ஆளுமை:சந்திரசேகரன், சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:40, 17 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:சந்திரசேகரன் பக்கத்தை ஆளுமை:சந்திரசேகரன், சோமசுந்தரம் என்ற தலைப்புக்கு வழிமாற...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரசேகரன், சோமசுந்தரம்
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு 1944.12.23
ஊர் பதுளை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகரன்(1944.12.23-) பதுளையைச் சேர்ந்த கல்வியியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை சோமசுந்தரம். இவர் தமது ஆரம்பக் கல்வியை பதுளை ஊவாக் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்று 1964இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற் சேர்ந்து பயின்றார். கல்வியியலைப் பயின்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த இவர் அத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றதோடு பேராதனைப் பல்கலைகழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின் சிறிது காலம் இலங்கை வங்கியில் மொழிபெயர்ப்பாளராகவும், பாடசாலை ஆசிரியராகவும், ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளராகவும் கடமையாற்றி 1975ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை விரிவுரையாளராகச் சேர்ந்து கொண்டார். 1977இல் யப்பான் நாட்டு அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்று ஹிரோசிமா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் உயர் பட்டம் பெற்றார்.

கல்வியியல் தொடர்பாக பிலிப்பைன்ஸ், ஜப்பான், நோர்வே, அமெரிக்கா, இந்தியா, லிபியா, ஜேர்மன் போன்ற நாடுகளில் நடைபெற்ற மாநாடுகள், செயலமர்வுகள் என்பவற்றில் பங்கு கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வியியல் வெளிநிலை விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார். இப்பல்கலைக்கழகங்கள் பாட ஏற்பாட்டுக் குழுக்களில் வள அறிஞராகவும் கடமையாற்றியுள்ளார். ஐக்கிய அமேரிக்க ஓபோன் பல்கலைக்கழகத்தில் சில காலம் வெளிநிலைப் பேராசிரியராக கடமையாற்றியுள்ளார். இவருடைய கல்வித்துறை அனுபவம், எழுத்துக்களின் காரணமாக இவர் இலங்கை தேசிய ஆசிரியர் கல்வி அதிகார சபை, தேசிய நூலக சபை, தமிழ் இணைய வழிக்காட்டுக் குழு, கலைச்சொல்லாக்க குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும், சார்க் நாடுகளின் கல்வியியல் ஆராய்ச்சி சஞ்சிகையின் ஆசிரியர் பீட அலோசகரகவும் நியமனம் பெற்றுள்ளார்.

எழுத்துத்துறையில் இவர் முதன்முதலாக 1989ஆம் ஆண்டு இலங்கை இந்தியர் வரலாறு என்னும் நூலினை ஆக்கினார். தொடர்ந்து கல்வியியல் கட்டுரைகள், இலங்கையின் கல்வி வளர்ச்சி, கல்வியும் மனித மேம்பாடும், புதிய நூற்றாண்டுக்கான கல்வி, இலங்கையில் கல்வி, கல்விச் செயற்பாட்டில் புதிய செல் நெறிகள், உயர் கல்வியில் புதிய செல் நெறிகள், கல்விச் சிந்தனையில் புதிய செல் நெறிகள், இலங்கையில் தமிழர் கல்வி, அபிவிருத்தியும் கல்வியும், கல்வியியல் சிந்தனைகள், மலையக கல்வி சில சிந்தனைகள், கல்வி ஒரு பன்முக நோக்கு முதலான கல்வியியல் சார் நூல்களை எழுதியும் இந்தியாவும் அதன் தென்னாசிய அயல் நடுகளும், சமுதாய வலுவூட்டல், ஜனநாயகம் என்றால் என்ன, அபிவிருத்தி மாதிரிகள், ஜனநாயக அரசாங்க மாதிரிகள், உழைப்பால் கல்வியில் உயர்வோர், மேலதிக மொழிகளை கற்பித்தல், பெற்றோரும் கல்வியும், தனிமுறைப் போதனை, பிள்ளைகள் எவ்வாறு கற்கிறார்கள், பசுமை நூல் முதலானவற்றை மொழிபெயர்த்தும் உள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 91-93

வெளி இணைப்புக்கள்

பேராசிரியர் சந்திரசேகரன் பற்றி முஹம்மட் அஸ்மின்