ஆளுமை:ஜனா, ஜெயகாந்தி
பெயர் | ஜனா |
தந்தை | சுந்தரலிங்கம் |
தாய் | கலாவதி |
பிறப்பு | 1985.11.09 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர், சமூசேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜனா, ஜெயகாந்தி (1985.11.09) யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பிறந்த எழுத்தாளர். தற்பொழுது மன்னாரில் வசித்து வருகிறார். இவரது தந்தை சுந்தரலிங்கம்; தாய் கலாவதி. ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் கற்றார். படிக்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர் ஜனா. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என பல்துறைசார் திறமைகளை கொண்ட ஜனா ஆய்வுக்கட்டுரைகளை தற்பொழுது எழுதி வருகிறார். குறிப்பாக மன்னார் மனித புதைக்குழி, இரணதீவு நில மிட்புப் போராட்டம் தொடர்பாக ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் எதிர் இணையத்தளத்தில் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. அண்மையில் வெளிவந்த வானம்பாடி சிறுகதைத் தொகுப்பில் இவரின் சிறுகதை இடம்பெற்றுள்ளது. இவரின் சிறுகதைகளும் கவிதைகளும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டம், பெண்ணியம் சார்ந்ததாக அமைந்துள்ளமை விசேடமாகும். எதிர்காலத்தில் சிறுகதைத் தொகுதியொன்றை வெளியிட எண்ணியுள்ளதாகத் தெரிவிக்கும் எழுத்தாளர் ஜனா சிறுகதைகளை எழுதி முடித்துவிட்டதாகவும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இன்னும் வெளியிடவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார். பெண்கள் வலுவூட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். பெண்கள் வலுவூட்டல் தொடர்பான விசேட 10 நாள் பயிற்சியை இந்தியாவின் தமிழ்நாட்டில் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளில் வளவாளராகவும் மீள் நல்லிணக்கம் தொடர்பான வளவாளராகவும் பால்நிலை தொடர்பான வளவாளராகவும் செயற்பட்டு வரும் ஜனா ஒரு மாற்றுத்திறனாளி. வடமாகாண மாற்றுத்திறனாளி மாதர் நலன்நோன்பு அமைப்பில் அங்கத்தவராக உள்ளார். மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் திட்ட உத்தியோகத்தராகக் கடமையாற்றி வருவதோடு பெண்கள் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
குறிப்பு : மேற்படி பதிவு ஜனா, ஜெயகாந்தி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.