ஆளுமை:கிருஷ்ணராஜா, செல்லையா
பெயர் | கிருஷ்ணராஜா |
தந்தை | செல்லையா |
தாய் | தங்கமுத்து |
பிறப்பு | 1953.10.10 |
ஊர் | கோண்டாவில் |
வகை | கல்வியியலாளர், பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிருஷ்ணராஜா, செல்லையா (1953.10.10 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த ஓர் வரலாற்றுத்துறைப் பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர், கல்வியியலாளர். இவரது தந்தை செல்லையா. இவர் ஆரம்ப, இடைநிலைக்கல்வியை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் கற்றுத்தேறி பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டமும் இந்தியாவின் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார். இவர் இந்தியா சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் ஆசிரிய பரீட்சார்த்தியாகவும் யாழ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிப் பின்னர் பேராசிரியராகக் கடமையாற்றி வருகின்றார்.
இவர் பேராசிரியர் இந்திரபாலாவுடன் இணைந்து மன்னார் -மாந்தைப்பகுதியிலும், யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியிலும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார். அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கப்பெற்ற பொருட்களை யாழ். பல்கலைக்கழகத்தில் நூதனசாலை அமைத்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை மன்றம், கடல் கடந்த தமிழர் அமையம், தனிநாயக அடிகளார் ஆய்வு அமையம், இந்திய இதிகாச சமூகம், தமிழர் தொல்லியற் கழகம், நல்லூர் பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.
இவர் ஈழத்தில் வெளிவரும் பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வரலாற்றுத் தகவல்களைப் பதிவுசெய்து வருகின்றார். இவர் பத்திற்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளையும் ஆவணப்படுத்தல், வரலாற்றுக் கண்டுபிடிப்பு, தொல்லியல் சார்ந்த இருபத்தேழு வரையான கட்டுரைகளையும் வித்துவப் பிரசங்கங்கள் பதினேழு வரையிலும் எழுதியுள்ளார். இவர் யாழ்ப்பாணத் தீவகற்பகத்தில் அகழ்வாராய்வுக்குத் தேர்ந்த பகுதிகள், யாழ் மக்களின் பண்டைக் காலத் தொல்லியல், யாழ்ப்பாண இராச்சியம் என்ற கட்டுரைகள் இவர் எழுதியவற்றில் முக்கியமானவை. இவற்றுடன் இலங்கை வரலாறு, யாழ்ப்பாணத்து நங்கையரின் பாரம்பரிய அணிகலன்கள், தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழரின் பண்பாட்டுத் தொன்மையும், வட இலங்கை பண்பாட்டுத்தளத்தின் உருவாக்கமும் உருவாக்கியவர்களும், நல்லூர் பிரதேச செயலக கலைஞானச்சுடர் (2008) முதலான நூல்களையும் ஆக்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 75