ஆளுமை:துரைசிங்கம், கதிர்காமத்தம்பி
பெயர் | துரைசிங்கம் |
தந்தை | கதிர்காமத்தம்பி |
தாய் | வரதலட்சுமி |
பிறப்பு | 1939.11.06 |
ஊர் | பன்னாலை, தெல்லிப்பளை |
வகை | சமூகவியலாளர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
துரைசிங்கம், கதிர்காமத்தம்பி (1939.11.06 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த சமூகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை கதிர்காமத்தம்பி; தாய் வரதலட்சுமி. இவர் ஆரம்பக் கல்வியை பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையிலிலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்று, இலங்கை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பதிவு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரியாக (Registered Medical Officer –RMO) இலங்கையின் பல பாகங்களில் பணியாற்றியவர். 1981ல் தமது மனைவி சகிதம் நைஜீரியா சென்றவர், அங்கு சொக்கொட்டோ நகரில் உள்ள முஹமதியா மருத்துவ நிலையத்தில் மருத்துவராகவும் பின்னர் அதன் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். விஞ்ஞான பட்டதாரியான இவரது மனைவி பூமணி அங்குள்ள அரச பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார்.
1987 இல் கனடாவிற்கு இடம் பெயர்ந்த பின்னரே, இவரது சிறப்பான ஆளுமைகள் வெளிப்படத் தொடங்கின. மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிறுவனர்களில் ஒருவரான இவர் 2000 -2001 ஆம் ஆண்டுகளில் இதன் தலைவராகப் பணியாற்றி, இப்பொழுது இதன் காப்பாளர்களில் ஒருவராகவுள்ளார். பல்வேறு சமூகம்சார் பொதுப்பணிகளிலும் நிதிசேர் நிகழ்வுகளிலும் முக்கிய பங்காற்றும் இவர் உதயன் பத்திரிகை, இளங்கலைஞர் மன்றம், வரசித்தி இந்துக் கல்லூரி, மனவெளி கலையாற்றுக் குழு, பாரதி கலைக்கோவில், சாம்பியா - இலங்கை நட்புறவுச் சங்கம், தமிழ் இலக்கியத் தோட்டம், இந்து சமயப் பேரவை, சைவ சித்தாந்த மன்றம் ஆகியவற்றின் ஆலோசகர் சபைகளிலும் அங்கம் வகிக்கின்றார்.
கனடாவில் தமிழர் தகவல், உதயன், தாய் வீடு, ஜேர்மனியில் வெற்றிமணி, இங்கிலாந்தில் புதினம் ஆகியனவற்றில் எழுதி வருகின்றார். காதோடு காதாக என்ற நகையும் சுவையும் நிறைந்த நூல் கனடா உட்பட பல நாடுகளில் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. பல நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தி மேடையேற்றிய இவர், கனடாவில் தயாரான சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழர் தகவலின் பன்முக ஆளுமை சிறப்பு விருதும், மூன்று தடவைகள் ஒன்ராறியோ அரசின் தன்னார்வத் தொண்டர் சேவை விருது இவருக்கு வழங்கப்பட்டது.