ஆளுமை: விமலா மணிவாசகன்
பெயர் | விமலா |
தந்தை | வயித்தியலிங்கம் |
தாய் | அன்னபூரணி |
பிறப்பு | 1955.06.05 |
இறப்பு | - |
ஊர் | நீராவியடி |
வகை | பழைய மாணவி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருமதி விமலா மணிவாசகன் 1955.06.05 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீராவியடியில் பிறந்தார். இவரது தந்தை வயித்தியலிங்கம், தாயார் அன்னபூரணி ஆவார். இவர் தனது ஆரம்பக்கல்வியை இந்து தமிழ்கலவன் பாடசாலையிலும் (யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை) உயர்கல்வியை யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். இவரது தந்தையார் தற்காலியமக யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். க.பொ.த சாதாரணப் பரீட்சையை முடித்துவிட்டு தையல், வீட்டு விஞ்ஞானம் என்பனவற்றுடன் தாயார் நிர்வாகம் செய்த லக்தீவா என்ற நெசவாலையில் சிலகாலம் பணிபுரிந்து குடும்ப வாழ்க்கைக்குத் தன்னைத் தாயார் படுத்தினார். சிறு வயதிலிருந்தே பண்பும் தற்துணிவும், நேர்மையும். நல்ல உள்ளவராகவும் விளங்கினார். இவர் பாடசாலை படிக்கும் காலத்திலேயே திருமணவாழ்வில் இணைந்தார். பொறியியலாளராகக் கடமையாற்றிய திரு. கந்தையா மணிவாசகனைக் கரம்பற்றி இல்லற வாழ்வை இனிதே வாழ்ந்து, எட்டு வருடங்களின் பின்பு 1981.11.07 இல் வாசுகி என்னும் பெண் மகவைப் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். 1983ஆம் வருடம் நாட்டின் நடைபெற்ற வன்செயல் காரணமாக ஜூலை மாதம் 29ஆம் திகதி இவரின் கணவர் மணிவாசகன் தமது 36வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இதன் பின்னர் இவர் தனது பெற்றோர்களே தஞ்சமென யாழ்ப்பாணம் வந்து அவர்களுடன் தங்கினார். தமது மகள் வாசுகியையும் தான் கற்ற யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலையில் சேர்த்து கல்வி புகட்டினார். துரதிஷ்டவசமாக இவரின் தந்தை 1988ஆம் ஆண்டு சிவபதம் அடைந்தார். இவர் தனது பெற்றோருடனும், சகோதரருடனும் வாழ்ந்து வந்தார். தரம் 3இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போது 1990.03.08 இல் இறைவனடி சேர்ந்த மகள் வாசுகி மணிவாசகனின் இழப்பு இவருக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று. இக்காலகட்டத்தில் கணணி பயின்று, யாழ்.இந்து மகளிர் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் வெளியிடும் 'யாழ் நாதம்' சஞ்சிகைகளை வடிவமைத்து பெரிதும் உதவினார். தனது மகளின் நினைவாக யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலையில் சுத்தம், சுகாதாரம், ஒழுக்கம் என்பவற்றில் சிறந்து விளங்கும் மூன்று மாணவர்களுக்கும் பரிசளித்தார். அத்தோடு ஒவ்வொரு வருடப் பரிசளிப்பு விழாவுக்கும் தமது பங்களிப்பைச் செய்து வருகிறார். அத்தோடு நில்லாமல் ஒரு கணணியும், நூலகத்திற்குத் தேவையான மாணவர்களின் தமிழ், ஆங்கில வாசிப்புத் திறனை மேம்படுத்த பல நூல்களையும், நாற்பது விரிவுரை மண்டபக் கதிரைகளையும் அன்பளிப்பாக வழங்கினார்.
இவர் தமது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் தமது கணவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை. யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கும், கொழும்பு பழைய மாணவர் சங்கத்திற்கும் இன்று வரை உறுதுணையாக இருந்து வருகிறார். இருந்தும் அன்று தொடக்கம் இன்றுவரை தனது மகள் வாசுகியின் பெயரால், வருடந்தோறும், தனது மகளை நினைவுகூர்ந்து, இப்பாடசாலை மாணவர்களின் வாசிப்புத்திறனை விருத்தி செய்யும் நோக்கில் ஆரம்பப்பாடசாலை மாணவருக்கேற்ற, தமிழ், ஆங்கில நூ ல்கள் சஞ்சிகைகள் வழங்கிக் கொண்டிருந்தார். இவருடன் இணைந்து இவரின் தாயார் அன்னபூரணி அம்மையார் அவர்கள், தனது பேத்தியின் ஞாபகார்த்தமாகத் தமது கைவண்ணத்தில் தாமாக தரம் 1,2,3 வகுப்பு மாணவருக்கு ஏற்ற தமிழ், ஆங்கில எழுத்துக்களை, இனங்காணும் கற்றல் உபகரணங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார்.
இவர் யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு, உபபொருளாளராகவும் கடமையாற்றுகின்றார். இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு, உதவியுடன் இப்பாடசாலை மாணவர்களை இன்றைய உலகமயமாக்கலுக்கு இயைவுபடச் செய்ய வேண்டுமென்ற நோக்கில், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வழங்கியுள்ளார். வெள்ளிவிழா மலர்க்குழுவிலும் அங்கத்தவராக இருந்து செயற்படுகிறார். பாடசாலையின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றும் தொண்டு மகத்தானது. இவருடைய செயற்பாடுகள் இப்பாடசாலை வரலாற்றில் இடம் பெற வேண்டியது அவசியமாகும். இவர் தமது மகள் வாசுகி மணிவாசகன் ஞாபகார்த்தமாக இப் பாடசாலை சிறுவர்களின் வாசிப்புத் திறனை விருத்தி செய்யும் நோக்கோடு, சிறுவர்களுக்கேற்ற தமிழ், ஆங்கில நூல்களை வழங்கி வந்துள்ளார். அத்துடன் கணனி ஒன்றையும் அன்பளிப்புச் செய்துள்ளார். இதைவிட ருபா 50,000 தேசிய சேமிப்பு வங்கியில் நிலையான நிதியம் ஒன்றில் வைப்பு செய்து அதன் வட்டியில் பரிசளிப்பதற்கும் ஆவண செய்துள்ளார். வெள்ளி விழாவினை சிறப்பிக்க யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையின் வளர்ச்சியினை வெளிக்கொணர மலரினை வெளியிட்டோம். அவ் வெள்ளிவிழா மலர்க்குழு உறுப்பினராக விமலா மணிவாசகன் அவர்கள் திறம்பட செயற்பட்டார். எமது பாடசாலையின் வெள்ளிவிழா மலரினை கொழும்பில் உள்ள யூனி ஆட்ஸ் பதிப்பகத்தில் அச்சிட்டு உரிய காலத்தில் வெளியிட நிதி உதவி மற்றும் சரீர உதவி புரிந்தமையினை என்றும் எம்மால் மறக்க முடியாது. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிக்கும் இவரை அழைத்து, இவர் கைகளினால் மாணவச் செல்வங்களுக்கு பரிசில்களை வழங்கினோம். இவரும் இவரது சகோதரியான திருமதி. சிவகாமி அம்பலவாணரும் யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், கொழும்பு, எமது பாடசாலை பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து நிதி பங்களிப்புச் செய்ய அயராது பாடுபட்டனர். அதில் குறிப்பிட்டுக் கூறத்தக்கது, உலக சுற்றாடல் தினத்துக்கு கொழும்பு சென்ற மாணவர்களை உபசரித்து, தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தில் வந்த பணப்பரிசு தொகையுடன் மேலதிகமாக பணம் போட்டு யமகா ஓகன் கொள்முதல் செய்து தந்தார்கள். அத்தடன் எமது வேண்டுகோளுக்கு இணங்க மேலிருந்து படம் காட்டும் கருவி ஒன்றையும் வேண்டி தந்தார்கள். இதைவிட ஒரு லட்சம் ரூபாவை தேசிய சேமிப்பு வங்கியில் நிலையான நிதியம் ஒன்றில் வைப்பு செய்து அதன் வட்டியில் வறிய மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு வழிசெய்து தந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வந்து செல்லும் போது தாய் பாடசாலையான யாழ். இந்து மகளிர் கல்லூரியினையும், சேய் பாடசாலையான யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையினையும் பார்வையிட்டு தேவையான உதவியினை செய்து வருவதில் இவருக்கு நிகர் யாருமில்லை என்றே கூறலாம். விமலாமணிவாசகனுக்கு, 3 சகோதரிகள், 2 சகோதரர்கள். அனைவரும் கல்வித் துறையில் தடம்பதித்து பெரும் உத்தியோகத்தில் இருந்தவர்கள். மூத்த சகோதரி சிவகாமி யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்று கல்லூரியிலிருந்து முதல் தடவையாக இலங்கை பல்கலைக் கழகத்துள் விஞ்ஞானத் துறை மாணவியாகப் பிரவேசித்தார். இவர் Micro-Biolo பல துறையில் சிறந்து விளங்கினார். இவர் இரசாயனப் பகுப்பாய்வளராகவும் பல ஆண்டுகள் கடமையாற்றினார். திட்டமிடல் அமைச்சில் கடமையாற்றிய சிறந்த கல்விமானும், சமூக சேவையாளருமான திரு அம்பலவாணரின் மனைவி. இவர் தற்சமயம் நியூ சீலாந்தில் பணிபுரிகிறார். விமலாவின் சகோதரர் கோபால் சங்கரப்பிள்ளை பொறியியலாளராக இங்கிலாந்தில் கடமையாற்றியவர். மற்றுமொரு சகோதரரான மோகன் சுப்பிரமணியம் வர்த்தகத் துறைப் பட்டதாரி. ஆசிரிய ஆலோசகராக பல காலமாக பணிபுரிகின்றார். சகோதரி அம்பிகா பட்டம் பெற்று தகவல் தொழில் நுட்ப முகாமையாளராக புகழ் பெற்றவர். சகோதரி லீலா தவக்குமாரன் சிறந்த குடும்பத் தலைவி. பழையமாணவிகள் சங்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். துணைச் செயலாளராக, செயலாளராக, துணைப் பொருளாளராக, யாழ்நாத ஆசிரியராக அவர் பெருந் தொண்டாற்றினார். நேர்த்தியாக உடை உடுத்தி அதிகம் பேசாமால் ஒப்படைக்கப்பட்ட காரியங்களை ஒழுங்காக நிறைவேற்றி எல்லோரது பாராட்டையும் பெற்றார். சங்கம் நடத்திய விழாக்களில் முக்கிய பங்கேற்றார். அவர் பங்குபற்றிய நாடகங்களில் சிறப்பாக நடித்துப் பாராட்டுப் பெற்றார். யாழ்நாத விற்பனைக்கு பொறுப்பாக இருந்து நிதி சேகரித்துத் தந்தார். தாயார் சுகவீனமுற்ற போதிலும் அவரையும் கவனித்துக் கொண்டு முக்கிய சங்க அலுவல்களில் பங்கேற்றார். பழைய மாணவிகள் சங்கத்தின் வருடாந்த சஞ்சிகை வெளியீட்டில் விமலாவின் பங்கு அளப்பரியது. தட்டெழுத்துப் பயிற்சி என்று எதுவும் பெற்றிராத அவர் கணினியில் எழுத்துக்களை நேர்த்தியாக பதிவு செய்ய கடும் உழைப்பை மேற்கொண்டார். எவ்வித பிழைகளும் இல்லாமல் சஞ்சிகை பொலிவுடன் விளங்க அவர் பல ஆண்டுகள் அதனை வடிவமைத்துத் தந்தார். தாயார் கடும் சுகவீனமுற்ற போது பணிவிடை செய்வதற்காக சங்கப் பணிகளில் இருந்து விலகினார். இவரது அமைதியான, ஆக்கபூர்வமான பணிகளை கௌரவிக்கும் முகமாக சங்கம் 2014ம் ஆண்டு மே மாதத்தில் இவரைக் கௌரவித்தது. தொடர்ந்து தானும் புதல்வியும் கல்விகற்ற ஆரம்ப பாடசாலைக்கும், இந்து மகளிர் கல்லூரிக்கும் இவர் நிதி நன்கொடைகளை அவ்வப்போது வழங்கி வருவது குறிப்பிடத் தக்கதாகும். தனக்கென வாழாமல் பிறருக்கு உரியவளாக தன்னை மாற்றிக் கொண்டு ஆன்மீக நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இன்னும் அழகுத் தோற்றத்துடன் நடமாடும் விமலா மணிவாசகன் தேகநலத்துடன் தனது சீரிய வாழ்வைத் தொடர வேண்டும் 2019இல் தேசியமட்டத்தில் வெற்றி பெற்ற மாணவருக்கான தங்கப்பதக்கங்களை அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2021இல் 40 விரிவுரை மண்டபக் கதிரைகளை (LECTURE HALL CHAIRS) மனமுவந்து அன்பளிப்புச் செய்தமை எமது பாடசாலைக்கு ஒரு வரப்பிசாதமாகும். தற்போது கொழும்பில் வசித்துவரும் இவர் 2019, 2020, 2022 இல் இப் பாடசாலைக்கு வந்து நேரில் சந்தித்துத் தனது அன்பையும். அக்கறையையும் தெரிவித்தார். கணணியில் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி பெற்ற இவர் 2009இல் வெளியிடப்பட்ட ‘யாழ் நாதம் - இதழ் 09' இல் தொகுத்து எழுதிய 'திருக்கோணேஸ்வரர்' எனும் கட்டுரை இவ் ஆலயம் பற்றிய பல தகவல்களை நாம் அறிந்து கொள்ளக் கூடியவகையில் அமைந்திருந்தமை பாராட்டுக்குரிய அம்சமாகும். இதழ்-15 இல் ஆசிரியராகவும் இவர் திறம்பட செயற்பட்டார். 2010இல் நடைபெற்ற எமது கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நடுத்தோட்ட இராஜவரோதய விநாயகரின் கும்பாபிஷேகத்திற்குக் கொழும்பிலிருந்து வருகை தந்து தெற்பையணிந்து வழிபாடுகளில் கலந்து கொண்டமை இவரின் ஆன்மீக பற்றுதலையும், கல்லூரி விநாயகப் பெருமானில் இவர் கொண்டிருந்த பக்தியையும் நான் கண்டு வியந்த ஒரு விடயமாகும். எமது கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்து கல்லூரியின் பவளவிழாவை (2018) முன்னிட்டு வகுப்பறை கட்டிடத் தொகுதி ஒன்றை அமைத்தபொழுது அக்கட்டிடத்தின் அடிக்கல் (2015) நாட்டும் வைபவத்தில் இருந்து பால் காய்ச்சி படம் வைத்தல், திறப்புவிழா (2017) போன்ற எல்லா வைபவங்களிலும் பங்குபற்றிய தோடல்லாமல் தனது பங்களிப்புகளையும் நல்கியமை இவரது கல்லூரி மீதான அதீத அக்கறையையும் பற்றுதலையும் வெளிக்காட்டி நிற்கின்றன.