ஆளுமை:முஸம்மில், அலியார்
பெயர் | முஸம்மில், அலியார் |
தந்தை | அலியார் |
தாய் | முக்குலுத்தும்மா |
பிறப்பு | 1942 |
ஊர் | சாய்ந்தமருது |
வகை | பல்துறை ஆளுமை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முஸம்மில், அலியார் (1942-) சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு பல்துறை ஆளுமை ஆவார். அலியார்க் கங்காணி முக்குலுத்தும்மா தம்பதியினரின் நடு இளைய புதல்வராவார்.
ஹொறவப்பொத்தானை நூறேக்கர் என்னும் கிராமத்தில் வசித்திருக்குங் காலத்தில் 1948-1954 வரை ஹொறவப்பொத்தானை ருவன் வெலி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை பயின்ற இவர் கல்முனை சாகிறாக் கல்லூரியில் ( 1961-1963 ) இடைநிலைக் கல்வியைப் பயின்றுள்ளார்.
இவர் கல்முனை சாகிறாக் கல்லூரியில் பத்து வருடங்கள் சிங்கள மொழி ஆசிரியராகவும் ( 1967-1970 ) , பிரிவுத் தலைவராகவும் , உப அதிபராகவும் ( 1986-1991 ) கடமையாற்றியுள்ளார் . மருதமுனை கமு / அல் மனார் மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும் ( 1982-1983 ) கமு / மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகவும் ( 1983-1986 ) , கல்முனை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் ( 1973 ) , அதிபராகவும் ( 1987 ) சேவை செய்த இவர் 1974-1982 வரை நிந்தவூர் அல் அஷ்றக் மகா வித்தியாலத்தில் கற்பித்துள்ளார் .
இவர் , கிழக்கு மாகாண முதலமைச்சர் கலைமாமதி விருது ( 2009 ) , மத்திய அரசின் கலாபூஷண விருது ( 2009 ) முதலியவற்றைப் பெற்றவர் . சிங்கள மொழி மூலம் களுத்துறை , கட்டுக்குருந்தை ஆசிரிய பயிற்சிக் கல்லூரி யில் பயிற்றப்பட்ட ( 1971-72 ) முதலாம் தர கிழக்கு மாகாணத்தில் முதலாவது முஸ்லிம் சிங்கள ஆசிரியர் . கொழும்பு பல்கலைக் கழக ஊடகவியல் டிப்ளோமாதாரி ( 1997 ) , சிங்கள மொழிக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளாளராக ( 1991-2002 ) 12 வருடங்கள் கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் . அரச கரும மொழிகள் திணைக்கள போதனாசிரியர் . நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள ஆசிரியர்களை உருவாக்கியவர் . சாய்ந்தமருது மத்தியஸ்த குழாமின் தவிசாளர் . சத்தியப் பிரமாணஞ் செய்த மொழி பெயர்ப்பாளர் , சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளி வாசல் நம்பிக்கையாளர் . கல்முனை பொலிஸ் நிலைய சாய்ந்தமருது சிவில் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் . கொழும்பு - 3 , கல்விக் கூட்டுறவுச் சங்கத்தில் 1980-1996 வரை 16 வருடங்கள் பணிப்பாளராக இருந்தவர். சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியச் சங்கத்தின் தலைவர் , கல்முனை போட்டோறியோ நிறுவனத்தின் உரிமையாளர் . 1980 இல் கிழக்கில் போட்டோப் பிரதி இயந்திரத்தையும் இறப்பர் முத்திரை செய்வதையும் முதன் முதல் அறிமுகப் படுத்தியவர் .
திவயின பத்திரிகையின் நிந்தவூர் நிருபர் , நவமணியின் சாய்ந்தமருது நிருபர் . பத்திரிகைகளுக்கு கட்டுரை , கதை , கவிதை செய்தி எழுதியவர் . சாமதொறட்டுவ -1 ( சமாதானக் கதவு -1 ) . கடலே உனக்கு கருணையில்லையா , சிங்ஹள பாசா கத்தன பரிசறய , சிங்களத்தைப்படிக்கும் புதிய முறை , தமிழில் வினைச் சொல் உருபேற்கும் விதம் ( சிங்களவர் தமிழ் படிப்பதற்காக ) ஆகிய நூல்களை எழுதியவர் . மருத்துவப் பயிர்ச் செய்கை , மருத்துவப் பயிர்களின் விபரக்கொத்து , மூலிகைத் தோட்ட வழிகாட்டி , ஆயுர்வேத வாழ்க்கைத் தத்துவம் முதலிய நூல்களை அரசின் கோரிக்கைக்கு இணங்க சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தவர் . 1861 இல் அகமதுக்குட்டிப்புலவர் பாடிய ஏட்டு வடிவத்தில் இருந்த இசுவா அம்மானை என்ற நூலை அச்சேற்றி அறிமுகப்படுத்தியவர் . இந்நூல் ஐந்தாவது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இந்தியா கீழக்கரையில் 1990 இல் வெளியிடப்பட்டது . இந் நூலினைக் கொண்டு காத்தான்குடி மக்களின் இலக்கிய வரலாறு 170 வருடங்களுக்கு முன் கொண்டு செல்லப்பட்டுள்ளது . தற்போது பனிச்சை வெட்டுவான் ( நிந்தவூர் ) வன்னியனார் வாழ்த்துகை ( 1880.07.17 ) ஏட்டுப் பிரதியை நூலாக்கிக் கொண்திருந்த சமயம் இயற்கை எய்து இருக்கிறார்.
ஸ்ரீ லங்கா ஜாதிக குரு சங்க மாவட்ட செயலாளராக ( 1974 ) இருந்து கல்முனை கல்வி அலுவலகத்தில் இடமாற்ற சபை பிரதிநிதியாகப் பணியாற்றியவர் . கல்முனை கல்வி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் அம்பாரை , மட்டக்களப்புக்கு க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுதச் சென்றதை மாற்றி அமைத்து கல்முனையையும் ஒரு பரீட்சை நிலையமாக கொண்டு வரப் பாடுபட்டார் . சாய்ந்தமருது பொது நூலகம் இவரின் முயற்சியாலேயே உருவானது.