ஆளுமை:சண்முகலிங்கம், ம
பெயர் | சண்முகலிங்கம் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் திருநெல்வேலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சண்முகலிங்கம், ம யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் குழந்தை ம.சண்முகலிங்கம் என எல்லோராலும் அறியப்படுகிறார்.
கலைப்பட்டதாரியான சண்முகலிங்கம் ஈழத்தின் சொர்ணலிங்கம், தமிழகத்து பம்மல் சம்பந்தமுதலியார் ஆகியோரை குருவாகக்கொண்டு தனது இயல்பான நடிப்பினாலும் அரங்க அமைப்பு முறைகளினாலும் நவீனமயப்பட்ட அரங்கொன்னை ஈழத்திற்கு தந்துள்ளார். அவரது உலக நாடக அரங்கியல் மாற்றங்களோடு தன்னை இணைத்துக்கொண்டு புடம் போட்டு ஈழத்தமிழரின் அரசியலை, வாழ்க்கை ஆகியவற்றை நாடகத்தின் பொருளாக்கி ஈழத்தின் தமிழ் நாடகப் போக்கயே புதிய நடையில் பயிற்றுவித்து வருகிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரின் நாடகத்துறை ஈடுபாட்டின் காரணமாக வருகை விரிவுரையாளராக நியமித்தது. 1950ஆம் ஆண்டு நாடக பயணத்தை ஆரம்பித்த சண்முகலிங்கம் 1951ஆம் ஆண்டு திருநெல்வேலி இந்துவாலிப சங்க நாடகமொன்றில் கிழவன் பாத்திரம் ஏ்ற்று நடித்தார். 1957ஆம் ஆண்டு அருமை நண்பன் என்னும் நாடகத்தை எழுதி தயாரித்தார். 1958ஆம் ஆண்டு கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த அருச்சுனன் பாத்திரம் ஏற்று நடித்தார். 1960ஆம ஆண்டு திருக்குறள் தந்த திருவள்ளுவரின் வாழ்வைச் சித்தரிக்கும் வையத்துள் தெய்வம் என்னும் எழுத்துரு இவரால் எழுதப்பட்டது. சந்தி, தாலியைக்கட்டு போன்ற நாடகங்களிலும் பங்குகொண்டார். ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய இவர் 1976ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடக டிப்ளோமாப் பயிற்சியில் பங்கு கொண்டதன் ஊடாக நாடகத்துறையில் புதிய பயணததை மேற்கொள்ளக்காரணமாக அமைந்தது.
நாடகக்கலைஞர் தாசீசியஸ் உடன் இணைந்து நாடக அரங்கக் கல்லூரி என்னும் அமைப்பை உருவாக்கினார். இதன் முதல் படைப்பாக கூடிவிளையாடு பாப்பா என்னும் சிறுவர் நாடகத்தினை எழுதி அரங்கேற்றினார். தாசீசியஸ் உடன் இணைந்து நாடக அரங்கக் கல்லூரியின் ஊடாக நாடக ஆர்வலர்களுக்கு களப்பயிற்சியினை நடாத்தினார். பல பாடசாலைகளிலும் இவர் நாடக பயிற்சியை வழங்கியுள்ளார். 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் உறவுகள், நாளைமறுதினம், மாதொருபாகன், புழுவாய் மரமாகி, தாயுமாய் நாயுமானார், திக்விஜயம் , நரகத்தில் இடர்ப்படோம், சத்தியசோதனை, தியாகத்திருமணம் , பஞ்சவர்ண நரியார் போன்ற பாடசாலை நாடங்களை எழுதி தயார்த்தார்.
1985ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலாசார குழுவுக்காக மண்சுமந்த மேனியார் எழுதித் தயாரிக்கப்பட்டது. மண்சுமந்தமேனியர் என்னும் நாடகத்தினூடாக ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி விபரித்துள்ளார் சண்முகலிங்கம். அன்னை இட்ட தீ (1991) நாடகத்தின் ஊடாக போராட்டத்தின் காரணமாக மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடுக்கள் தொடர்பாக பேசியிருந்தார். எந்தையும் தாயும் முதுமையில் பெரியோர்களை பேணுதல் தொடர்பாக பேசுகிறது. யார்க்கெடுத்துரைப்பேன் என்ற இவரின் நாடகம் அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்த அகதிகளின் அவலநிலையை எமது கண்முன் கொண்டு வருகிறது.
இந்திய அமைதிப்படையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை வேள்வித் தீ நாடகம் சித்தரிக்கிறது. ஆர்கொலோ சதுரர், அளப்பெருங்கருணை போன்ற நாட்டிய நாடகங்கள் என்பவற்றுடன் தாகூரின் துறவி, கிரேக்க இடிபஸ் மன்னன், நோவே ஒரு பாவை வீடு என்பனவற்றை மொழிபெயர்த்து மேடையேற்றினார். நூறுக்கும் மேற்பட்ட சமூகவிடுதலை, அரசியல் விடுதலை, பண்பாட்டு விடுதலை சார்ந்த நாடகங்களை ம.சண்முகலிங்கம் எழுதியுள்ளார். இவர் நாடக கலைஞர், நாடக ஆய்வாளன், தயாரிப்பாளர், களப்பயிற்சியாளர் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர்.
விருதுகள்
கௌரவ இலக்கியகலாநிதி பட்டம் – கிழக்கிலங்கை கல்கலைக்கழகம் 2001ஆம் ஆண்டு