களாக மாற்றப்பட்டன. இவ்வாண்டிலலேயே பாடசாலைக்கொடியும் உருவாக்கப்பட்டது எமது பாடசாலைச்சேர்ந்த மாணவர்கள் 1956 ஆம் ஆண்டில் எஸ்.எஸ். சி என்னும் சிரேஸ்ட தராதரப்பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 1957ஆம் ஆண்டில் மேற்படி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் திரு.வேபாலசுந்தரம், திரு.தம்பிஐயா, திருமதி மனோன்மணி உட்படபலர் சிறப்புத்தேர்ச்சி எய்தினர். இவர்களுக்கான உயர்தரவகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு பின் ஆசிரியர் இன்மையால் ஒரு வருடத்துடன் இடைநிறுத்தப்பட்டது. இதேபோன்று 1956ஆம் ஆண்டில் ஆரம்பிக்கபட்ட எச்.எஸ்.சிஎனப்படும் உயர்தர வகுப்பு மாணவர்களில் நால்வர் இப்பரீட்சையில் சித்தியடைந்தனர். பின் ஆசிரியர்,இன்மையால் இவ்வகுப்புகள் இடைநிறுத்தப்பட மாணவர்கள் வேறு பாடசாலைகள் மூலம் தோற்றினர். இவர்களுள் திரு.க.விமலதாசன் அமரர்.திரு.நடேசபிள்ளை என்பவர்கள் பல்கழைக்கழகம் சென்றனர். இவர்களுள் அமரர் திரு. நடேசப்பிள்ளை என்பவர் இலங்கை நிர்வாகசேவைப் பரீட்சையில் சித்தியடைந்து நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி அமரானானார். இதேபோன்று பல்வேறு காலங்களில் இப் பாடசாலையில் ஆரம்பக்கல்வி முதல் சாதாரண தரம் வரை கற்று உயர்தரக் கல்வியை வேறு பாடசாலைகளில் கற்றவர்கள் பலர் பல்கலைக்கழக அனுமதிபெற்று பட்டதாரிகளாகியுள்ளனர். இவர்களுள் திரு க.கணேசு ,திரு.க.மகேஸன், அமரான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.மு.சண்முகராஜா, திரு. ஐயம்பெருமனார், திருமதி. கமலாதேவி சுயேந்திரா, திருமதி மீனலோஜினி இதய சிவதாஸ், திருமதி. மஞ்சுளா, திருமதி சர்வேஸ்வரி சிவகுமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் இதன் பின் திரு.கா.நாகலிங்கம் அவர்கள் அதிபராக கடமையாற்றியகாலத்தில் 1987 ஆம் ஆண்டில் இப் பாடசாலையில் மீண்டும் உயர்தரக்கலை, வர்த்தகப்பிரிவு வகுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு பாடசாலை தரம் ஒன்று C பாடசாலையாகத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தொடரில் 1997 ஆம் ஆண்டில் செல்வி அன்ரனிற்றா, யுலியற் யாப்கோப்பு என்பவரும், 1994 ஆம் ஆண்டில் செல்வி அ.கலைவாணி என்பவரும்,1998 ஆம் ஆண்டில் திரு.க.சிவகுமார், செல்வி.மு.கயல்விழி, செல்வி. பா.பவானி என்பவர்கள் பல்கலைக்கழகக் கலைப்பீடத்திற்கு தெரிவாகினர். இதன்பின் 1995 ஆம் ஆண்டில் திரு. பிரதீபன் என்பவர் கலைப்பீடத்திற்கும் செல்வி.கா.சந்திவதனி என்பவர் முகாமைத்துவ கற்கைக்கும் தெரிவாகியுள்ளனர். 1996 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாரிய இராணுவ நடவடிக்கையான “சத்ஜெய” வுடன் இப் பாடசாலையும் இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரம் இல.2 பாடசாலை வளாகத்தில் தற்காலிகக் கொட்டகைகளில் இயங்கத்தொடங்கியது. 2000ம் ஆண்டில் பொன்விழாவைச்சந்திக்கும் இப் பாடசாலை விளையாட்டுத்துறையிலும் குறிப்பாக உதைப்பந்தாட்டம் என்பவற்றில் பலமுறை முதன்மை நிலை பெற்று சம்பியனாகியது. குறைவான எண்ணிக்கையான பிள்ளைகளுடனும் வசதியீனங்களுடன் செயற்ப்பட்ட அன்னற காலகட்டத்திலும் 1998 ஆம் ஆண்டில் கரைச்சிப்பிரிவு போட்டிகளில் 17வயதுக்குக் கீழ்ப்பிரிவில் வலைப்பந்துஅணி முதலிடத்தையும் 17வயதுக்குகீழ்பிரிவில் உதைபந்தாட்ட அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது குறிப்பிடதக்கது. மீளவும் 2001 தனது சொந்த இடத்தில் அப்போதைய அதிபர்.திரு. சு. கணேசதாசன் அவர்களின் முன் முயற்சியுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படத் தொடங்கியது. போரின் நெருக்கடி தற்காலிகமாக முடிவுற சமாதானச் சூழலில் கிடைக்கும் வளங்களுடனும் பாடசாலை சிறப்படையத் தொடங்கியது. இக்காலக்கட்டத்தில் கிடைத்தவாய்ப்புக்களைப் பயன்படுத்தி 2003ம் ஆண்டு உடற்பயிற்சிப் போட்டிகளில் மாகாணமட்டத்தில் முதலிடத்தை இப்பாடசாலை பெற்றுக்கொண்டது. அத்தோடு அதே வருடம் நடைபெற்ற அகில இலங்கைப் போட்டியில்நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.. இந்த வெற்றிகளுக்கான அடித்தளத்தில் அப்போதைய அதிபர் திரு.க.கணேசதாசனின் பங்களிப்பே முற்று முழுதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டில் ஒக்டோபரில் இடப்பெயர்வு பாடசாலையின் முழுப் பௌதீக வளங்களினையும் பாடசாலைப்பிள்ளைகள் பலரின் உயர்களையும் காவு கொண்டது. இப்பாடசாலையின் பிரதி அதிபர் கமலாவதி சந்திரகாந்தன் உட்பட ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பலரையும் இப்பாடசாலை இழந்தது. இடைத்தங்கல் முகாமின் தடுப்பில் இருந்து மீள்குடியேற்றப்பட்ட போது இப் பாடசாலையின் அதிபர் பொறுப்பை திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ்அவர்கள் ஏற்றிருந்தார். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இப்போது பாடசாலை புதுப்பொலிவு பெற்றுள்ளது. புதிய உலக ஓழுங்கின் மாற்றங்கள் தொடர்கின்றன. இன்னும் ஆண்களுக்கான உதைப்பந்தாட்டத்தை கடந்து பெண்களுக்கான உதைபந்தாட்ட அணியும் சிறப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளது. இப் பாடசாலையின் உதைபந்தாட்ட எழுச்சிக்கு வித்திட்டவர்கள் பலர் அவர்களையும் நினைவுகூர வேண்டியுள்ளது. புதியகாலகட்டத்தில் உருவாகும் க.பொ.த. உயர்தரத்தின் தொழிநுட்பப்பிரிவின் விவசாய விஞ்ஞானம், கணனி, இலத்திரனியல் பாடங்களையும் உள்வாங்கி தொழில்வாண்மை மிகு உலகிற்கு உதவும் பணியில் இப்பாடசாலையும் தன்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும். இதற்கான நீர்,நில வளங்களை இந்தப் பாடசாலையும் கொண்டிருக்கிறது. இந்த கட்டுரைக்கான தகவல்கள் பாடசாலை சம்பவத்திரட்டு, இப்பாடசாலையின் பழைய மாணவனாக சிரேஸ்ட ஆசிரியராக இருந்த அமரர் வேதவனம் பாலசுந்தரம், பழைய மாணவனாகவும் அதிபர் பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும் விளங்கிய அமரர் முருகேசு சண்முகராசா ஆகியோரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதைத் தெரிவிப்பதுடன் விழி நிறைந்த கண்ணீரோடும் மனம் நிறைந்த நன்றிகளோடும், நட்போடும் அவர்களை நினனவு கூருகின்றேன். உருத்திரபுரத்தில் கல்வி ஒளி பரப்பும் இவ் வித்தியாலயம் சிறப்புற ஓங்க எல்லோரும் சேர்ந்துழைப்போம்.