ஆளுமை:தனிநாயகம் அடிகளார், நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு
பெயர் | தனிநாயகம் அடிகளார் |
தந்தை | நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு |
தாய் | சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை |
பிறப்பு | 1913.08.02 |
இறப்பு | 1980.09.01 |
ஊர் | ஊர்காவற்துறை |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தனிநாயகம் அடிகளார், நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு (1913.08.02 - 1980.09.01) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு; தாய் சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை. இவரது இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். இவர் தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும் ஆங்கில மொழிக் கல்வி பயின்றார்.
1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார். இக்காலத்தில் ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஸ்பானியம், போத்துக்கீயம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து ரஷ்சியம், கிரேக்கம், இபுரு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார். திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோம் நகரில் வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று The Carthaginian Clergy என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார். இவ்வாய்வுக் கட்டுரை 1960இல் நூல் வடிவில் வெளியானது. 1945ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும் எடுத்த முடிவினால் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அங்கு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். மேலும் தூத்துக்குடியில் பணியாற்றிய காலத்தில் தனிநாயகம் அடிகளார் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினையும், சென்னையில் "தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்" (Academy of Tamil Culture) என்ற அமைப்பையும் தோற்றுவித்து சிறிது காலம் அதன் ஆசிரியராக கடமையாற்றினார்.
தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு ஜப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, எக்குவடோர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் ஆண்டிலேயே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தினார். இவரால் The Carthaginian Clergy, Nature in the ancient poetry, Aspects of Tamil Humanism, Indian thought and Roman Stoicism, தமிழ்த்தூது, உலக ஒழுக்கவியலில் திருக்குறள் போன்ற பல நூல்கள் வெளியிடப்பட்டது.
1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரது சிலை ஒன்றும் தமிழகக் கல்வியமைச்சர் அரங்கநாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நெடுந்தீவு மக்கள் தமது மண்ணின் மைந்தனாகிய தனிநாயகம் அடிகளுக்கு ஆளுயர சிலை அமைத்துள்ளனர். 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனிநாயக அடிகளின் தமிழ்ச் சேவையினை நினைவு கூர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு இறப்புக்குப் பின்னரான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. சென்னையில் 2013 பெப்ரவரி 16 அன்று தனிநாயகம் அடிகளாரின் நினைவை போற்றும் வகையில் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 116-124
- நூலக எண்: 4413 பக்கங்கள் 15-21
- நூலக எண்: 15515 பக்கங்கள் 18-20
- நூலக எண்: 15514 பக்கங்கள் 40-45