"ஆளுமை:ஶ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீகாந்தல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:03, 16 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஶ்ரீகாந்தலட்சுமி |
தந்தை | அருளானந்தம் |
தாய் | ஜெயலட்சுமி |
பிறப்பு | 1961.04.08 |
இறப்பு | 2019.04.28 |
ஊர் | இணுவில் |
வகை | நூலகவியளாலர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஶ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் (1961.04.08-2019.04.28) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளானந்தம்; தாய் ஜெயலட்சுமி. இவர் இணுவில் மத்திய கல்லூரியான, இணுவில் சைவ மகாஜனா வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வியும், சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் இடைநிலைக் கல்வியும் பெற்று முதுநிலை மாணவ முதல்வியாக இருந்தவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணிப் பட்டம் பெற்ற பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் பட்டப் பின் பயிற்சி பட்டம் (Post Graduate Degree) பெற்றார். அதன் பின் இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இரா. அரங்கநாதன் நிறுவிய ஆவணமாக்க ஆய்வு மற்றும் பயிற்சி நடுவத்தில் (Documentation Research and Training Centre) நூலகவியல் ஆய்வு சார் மேலதிக தகைமை பெற்றார்.
ஸ்ரீகாந்தலட்சுமி கிராம சூழலில் நிலப்பிரபுத்துவப் பாரம்பரியக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, பெண்கள் கல்விக்கு வெளியூருக்குச் செல்வது அரிதாயிருந்த காலத்தில் அவர் இந்தியாவுக்கு மேற்படிப்புக்குச் சென்றார். இலங்கையைப் பொறுத்தவரை, தமிழில் நூலகவியல் சார்ந்த முக்கிய, அடிப்படை அறிவுசார் ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கிய 1980களில், ஆவணவாக்கம், தகவல் அறிவியல், நூல்விபரவியல், சொற்பொருளாய்வுக் களஞ்சியம் அமைத்தல் போன்ற நவீனத் துறைகளில் தேர்ச்சி பெற்று 1989இலேயே இலங்கை திரும்பிய ஸ்ரீகாந்தலட்சுமி, அதே ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் துணை நூலகரானார். 1995 இடப்பெயர்வின் போது வன்னிக்குச் சென்ற அவர் பெண்ணியம், ஈழப் போராட்டம், ஊடகவியல், இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். இவை சார்ந்து தொடர்ந்து எழுதியும் வந்தார். 2002இற்குப் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி 2008இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்காலிக நூலகராகவும் 2012இல் பிரதம நூலகராக இருந்தார். 2017இல் இலங்கை நூலகச் சங்கத்தின் முதல் தமிழ்த் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
நூலகவியலைத் தெளிவாக வரையறுத்து வழிகாட்டும் 15 நூல்களையும் இன்னும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழரின் அறிவு வளங்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு ஆவணப்படுத்தினார். தன் சொந்த வளங்களை இப்பணியில் பயன்படுத்தி ஓர் அருமையான அரும்பொருட்கள் சேகரிப்பினை உருவாக்கியுள்ளார். நூலக நிறுவனத்தின் ஆரம்ப காலம் முதல் பங்களித்து, ஆளுகைசபையிலும் பங்குவகித்த இவர், நூலகச் சேகரங்களைப் பகுப்பாக்கம் செய்து ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்காற்றி வந்தார். இவர் நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் அமைப்பாளரும் (Founder, Foundation for Library Awareness) அறிதூண்டல் மையத்தின் இயக்குநரும் (Director, Knowledge Stimulation Center) ஆவார். நூலகவியல் ஆய்விலும், கற்பித்தலிலும் முறையான பயிற்சியையும் ஆழ்ந்த அனுபவத்தையும் கொண்ட இவர் ஈழத்து தமிழ் நூலகவியல் துறையை உலகத் தரத்துக்கு உயர்த்தும் நோக்குடன் தனது வாழ்நாள் முழுதும் செயற்பட்டு வந்தார். மாணவர்களை பாடத்திட்டத்துக்கு அப்பால் சிந்திக்க, செயற்பட ஊக்கப்படுத்தினார். நூல்களையும், நூலகங்களையும், ஆவணப்படுத்தலையும், அறிவுவளர்த்தலையும், சமூகமாற்ற மற்றும் செழுமை படுத்தும் செயல்பாடுகளாக எண்ணி, பாரிய சவால்களுக்கிடையில் யாழ்பான சமூகத்திலும், இலங்கையில் நாடளாவிய ரீதியிலும், பெரும் நிறுவனங்கள் முதல், ஒரு பள்ளி மாணவி வரை கொண்டு சென்ற முக்கிய பெண் ஆளுமையாக ஸ்ரீகாந்தலட்சுமி நம்முன் இருகின்றார், என்றும் இருப்பார்.
இவற்றையும் பார்க்கவும்