ஆளுமை:றமீஸ், அப்துல்லா

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:00, 27 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றமீஸ் அப்துல்லா
தந்தை எ.எச்.எம்.அப்துல்லா
தாய் சுபைதா
பிறப்பு 1969.06.08
ஊர் சம்மாந்துறை, அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கலாநிதி றமீஸ் அப்துல்லா (பி.1969.06.08-) அவர்கள் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அப்துல்லா மற்றும் சுபைதா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை அல்மர்ஜான் வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை சம்மாந்துறை மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

இளமைக்காலத்தில் இலக்கிய ஈடுபாடும், வாசிக்கும் ஆர்வமும் இவரிடம் இயற்கைப் பண்புகளாக இருந்தன. இதற்கேற்றாற் போன்ற நண்பர்களும் இலக்கிய ஆசிரியர்களும் இவருக்குக் கிடைத்தார்கள். உயர்தரத்தில் ஒரு வருடம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று பின்னர் கலைப்பிரிவு துறையில் கல்வியை தொடர்ந்தார். அதில் சித்தி பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 1995 இல் தமிழ் சிறப்பு இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுகொண்டார். கற்கை முடிவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

1995 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையேற்ற றமீஸ் அப்துல்லா , தனது முதுதத்துவமாணிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களான சி. தில்லைநாதன், எம்.ஏ.நுஃமான் ஆகியோரின் வழிகாட்டலில் 2003 இல் பெற்றுக் கொண்டார். மேலும் பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், பேராசிரியர் சி. தில்லைநாதன் ஆகியோரின் கீழ் பொதுசனத் தொடர்பாடல் துறையில் கலாநிதிப் பட்டத்தை சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் 2010 இல் பெற்றதோடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை தலைவர், இணைப்பாளர் போன்ற உயர் பதவிகளை வகித்து, பின் 2014 இல் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

பாடசாலைக் காலத்தில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்தாலும் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்திலேயே இவரது இலக்கிய அறிவு செழுமையுற்றது எனலாம். முதுபெரும் எழுத்தாளர் கே . கணேஷ் தமிழாக்கம் செய்த, சீன எழுத்தாளர் "லாவ்ஷ" வின் 'கூனற்பிறை ' எனும் நாவலை திறனாய்வு செய்து இவர் ஆற்றிய உரை மிகுந்த பாராட்டையும், இலக்கிய அடையாளத்தையும் இவருக்குப் பெற்றுத்தந்தது.

பேராசிரியர் சி. தில்லை நாதனின் உறவால் கம்பர் மீது ஈடுபாடு கொண்ட இவர், சிறந்த தமிழ்த்துறை மாணவருக்கான ஆறுமுக நாவலர் விருதினையும் 1995 இல் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவரின் ஆரம்பகாலக் கட்டுரைகள் 1990 களில் நேசன், தினகரன் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்தன. ஜே. பௌஸ்தீனை ஆசிரியராகக் கொண்டு கொழும்பிலிருந்து வெளிவந்த நேசன் பத்திரிகையில் 'கீழ்வானில்' என்ற மகுடத்தின் கீழ் ஈழத்து இலக்கிய உலகிற்கு வளம்சேர்த்த ஈழமேகம் பக்கீர்த்தம்பி, ஆ.மு. ஷரிபுத்தீன், அ.ஸ. அப்துஸ் ஸமது, மருதூர்க் கொத்தன், பஸீல் காரியப்பர் ஆகியோரின் பங்களிப்புக்கள் குறித்து இவர் எழுதிய தொடர் பலரது கவனத்தையும் ஈர்த்ததொன்றாகும்.

தினகரனில் வெளிவந்த பேராசிரியர்களான க. கைலாசபதி, எம்.எம். உவைஸ் குறித்து எழுதிய கட்டுரைகளும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், நாட்டாரியல் குறித்த கட்டுரைகளும் இவரது ஆளுமையின் வெளிப்பாடுகளாக அமைந்தன. பேராசிரியர் கா. சிவத்தம்பி, வீ. ஆனந்தன் போன்றோரின் வழிகாட்டலில் நாட்டாரியல், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் மீதான இவரது ஆர்வம் பலதளங்களிலும் வெளிப்பட்டது.

தனது இளங்கலை மாணிப் பட்டத்திற்காக "கிழக்கிலங்கை கிராமிய இலக்கியத்தில் முஸ்லிம் பண்பாட்டுச் செல்வாக்கு" என்னும் தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வேடு, நூல்வடிவம் பெற்று மல்லிகைப் பந்தல் வெளியீடாக "கிழக்கிலங்கைக் கிராமியம்" (2001) என்ற தலைப்பில் வெளியானது. முதன்நிலை விரிவுரையாளராக இருந்து "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்" இப் பல்கலைக்கழகத்தில் போதிக்கப்படுவதோடு, இவ்விலக்கியம் தொடர்பான ஆய்வுப் பணிகளும் இவரால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

இத்துறை சார்பான ஆய்வுக் கட்டுரைகள் பலவும் தேசிய, சர்வதேச மாநாடுகளில் இவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் க. இரகுபரனுடன் இணைப்பதிப்பாளராக இருந்து தொகுக்கப்பட்ட "தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் அடையாளம்" (2017) என்ற நூல் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றதொன்றாகும். இவரினால் அவ்வப்போது எழுதிய நவீன கவிதைகளின் தொகுப்பாக வாஸ்தவம் 2011 இல் வெளியாகியது. சிறுகதைகள் மீது இவருக்கிருந்த நாட்டம் பின்னர் சிறுகதை ஆய்வாளராகவும் இவரை பரிணமிக்கச் செய்தது. இவ்வகையில் திறனாய்வுப் பார்வைகளுடன் கூடியதாக இவரால் எழுதப்பட்ட "அம்பாறை மாவட்ட சிறுகதை ஆளுமைகள்" என்னும் நூல் 2012 இல் வெளிவந்தது. பத்திரிகை மற்றும் இதழியல் துறைகளில் ஆர்வத்துடன் இயங்கும் இவர், அவை தொடர்பான ஆய்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருபவர் ஆவார். இவ்வகையில் வெளிவந்த "இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் (1841-1950)" (2012) என்னும் நூல், இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்பாக இதுவரை வெளிவந்த நூல்களிலிருந்து வேறுபட்டு பல்வேறு புதிய தகவல்களையும், அறியப்படாத பத்திரிகைகள் பற்றிய விபரங்களையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தினகரன் நாளிதழில் இவரால் எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு "எண்ணப் பெருவெளி" (2018) என்னும் நூலாக வெளிவந்தது. சமூகம், அரசியல், கலை, இலக்கியம் என்றவாறாக எழுதப்பட்ட 102 பத்திகள் இந்நூலில் காணப்படுகின்றன. இவ்வகையில் முஸ்லிம் அரசியல், நல்லிணக்கம், சமூக இணக்கப்பாடு முதலிய எழுத்துச் செ யற்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டி வருபவராக றமீஸ் அப்துல்லா அறியப்படுகின்றார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆய்வரங்குகள், தமிழ்ச்சங்க செயற்பாடுகள் பலவற்றிலும் றமீஸ் அப்துல்லாவின் பங்காற்றுதல்கள் குறிப்பிடத்தக்கனவாகும். கிழக்கிலங்கையின் அடையாளம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பார்வை, நாட்டாரியல் கூறுகள் முதலிய ஆய்வரங்குகளை நெறிப்படுத்துவதில் இருந்து, கட்டுரை சமர்ப்பித்தல், தொகுதியாக்கம் செய்தல் என்பன வரையான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கதாகும்.

றமீஸ் அப்துல்லா தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊடகவியல்துறை டிப்ளோமா கற்கைநெறியின் வளவாளராகவும், இணைப்பாளராகவும் இவர் தொடர்ந்து கடமையாற்றி வருவதுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியர் என்பதோடு முதலாவது சிரேஷ்ட பேராசிரியர் எனும் சிறப்பினையும் 2023 இல் பெற்றுள்ளார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:றமீஸ்,_அப்துல்லா&oldid=617738" இருந்து மீள்விக்கப்பட்டது