ஆளுமை:குமரன், எஸ். ரி
பெயர் | குமரன் |
தந்தை | தவராசா |
தாய் | தங்கரத்தினம் |
பிறப்பு | 1983.01.20 |
ஊர் | தெல்லிப்பளை |
வகை | நாடகநெறியாளர், நவீன நாடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமரன், தவராசா (1983.01.20 - ) தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகநெறியாளர், நவீன நாடகவியலாளர். இவரது தந்தை தவராசா; தாய் தங்கரத்தினம். இவர் ஆரம்பக் கல்வியைத் தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளியிலும் உயர்கல்வியைத் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கக் கலைகளும் என்னும் பாடத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், முதுகலைமாணிப் பட்டத்தை முதலாம் தரத்தில் பெற்றுக் கொண்டார். பட்ட மேற்கல்வி டிப்ளோமாவைக் கல்வி முகாமைத்துவம், உளவியல், ஊடகம் ஆகிய துறைகளில் பெற்றுக் கொண்டார். சிறுவயதிலிருந்து நாடகம், இலக்கியத்துறை, சமயப்பணி ஆகியவற்றில் ஈடுபாடு காட்டினார். இவர் 2009 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை உதவி விரிவுரையாளராகவும் பின்னர் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் பின்னர் 2011 இலிருந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் நாடக ஆசிரியராகப் பணியாற்றியவர்.
நாடகத்துறை ஈடுபாட்டால் புத்தாக்க அரங்க இயக்கம் என்னும் அரங்க நிறுவனத்தை தனது சகோதரன் எஸ். ரி. அருள்குமரனுடன் இணைந்து உருவாக்கி தேசிய ரீதியில் நாடகப் பயிற்சிப் பட்டறைகளையும் நவீன நாடக வகுப்புக்களினை நடாத்துவதுடன் மேடை நாடகங்களையும் தெருவெளி நாடகங்களையும் ஆற்றுகை செய்து வருகின்றார். நாடகத்துறைக்காக 2010 ஆம் ஆண்டு சிறந்த நெறியாளர், தயாரிப்பாளர் ஆகிய துறைகளுக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொண்டார். தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட நாடகப் போட்டிகள் பலவற்றில் கல்ந்து கொண்டு வெற்றி பெற்றதுடன் தனது மாணவர்களையும் வெற்றி பெறச் செய்தார். நாடக எழுத்துரவாக்கப் போட்டியில் 2012 - 2013 ஆம் ஆண்டுகளில் தேசிய ரீதியில் விருதைப் பெற்றுக் கொண்டார். நாடகத் துறை சார்ந்து பல கட்டுரைகளையும் விமர்சனங்களையும் எழுதி வருகின்றார்.
தெருவெளி நாடகத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் தனது சகோதரரனான எஸ்.ரி.அருள்குமரனுடன் இணைந்து புத்தாக்க அரங்க இயக்கத்தின் தயாரிப்பாக வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் 'வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்' என்ற ஆற்றுகையை 4 வருடங்களாகத் தொடர்ந்து ஆற்றுகை செய்தும் வந்தார். தொடர்ந்து கருகும் மொட்டுக்கள், போதை எனக்குப் பகை , சுத்தம், உயிர்ப்பு போன்ற பல ஆற்றுகைகளை ஆற்றுகைப்படுத்தினார்.
உருவாக்கிப் பல்வேறு தெருவெளி நாடக செயற்பாடுகள், மாணவர்களுக்கான களப்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்.
அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்டத்தின் நவீன இணைப்பாளராகவும், சுன்னாகம் பொது நூலகத்தின் கலை கலாசாரக்குழுவின் உப செயலாளராகவும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், தெல்லிப்பளை தமிழ் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும் புத்தாக்க அரங்க இயங்கம் என்னும் அரங்க நிறுவனத்தை தனது பல்கலைக்கழகக் காலத்தில் 'நுண்கலைத்துறையின் வரலாறு' என்னும் ஆவணப்படத்தை எடுத்துள்ளார். நாடகம், ஊடகம், இலக்கியம், விவாதம், வில்லிசை, குறும்படம் என பலதுறைகளில் ஈடுபாடு காட்டி வருகின்ற இவர், பல நாடகங்களை மேடையேற்றி பலரது பாராட்டையும் கொண்டுள்ளார்.
இளைஞர்களுக்கான விழாவில் எஸ்.ரி.குமரனுடன் இணைந்து நெறியாள்கை செய்த 'கண்டல்' நாடகம் . றோயல் கல்லூரியினால் நாடகப்பிரதியாக்கப் போட்டியில் 2013 ஆம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளார். அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் 2016 ஆம் ஆண்டு இவரது நெறியாள்கையில் நிகழ்த்தப்பட்ட 'ஒரு நதி அழுகிறது' என்னும் நாடகத்திற்கு சிறந்த தயாரிப்பிற்கான விருது, ஒளிவிதானிப்பிற்கான விருதினையும் பெற்றுக்கொண்டார். வலிகாமம் கல்வி வலயத்தினால் 2015 இல் சிறந்த ஆசிரியராக கௌரவிக்கப்பட்டார். க.பொ.த. சாதாரண மாணவர்களிற்கான (நாடகமும் அரங்கியலும்) குறுவினாவிடைகள் (250), க.பொ.த. உயர்தர பிரிவு மாணவர்களிற்கான (நாடகமும் அரங்கியலும்) குறு வினாவிடைகள் (500) தொகுப்பாசிரியராகவும்,
இசை நாடக கூத்துப்பாடல்கள், பண்பாடு (தெருவெளி ஆற்றுகை பிரதிகளின் தொகுப்பு) ஆகியவற்றின் இணை ஆசிரியராகவும் விளங்கினார்.