ஆளுமை:கமாலுத்தீன், ஹஸன் மீரா மொஹிதீன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மத் கமாலுத்தீன்
தந்தை ஹஸன் மீரா மொஹிதீன்
தாய் சித்திஜுவைரியா
பிறப்பு 1962.11.07
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மத் கமாலுத்தீன், ஹஸன் மீரா மொஹிதீன் (1962.11.07 - ) மாத்தளையைச் சேர்ந்த பாடகர், எழுத்தாளர். இவரது தந்தை ஹஸன் மீரா மொஹிதீன்; தாய் சித்திஜுவைரியா. மாத்தளை சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பாடசாலைக் காலத்தில் பாட ஆரம்பித்த இவர், இலங்கையின் சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் பீ. ஏச். அப்துல் ஹமீட் அவர்களால் இலங்கை வானொலியில் நடாத்தப்பட்டு வந்த உதயாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் 1981.04.26 ஆம் திகதி வானாலியில் அறிமுகப்படுத்தப்ப்ட்டார். பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் 14 தடவைகள் பங்குபற்றியதுடன் வெல்ல முடிந்தால் வெல்லுங்கள், இசை அலைகள் ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினார்.

1990 இல் களுத்துறை பண்டாரகமையில் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற மகாபொல பாடல் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றார். 1992-1993 இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய பாடல் போட்டியில் முதலாமிடம் பெற்றமை. 1992 இல் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் எம். ஏச். எம். அஷ்ரப் அவர்களால் இயற்றப்பட்ட கட்சிக் கீதத்தை இசைத்தார். 1999 இல் இலங்கை கிறிக்கற் அணியின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் பற்றி இவர் பாடிய பாடல்கள் சக்தி எப். எம் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. 2001.06.07 இல் இவரது ஒலி நாடாவான 'இன்னும் ஓர் இன்த்திஃபானா' என்னும் தலைப்பிலான பாலஸ்தீன விடுதலைக் கீதங்கள் வெளியாகின. எழுத்துத் துறையில் இவரது முதலாவது கவிதை 1985.05.19 இல் வீரகேசரி வார வெளியீடாக பிரசுரமான ஓடி வாரீர் உழைத்திடவே என்னும் மரபுக் கவிதை விளங்குகிறது. அன்றிலிருந்து 2 சிறுகதை, 122 கவிதை 3 தொடர் நவீனங்கள் என்பவற்றை வீரகேசரி, தினகரன், மித்திரன், தினமுரசு, ஜனனி, நவமணி ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகியது. மாத்தளை கமால், புன்னகை மன்னன், த்யானி, மனிதவர்த்தி என்னும் புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், தொடர் நவீனங்கள் எழுதியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் ஒலிநாடாவின் மூலம் விற்பனையாகியுள்ளன.

1999 இல் இரத்தினபுரி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ இசைநிலா பட்டமளித்துக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 33-36