ஆளுமை:விஜயலட்சுமி, சண்முகம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஜயலட்சுமி
தந்தை பொன்னுசாமி
தாய் சந்தானலட்சுமி
பிறப்பு 1927.10.10
ஊர் தஞ்சாவூர் திருப்பெருந்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயலட்சுமி, சண்முகம்பிள்ளை (1927.10.10) இந்தியா தமிழ்நாட்டில் தஞ்சாவூர் திருப்பெருந்துறையில் பிறந்த கலைஞர். இவரது தந்தை பொன்னுசாமி; தாய் சந்தானலட்சுமி. இவரின் கணவர், இலங்கை இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட புகழ்பெற்ற மிருதங்கக் இசைக்கலைஞரான சண்முகம்பிள்ளையாவார். இவர் திருப்பெருந்துறையிலும் திருகஸ்டியூரிலும் தனது கல்வியை மேற்கொண்டார். இவரது தந்தை இசைப் பாரம்பரியத்தை கொண்டவர். நடனக்கலையை குருகுலக் கல்வி மூலமாகவே பயின்றார். நடனத்தை திருதங்கூர் வீரப்ப பிள்ளைநாட்டிய ஆசானிடம் கற்றார். நடனத்துடன் வீணையையும் கற்றுக்கொண்டார். இசையை இந்தியாவின் மரபுவழி வந்த முசிரிசுப்ரமணிய ஐயர், சித்தூர் சுப்ரமணியம் பிள்ளை, திருப்பாங்குரம் சுவாமி நாதபிள்ளை ஆகியோரிடம் கற்றார். மேலும் வீணையினை இந்தியாவில் ஸ்ரீகல்யாண கிருஷ்ணபாகவதரிடம் கற்றுக்கொண்டார். 1941ஆம் ஆண்டு சண்முகம்பிள்ளை அவர்களைத் திருமணம் செய்து விஜயலட்சுமி இலங்கைக்கு வந்து தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்தார். இவருக்கு நான்கு பிள்ளைகள் இரண்டு பெண்களும் நடன ஆசிரியர்களாக உள்ளனர். ஒருவர் பிரகதாம்பாள், மற்றவர் வாசுகி ஜெகதீஸ்வரன் நாடறிந்த நடன ஆசிரியராவர். மூத்த மகன் ஊடகத்துறையைச் சேர்ந்த விஸ்வநாதன், இளைய மகன் ஜெகநாதன் ஆவார்.

கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தின் முதல் நடன ஆசிரியை என்ற பெருமையுடன் அப் பாடசாலையில் நடன ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்தார் விஜயலட்சுமி. women association என்ற கலாலயத்தின் முதல் நடன ஆசிரியையாகவும் இவர் கடமை ஆற்றியுள்ளார். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி, யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, தெஹிவளை பிரஸ்பற்றோரியன் தமிழ் மகாவித்தியாலயம், பம்பலப்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் இசை, நடன ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். மலையாள கலாலயத்திலும் (1964-1970) நடன ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். 1953ஆம் ஆண்டு நாட்டிய கலாமன்றம் என்ற பெயரில் நடனப் பள்ளிகளை அமைத்து பல மாணவர்களுக்கு நடனம் கற்பித்து வந்தார். மிகப் பிரபல்யமான நடனக் கலைஞர்களாகத் திகழ்ந்த பலரின் ஆரம்ப குருவாக இவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்துக்கும் ஒரு கலைப்பாலமாகத் திகழ்ந்தவர் விஜயலட்சுமி.

கண்டி மாநகரில் ஓவசிரியர் செல்லத்துரை கலைக் கல்லூரி ஒன்றினை நடாத்தி வந்தார் இக்காலம் பேராசிரியர் வித்தியானந்தன் இருந்த காலமாகும் அக்காலத்தில் அவர் நாட்டுக்கூத்தை சிறப்பாக நடாத்தி வந்தார். அந்த காலத்தில் இசையும் நடனமும் அங்கு வர வேண்டும் என்று இவரை அழைத்து இவருடைய நட்டுவாங்கத்தில் பல நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடாத்தி வந்தனர். கண்டி மாநகரில் கலையின் பாரம்பரியத்தை நிலைநாட்டிய ஆரம்ப கலைஞர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரியவர் விஜயலட்சுமி. கண்டி நகரின் கலாசாலையின் வளவாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார். ஒரு நட்டுவனராக மேடையில் அமர்ந்து தானே இசை உருப்படிகளை தன் இசைக்குரலினால் பாடிக்கொண்டே நட்டுவாங்கத்தை நிகழ்த்திய மரபுவழி கலைஞர் ஒரு நட்டுவனராக திருமதி விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை காணப்பட்டார்.

1960களில் நடனத்திற்கான பாடத்திட்டத்தினை அமைக்க உதவியாளராக ஏற்பாட்டுக்குழுவில் செயற்பட்டுள்ளார். இவரின் கலைச்சேவையானது வெறுமனே மேடை நிகழ்வுகளை நடாத்துதலோடு நின்று விடாது தன் கலைப்புலமையையும் செம்மையையும் வெளிப்படுத்தும் வகையில் நாட்டியத்திற்காக இசை உருப்படிகளை தானே ஸ்வரங்கள் அமைத்து தாளத்தோடு கொடுப்பித்து் அதற்கான நடன அமைப்பையும் செய்து நட்டுவாங்கத்துடன் தன் மாணவியரின் அரங்கேற்றம், நடன நிகழ்வுகளில் மேடையேற்றி உள்ளார். அந்த வகையில் விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை 1963ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி பொன்விழா நிகழ்விற்காக ஜன்னிய இராகங்களில் ஒன்றான கமாஸ் இராகத்தில் தில்லானா உருப்படியினை உருவாக்கினார். அம்மையாரின் உருப்படிகளின் உருவாக்கத்தில் உருவான முதல் உருப்படி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வர வரிசைகளைக்கொண்டு உருப்படியினை அமைத்தது மட்டுமன்றி 1971ஆம் ஆண்டு தன் மாணவியின் அரங்கேற்றத்திற்காக திருமுருகா திருவடி மறவாத தீனக்கருள் தருவாய் எனத் தொடங்கும் இசைப் பாடலை யமன் கல்யாணி இராகத்தில் உருவாக்கி அதற்குரிய இசை அமைப்பைச் செய்துள்ளார். இவ்வாறாக நடனத்திற்கான கவிதைப் பகுதியையும் அமைத்து உள்ளார். இவ்வாறாக நடனத்திற்கான கவிதைப் பகுதியையும் அமைத்து உள்ளார். இவ் உருப்படியானது கீர்த்தனமாகத் தொடங்கி லய வின்சாயமாக அமையப்பெற்ற உருப்படியாகும். இவ்வாறாக தன் கலை வாழ்வில் தான் கண்ட முதல் அரங்கப் பிரவேசத்திற்காக உருப்படி இது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். தன் நட்டுவாங்கத்துடன் இவ் உருப்படியை அவைக்கு வழங்கினார்.

தியாகராஜ சுவாமிகளால் பஞ்சனரத்ன கீர்த்தனைகளுக்கு கையாளப்பட்ட கனகராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வளராளி, ஸ்ரீ ஆகிய இராகங்களை தெரிவு செய்து தனது ஜதீஸ்வரத்தை தொகுத்து ஒரு மாலையாக அமைத்து உள்ளார். 1976ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற தனது இளைய மகளின் அரங்கேற்றத்திற்காக பிரதி மத்திம ராகமான சிம்மேந்திர மத்திம ராகத்தில் மிஸ்ர ஜம்பை தாளத்தில் அமையப்பெற்ற மேல காலத்தில் இதன் நடன அமைப்பைக் கொண்ட ஜதீஸ்வரத்தை உருவாக்கினார். விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை நடனக் கலைக்கு அரிய பல உருப்படிகளை உருவாக்கி நடனத்திற்கு தன்னால் ஆன பணியினை இனிதே நடத்தி உள்ளார். இந்தியாவிலிருந்து நடனக் கலையைக் கற்று நாடு திரும்பும் பெரும் கலைஞர்களுக்கும் நடனமணிகளுக்கும் அவர்களின் நடன நிகழ்வுகளுக்கு நட்டுவாங்கம் செய்துள்ளார். சிங்கள நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கும் நட்டுவாங்கம் செய்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இவர் தன் நாட்டிய பள்ளியின் ஊடாக பல நாட்டிய நாடகங்கள், மேடை நிகழ்ச்சிகள் பலவற்றைத் தயாரித்து வழங்கியுள்ளார். அத்தோடு தாமே உருவாக்கி தன் மாணவர்களைக் கொண்டு இவரே நட்டுவாங்கம் செய்து மேடையேற்றியுள்ளார். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏ கிரேட் கர்நாடக இசைக் கலைஞராக இருந்துள்ளார். ரேடியோ சிலோனில் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவு தயாரித்து வழங்கிய மாதர் பகுதி, இசைப் பயிற்சி, உரைச்சித்திரம் என்ற ஆரம்பகால நிகழ்ச்சிகளில் இவரது குரல் தொடர்ந்து பல ஆண்டுகள் ஒலித்தது. வர்த்தக சேவையில் பிரபல அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனம் அவர்களுடன் சேர்ந்து இவர் வழங்கிய கோபால் பல்பொடி விளம்பரம் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபலமானது.

விருதுகள்

குறிப்பு : மேற்படி பதிவு விஜயலட்சுமி, சண்முகம்பிள்ளை அவர்களின் மகன் விஸ்வநாதன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.