நிறுவனம்:யாழ்/ இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் இணுவில்
முகவரி இணுவில், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் உள்வீதியில் எல்லா கடவுளர்களுக்கு ஆலயமும், வெளிவீதியில் திருமடமும், சின்னத்தம்பிப் புலவர் அரங்கும் அமைக்கப்பட்டன.

நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாய் நடைபெற்று வருகின்றன. ஆண்டுத்திருவிழா, ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை என்பன மிகச்சிறப்பாய் ஆலயத்தே கொண்டாடப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி மாதத்தில் பன்னிரு நாட்கள் நடைபெற்று வருகின்றது. உத்தரநாளில் தீர்த்தத்திருவிழாவும் அதன் முதல்நாள் தேர்த்திருவிழாவும் பத்தாம், பதினோராம் நாட்களில் நடைபெறும். மகேசுவர பூசையும் இறுதி நாளில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது. பகல் சங்காபிடேகத்தோடு நடைபெறும் ஆடிப்பூரக் கற்பூரத் திருவிழாவும் மிகச்சிறப்பானது.

நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் நடைபெறும் மகிடாசுர சங்கார விழாவும், பத்தாம்நாள் மானம்பூ விழாவும் இத்திருத்தலத்திற்கு சிறப்புத் தருவன. புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் அம்பு போடுதல் மற்றும் வன்னிமர வாழை வெட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவெம்பாவை வழிபாடு நாள்தொறும் அதிகாலை மூன்று மணி தொடக்கம் ஆறு மணிவரை நிகழும். நவராத்திரியை அடுத்து நவசக்தி சிறப்பு வழிபாடும் பூரணை நாளில் திருவிளக்கு வழிபாடும் நிகழ்கின்றன.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் அம்மன் மகிடாசுரனை அழித்த நிகழ்வு கொண்டாடப்படுகின்றது. இது சூரன் போர் என மக்களால் அழைக்கப்படுகின்றது. அடுத்த நாள், விஜயதசமியன்று இக் கோயிலில் நடைபெறும் மானம்புத் திருவிழா புகழ் பெற்றதாகும்.

ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இச்சிவகாமி அம்மன் தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார். அவையாவன, சிவகாமியம்மை பதிகம், சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை சதகம், ஊஞ்சல், இரட்டைமணிமாலை, சிவகாமியம்மை துதி போன்றனவையாகும்.

வெளி இணைப்பு