ஆளுமை:உஷாந்தி, நேசகாந்தன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:32, 26 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உஷாந்தி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உஷாந்தி
தந்தை துரைசிங்கம்
தாய் அமர்தவல்லி
பிறப்பு 1980.09.01
ஊர் மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உஷாந்தி, நேசகாந்தன் (1980.09.01) மட்டக்களப்பில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை துரைசிங்கம், தாய் அமிர்தவல்லி (ஓய்வு பெற்ற ஆசிரியை) தம்பதியினருக்கு கனிஷ்ட புதல்வியாக 01ம் திகதி புரட்டாதி மாதம் 1980ம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்தார். ஆறு வயது தொடக்கம் நடனக்கலையை ஸ்ரீமதி வசந்தி நேருவை ஆரம்ப குருவாகக் கொண்டு அடிப்படை பரதக்கலையினை பயின்றார். பின்னர் ஸ்ரீமதி மலர்விழி சிவஞான சோதி குருவை மானசீக குருவாகக் கொண்டு மேலதிக கற்றலை மேற்கொண்டார். வடஇலங்கை சங்கீதசபையால் நடத்தப்பட்ட பரதநாட்டிய அனைத்து தர பரீட்சைகளிலும் முதல்தர சித்தியை பெற்றவர். இன்றுவரை அவரது கலைநிறுவனத்தின் ஆற்றுகைகளிலும் பங்கெடுத்து வருகின்றார். இன்றைய ஈழத்து பெண் ஆளுமைகளில் சிறந்த நடனக்கலைஞராகவும், வளர்ந்துவரும் படைப்பிலக்கியவாதியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். கிழக்குப்பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. உஷாந்தி துரைசிங்கம்.

ஆரம்ப கல்வித் தொடக்கம் இடைநிலைக் கல்வி வரை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசியப் பாடசாலையிலும் உயர் கல்வியினை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலும் கற்றார். படசாலைகளில் இடம்பெறும் விழாக்கள், போட்டிகளில் கலந்து கொண்டதுடன் மாவட்ட, மாகாண தமிழ்த்தினப் போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொண்டது மட்டுமல்லாது விளையாட்டுத்துறைகளிலும் தேசியம் வரை வெற்றிபெற்று சிறந்த வீராங்கனையாகவும் சாதனையாளராகவும் திகழ்ந்ததுடன், மாணவ தலைவியாகவும், பல்வேறு நாட்டிய நாடக படைப்பாக்கங்களில் பிரதான பாத்திரங்களில் சிறப்புற பங்காற்றியுள்ளார். பரதநாட்டிய பாடத்தில் இருவருடங்களாக பரிசளிப்பு விழாவில் சிறப்பு சித்திபெற்றவர்.

2002ம் ஆண்டு தொடக்கம் 2005வரை பரதநாட்டிய இளநுண்கலைமானிப் பட்டப்படிப்பினையும் 2005ம் ஆண்டு தொடக்கம் 2007வரை பரதநாட்டிய முதுநுண்கலைமானிப் பட்டப்படிப்பினையும் இந்தியாவில் உள்ள திருச்சிராப்பள்ளி, கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று இளநுண்கலைமாணிப் பட்டப்படிப்பில் முதல்வகுப்பு தரச் சித்தியையும், முதுநுண்கலைமாணிப் பட்டப்படிப்பில் முதல்வகுப்பில் முதல் தரத்துடனும் நிறைவு செய்தது மட்டுமன்றி மோகினியாட்டத்தினை பகுதிநேரமாக நான்கு ஆண்டுகள் கற்று முதல் தர சான்றிதழைப் பெற்றதுடன், இந்தியா, நாகர்கோவில் களரி மையத்தில் கிராமியக்கலைகளை முறையாகக்கற்று சான்றிதழையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் குச்சுப்புடியையும் முறையாக இரண்டு ஆண்டுகள் கற்று தேர்ச்சிபெற்றவர். இவரது பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் மோகினியாட்ட அரங்கேற்றம் இரண்டும் இந்தியாவில் உள்ள திருச்சிராப்பள்ளி, கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியில் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கலாநிதிப் (PHD) பட்டத்திற்கான ஆய்வுக் கற்கை நெறியை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலங்கை மேடை நிகழ்வுகளில் பரத நாட்டியத்தின் பங்களிப்பு - ஓர் ஆய்வு எனும் தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு மிகவும் பாராட்டத்தக்க சிறப்புச் சான்றிதழைப் பெற்றார்.

கலைக்காவேரி நுண்கலைக்கல்லூரியில் பகுதிநேர நடன ஆசிரியராக இரண்டு வருடம் (2005-2007) கடமைபுரிந்தார். பின்னர் 2007 - 2009 வரை இலங்கை தேசிய கல்வியல் கல்லூரியில் (மட்டக்களப்பு) பரதநாட்டிய பாடத்திற்கு வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றினார். தமிழ்த்தினப்போட்டிகள், முத்தமிழ்விழாக்கள், வடஇலங்கை சங்கீதசபை பரீட்சைகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற போட்டிகளிலும் மத்தியஸ்தராக கடமைபுரிந்து வருகின்றார். மகரஹம தேசிய கல்வி நிறுவகத்தில் 2009 இல் இருந்து இன்றுவரை பரதநாட்டிய பாடத்திட்டத்திற்கு ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி வளவாளராக கடமையாற்றி வருகிறார்.

இந்தியாவின் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதுநுண்கலைமானிப் பாடத்திட்டத்திற்கான பாட வரைபிற்கு ஆய்வுகளின் எல்லையில் வெளிநாட்டு பொருள் நிபுணராக சென்று கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. 2016 இல் இருந்து இந்தியாவில் உள்ள தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கலாநிதி ஆய்வு பட்டப்படிப்பின் வெளிவாரி பரீட்சகராகவும் கடமையாற்றி வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார அதிகாரசபை குழு உறுப்பினராக 2016 இல் இருந்து சேவையாற்றி வருவதுடன் அரசடித்தீவு இளங்கதிர் கலா மன்றத்திலும், படையாண்டவெளி மாருதம் கலைக்கழகத்திலும் போசகராகவும், கலைத்துறை வளவாளராகவும் கடமையாற்றி வருவதோடு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கனடா தலைமையகத்தின் கலைத்துறை இணைப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கலாநிதி உஷாந்தி துரைசிங்கம் பாடசாலைக்காலத்திலேயே கலை இலக்கியத்தில் ஈடுபட்டு வந்தார;. அக் காலப்பகுதியில் தழிழ்த்தினப்போட்டி தாடகை வதம் நாடகத்தில் தாடகையாக பங்கெடுத்து 2000ம் ஆண்டு மாவட்ட, மாகாண மட்டத்தில் முதலாம், மூன்றாம் இடத்தினை பெறுவதற்கு உறுதுணையாக உழைத்தவர். மட்/ஆனைப்பந்தி மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்ற இராமகிருஸ்ண உபதேசம் நாட்டிய நாடகத்தில் இராமகிருஷ்ணராக ஆற்றுகையளித்தார். 2001ம் ஆண்டு, தேவநாயக மண்டபத்தில் இடம்பெற்ற நாட்டிய வித்தியாவின் நாட்டியாஞ்சலி நிகழ்வில் சிவ தாண்டவம், பதம் ஆகிய ஆற்றுகைகளில் ஆற்றுகைக் கலைஞராக பங்கெடுத்து பாராட்டைப் பெற்றார். 2002இல் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி அண்ணா கலையரங்கத்தில் இடம்பெற்ற வந்தேமாதரம் நாட்டிய நாடகத்தில் மோகினி ஆட்டத்தில் பங்கேற்று பலரது பாராட்டையும் பெற்றார். நாட்டிய நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளதுடன் பல நடன நெறியாள்கைககளையும் செய்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாராட்டை பெற்றுள்ளார்.

இவரது நாட்டியத்துறை சார்ந்த பல ஆய்வுகள் இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவற்றின் சில பதிவுகள்.

2013இல் மலேசியாவில் இடம்பெற்ற 11வது சர்வதேச மாநாட்டு ஆய்வரங்கில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோவில் நாட்டியமரபு எனும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை முக்கியத்துவம் பெறுவதாகும்.

2014இல் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற சர்வதேச முருக பக்தி மாநாட்டில் முருகன் மீது அமைந்த இசையும் ஆடலும் எனும் தலைப்பில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை கல்வியலாளர்களால் பாராட்டப்பட்டது.

திருவாசகத்தில் அமைந்த இசையும் இறையாடலும்எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையானது 2014இல் இலண்டனில் நடாத்தப்பட்ட 2ஆவது சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு முக்கிய ஆய்வாக பார்க்கப்பட்டது.

ஜேர்மனியில் நடாத்தப்பட்ட 2014ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாநாட்டில் சங்க இலக்கிய ஆதாரங்களுடன் தமிழர்களின் ஆடல்கள் எனும் ஆய்வுக் கட்டுரை இவரால் சமர்ப்பிக்கப்பட்டது.

2014இல் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற முருகன் சைவநெறி மாநாட்டில் பன்னிரு திருமுறைகள் குறிப்பிடும் தேவார இறை பக்தியும் ஆடலும்எனும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையானது மிக முக்கியம் பெறுவதாகும்.

2018இல் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச ஆய்வு மாநாட்டில் சங்ககால இலக்கியங்கள் கூறும் வெறியாடலும் அதன் தற்கால போக்கும் எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரை இவரால் சமர்ப்பிக்கப்பட்டு பெரிதும் பாராட்டைப் பெற்றதாகும்.

2020இல் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் வரலாற்று நோக்கில் தமிழியல் ஆய்வுகள் எனும் கருப்பொருளில் நடாத்தப்பட்ட முதலாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டில் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை பற்றிய அபிநய நோக்கும் பரிணாம வளர்ச்சியும் என்ற ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளில் பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகளில் இவர் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். அவற்றில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடனத்துறை மாணவர்களுக்கு கௌத்துவம் பற்றியும் அதன் உருப்படியையும் பயிற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008இல் தென்னிந்திய கிராமியக் கலையின் பரிணாமம் எனும் நூலை வெளியிட்டுள்ளார். பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் வெளியீடுகளில் பல கட்டுரைகளை எழுதி ஆவணப்படுத்தியுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றி வருவதோடு மட்டுமன்றி கனடாவில் தமிழ் மரபுத் திங்கள் எனும் கருப்பொருளில் நடாத்தப்பட்ட உலகத் தமிழியல் மாநாட்டிற்கு இவர் பிரதம அதிதியாக சென்று சிறப்புரை வழங்கினார். அத்துடன் அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் இலங்கை மட்டுமல்லாது கனடா, அவுஸ்திரேலியா, சுவிஸ், பாரிஸ், மலேசியா, சிங்கப்பர், இந்தியா போன்ற வெளிநாடுகளில் இடம்பெறுகின்ற சர்வதேச மாநாடுகளில் ஆய்வாளராகவும், பிரதம அதியாகவும், வளவாளராகவும், நடன ஆற்றுகையாளராகவும் பங்குகொண்டமை சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

இவர் தனது சிறுவயது முதல் பல ஆற்றுகைகளில் பங்கெடுத்தது மட்டுமல்லாது இள வயது முதல் இன்று வரை சிறந்த ஆற்றுகையாளராகவும், நெறியாளராகவும், வளவாளராகவும் பங்காற்றி வருகின்றமையும் பல்வேறு தரமான நடன, நாட்டியநாடக படைப்பாக்கங்களை வழங்கும் இளம் கலைஞராகவும் பல்துறை சார் ஆர்வலராகவும் துடிப்புடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விருதுகள்:

2005 - திருச்சி சுவாமி விவேகானந்தர; அறக்கட்டளையினால், யுவகலா பாரதி விருது வழங்கி கௌரவிப்பு.

2011 - ராஜீவ்காந்தி விருது, தஞ்சாவூர் இந்தியா.

2013 - மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் தெய்வத்தமிழ் கலைச்சுடர் விருது வழங்கி கௌரவிப்பு.

2017 - உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கனடா தலைமையகத்தினால் உலகத் தமிழ்மாமணி விருது வழங்கி கௌரவிப்பு.

2008இல் “தென்னிந்திய கிராமியக் கலையின் பரிணாமம்” எனும் நூலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பு: மேற்படி பதிவு கலாநிதி உஷாந்தி, நேசகாந்தன் அவர்களின் தகவலை அடிப்படையாகக் கொண்டது.

வெளி இணைப்புக்கள்