"ஆளுமை:வள்ளியம்மை, சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை1| பெயர்=வள்ளியம்மை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:42, 25 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

பெயர் வள்ளியம்மை
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் மானிப்பாய்
வகை எழுத்தாளர், அரசியல் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வள்ளியம்மை சுப்பிரமணியம் யாழ்ப்பாண மாவட்டம், சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாக‍க் கொண்டவர். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கற்கும் காலத்திலேயே எழுத்தார்வம் மிக்கவராக திகழ்ந்த இவர் பண்டிதர் படிப்பினை மேற்கொண்டு பால பண்டிதர் தேர்வில் சித்தி பெற்றார். நெசவுக் கற்கை நெறியில் பயின்று நெசவு ஆசிரியராக பல்வேறு ஊர்களில் பணிபுரிந்தார். 1962 இல் கொல்லங்கலட்டியைச் சேர்ந்த பொதுவுடமைவாதியான கே. ஏ. சுப்பிரமணியம் என்பவரைக் காதலித்து கலப்பு திருமணம் புரிந்த இவரது திருமணம் சீர்திருத்த திருமணமாக அமைந்த‍து. அரிவாளும் சம்மட்டியுமே தாலியாக அமைந்த‍து. சத்தியராசன் (மீரான் மாஸ்டர்), சத்தியமலர், சத்தியகீர்த்தி என மூன்று பிள்ளைகளைப் பெற்றார். ஒரு சமூகப் போராளியாக சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் தலைமை தாங்கிய துணைவருக்கு உற்ற துணையாக இருந்து பல இன்னல்களையும் சுமைகளையும் சுமந்து வாழ்ந்து வந்தவர். இனப்போர்க் காலத்தில் மூத்த மகன் மீரான் மாஸ்டர் இனவிடுதலைப் பாதையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அமைப்புடன் இணைந்தார். இதனால் 1984 டிசம்பரில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987க்குப் பிறகும் அவர் விடுவிக்கப்படவில்லை. வள்ளியம்மையின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் கோரிக்கைகள் மூலம் பன்னாட்டு மன்னிப்பு அவை தலையிட்டு அவரை விடுவித்தது. பின் தமிழகத்தில் நடந்த வாகன விபத்தில் மீரான் மாஸ்டர் இறந்து போனார். வள்ளியம்மை சிங்கப்பூரில் வசித்தபோது தனது எழுத்துப் பணியை மீண்டும் ஆரம்பித்தார். தற்போது 82 வயதில் மீள வந்து, தனது மகளுடன் இலங்கை சுழிபுரம் சத்தியமனையில் வசித்து வருகிறார். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எழுத்தாற்றலை விருத்தி செய்த இவர் பண்டிதர் தேர்வுக்காக கற்ற காலத்தில் எழுதிய சிறுகதைகள் வீரகேசரி, கலைமதி, கலைச்செல்வி, ஜனசக்தி ஆகிய இதழ்களில் வெளிவந்தன. சிங்கப்பூரில் கடற்கரைச் சாலை கவிமாலை அமைப்புடன் இணைந்து பல கவிதைகளை யாத்து வாசித்துள்ளார். விவாத அரங்குகளில் உரையாற்றியுள்ளார். இவரது பள்ளிக்கூட அனுபவங்களை தொகுத்து "பசுமையான நினைவுகளின் பண்ணாகம் மெய்கண்டான்" எனும் நூலை 2019 இல் எழுதியுள்ளார். இவரது கவிதைகளையும் சிறுகதைகளையும் தொகுத்து நவம்பர் 2019 ல் தேசிய கலை இலக்கியப் பேரவை, "வெற்றிக்கு வலிகள் தேவை" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளது. "ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள்" நூலிலும் இவரது கவிதை பிரசுரமானது. தொடர்ந்தும் தனது துணைவருடனான வாழ்க்கைப் பயணத்தை "வாழ்வின் சந்திப்புகள்" என்ற தலைப்பில் தொடராக முகநூலில் எழுதிக்கொண்டிருக்கின்றார். நெசவு ஆசிரியராக பணியாற்றிய போது செல்லும் கிராமங்களில் எல்லாம் தனது மாணவிகளை வழிப்படுத்துவதில் ஆற்றல் மிக்கவராக திகழ்ந்துள்ளார். கணவரின் தலைமறைவு வாழ்வில் பல இன்னல்களையும் தாங்கியவர். இளமையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளிலும் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் இருந்து செயல்பட்டுள்ளார்.