ஆளுமை:கணேஷ், கருப்பண்ணபிள்ளை
பெயர் | கணேஷ் |
பிறப்பு | 1920.03.02 |
இறப்பு | 2004.06.05 |
ஊர் | அம்பிட்டி, கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணேஷ், கே (1920.03.02 - 2004.06.05) கண்டி, அம்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர். தன் ஆரம்பக்கல்வியை தோட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள Baptlst Mission பெண்கள் கல்லூரியில் சிங்களமொழி மூலமும், கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்திலும், திருவையாறு ராஜா கல்லூரியிலும் கல்வி கற்றார். தமிழ்மொழியைத் தனது தாயார் மூலம் வீட்டிலேயே கற்றுத் தெளிந்துள்ளார். 1934ம் ஆண்டு முதல் இராமநாதபுரம் அரசரின் உறவினரான சேத்தூர் ஜமீந்தார் பாண்டித்துரை தேவர் அவர்களின் ஆதரவுடன் தொடங்கபெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் சிலகாலம் கல்வி பயின்றவர்.
தனது பன்னிரண்டாவது வயதில் 1932இல் ஆனந்தபோதினி என்ற பிரபல்யமான ஏட்டில் தனது எழுத்துப்பணியை ஆரம்பித்தவர். மணிக்கொடி,கலாமோகினி, கிராம ஊழியன் சக்தி, ஹனுமான், தென்றல் போன்ற சிற்றிலக்கிய ஏடுகளினூடாகத் தன் எழுத்துலக வாழ்வில் பயணித்துவந்தவர்.
நவசக்தி, லோகசக்தி போன்ற தமிழக இதழ்களில் கவிதைகள் எழுதினார். 1940களில் மணிக்கொடி இதழில் இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். வீரகேசரி, தேசாபிமானி ஆகியவற்றில் சிறுகதைகள் எழுதினார். 1940களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஆசிரியர் குழுவிலும், 1950களில் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணியாற்றினார். கணேஷ் தமிழகத்திலும் இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1940களின் நடுப்பகுதியில் இலங்கை வந்த எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் முன்னிலையில் இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். சுவாமி விபுலாநந்தரைத் தலைவராகக் கொண்ட இச்சங்கத்தின் செயலாளராக கணேஷ் விளங்கினார்.
தீண்டத்தகாதவன் (முல்க்ராஜின் ஆங்கிலப் புதினம் Untouchables (1947) ,குங்குமப்பூ (1956, கே. ஏ. அப்பாசின் புதினம்),அஜந்தா (கே. ஏ. அப்பாசின் புதினம்), ஹோசிமின் கவிதைகள் (1964), லூசுன் சிறுகதைகள் போன்ற நூல்கள் மொழிபெயர்ப்பு செய்த நூல்களாகும்.
இவரின் பணிகளுக்காக இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளதோடு இலக்கியச் செம்மல் (1991), தேசிய விருது ,கலாபூஷணம் (1995), தேசிய விருது ,விபவியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதுகள் இரு முறை. கனடாவின் 'இலக்கியத் தோட்டத்தினால்' 2003 ஆம் ஆண்டுக்கான இயல் விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 74-75
- நூலக எண்: 1663 பக்கங்கள் 83-88
- நூலக எண்: 15515 பக்கங்கள் 69
- நூலக எண்: 16488 பக்கங்கள் 43-44