நிறுவனம்:ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருகோணமலை
முகவரி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திருகோணமலை நகரில், புகையிரத நிலையத்திற்குச் சமீபமாக வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கருகே இவ்வாலயம் இருக்கின்றது. சைவாலயங்கள் நிறைந்த திருகோணமலையிலுள்ள பழமையான கிருஷ்ணன் கோவில் இதுவாகும். வீரகத்திப் பிள்ளையார் கோவில் வரலாற்றில் கூறப்பட்டுள்ள திரு. பெரிய ராசகோன் முதலியாருடைய தருமக் காணியில் (வீரகத்திப்பிள்ளையார் கோவில் நிலம்) திரு. மாரிமுத்து நாயக்கரும், திருவிளங்க நகரத்தாரும் (வாணிபர்), ஊரவர்களும் கூடிப் பெருமாள் கோவிலைக் (கிருஷ்ணன் கோவில்) கட்டினார்கள். 1825 ஆம் ஆண்டில் சுற்றுமதிலும் அக்கிரகாரமும் கொண்டதாக இவ்வாலயம் அமைக்கப்பட்டது. கற்பக்கிரகமும், அர்த்தமண்டபமும் கருங்கற் திருப்பணியாக அழகிய தூபியுடன் கட்டப்பட்டிருக்கின்றது.

இலங்கையைப் பிரித்தானியர் ஆளத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அவர்கள் வைத்திருந்த தரைப்படையில் வட இந்தியர்களைக் கொண்ட படைப் பிரிவொன்றிருந்தது. (இவர்களைத் தலைப்பாக்கட்டிகள் என்று அக்காலத்தவர்கள் கூறுவார்கள்) இந்தப் படையைச் சேர்ந்தவர்கள் வைஷ்ணவர்கள். இவர்கள் தங்களுக்கென்று ஒரு வழிபாட்டுத் தலத்தை அமைக்க முற்பட்டார்கள். அந்த நாட்களில் தற்போது கிருஷ்ணன் கோவில் இருக்குமிடத்தில் மூன்று நாட்களாக ஆகாயத்தில் ஒரு கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவதானித்தார்கள். கருடன் பெரிய பெருமாளாகிய மகாவிஷ்ணுவின் வாகனம். ஆதலால் கருடன் வட்டமிட்ட அந்த இடத்தைத் தமது வழிபாட்டுத் தலமாக பெருமாளே காண்பித்ததாகக் கருதினார்கள். அந்த இடத்தை வீரகத்திப் பிள்ளையார் கோவில் உரிமையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். அந்த நாளில் இதைப் பற்றி எழுதப்பட்ட சாசனமொன்று இன்றுமிருக்கின்றது.

இவ்வாறு பெற்றுக்கொண்ட நிலத்தில் திருவிளங்க நகரத்தாரையும், ஆரியநாட்டாரையும் சேர்த்து கூட்டாக இந்த ஆலயத்தை அமைத்தார்கள். கருங்கற் திருப்பணியினாலான கற்பக்கிரகமும், அர்த்தமண்டபமும் அமைப்பதற்கு இந்தியாவிலிருந்து கருங்கற்கள் கொண்டுவரப்பட்டதாம். திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றில் இராமேஸ்வரம் கோவில் அமைப்பதற்கு திருகோணமலையிலிருந்தும் கருங்கற்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. அப்படியிருக்க இந்தக் கிருஷ்ணன் கோவில் கட்டுவதற்கு இந்தியாவிலிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. இராமபக்தனாகிய அனுமனால் தீவைக்கப்பட்டு எரிந்த இலங்கையிலுள்ள கற்கள் சுடுபட்ட கற்கள் என்ற காரணத்தால், வைஷ்ணவ பக்தர்கள் இந்தியாவிலிருந்து கற்களைக் கொண்டு வந்தார்களாம். அந்தக் கற்களால் கட்டப்பட்ட கோவில் இன்றுமிருக்கின்றது. தற்பொழுது மீள் கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றது.

வடஇந்தியப் படைவீரர்கள் ஆலயம் அமைப்பதற்கு உற்ற துணையாயிருந்தவர்கள் திருவிளங்க நகரத்தாரும், ஆரியநாட்டாருமாவர். இந்தப்படையினர் இந்தியாவுக்கு மீண்டு செல்ல வேண்டி நேர்ந்ததால், அக்காலத்தில் ஆரியநாட்டாரிடமும், திருவிளங்க நகரத்தாரிடமும் ஆலயப் பராமரிப்பை ஒப்படைத்துச் சென்றுவிட்டார்கள். அதன்பின் இவ்வாலயத்தில் பூஜை செய்து கொண்டிருந்த திரு. இரகுஐயருடன் சேர்ந்து ஆரியநாட்டாரும், திருவிளங்க நகரத்தாரும் 1837 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அந்த ஒப்பந்தத்தின்படி இரகுஐயர் பூசைப்பொறுப்பையும், மேலதிக அதிகாரத்தையும் பெற்று ஆலயத்தை நடத்திவந்தார்.

ஸ்ரீ இரகுஐயருக்குப்பின், ஸ்ரீமுத்துச்சாமிக் குருக்களும், அதன்பின் ஸ்ரீசுப்பையாக் குருக்களும் பூசை செய்து கொண்டு வந்தார்கள். இரகுஐயருடைய மகள் செல்வி. தர்மசம்வர்த்தனி அம்மாளை திரு. கா. பஞ்சநதக் குருக்கள் திருமணம் செய்தார். அதனால் உரிமைப்பிரகாரம் ஸ்ரீபஞ்சநதக் குருக்கள் இவ்வாலயத்தில் பூசைசெய்துவந்தார். பஞ்சநதக் குருக்களுக்குப்பின் அவருடைய புதல்வர் சிவஸ்ரீ ப. யோகீஸ்வரக் குருக்கள் ஆலயப் பொறுப்பையேற்று பூசை செய்து வந்தார். இவர் சிறந்த ஞானஸ்தர். ஆகையால் இவருடைய காலத்தில் ஆலயம் சிறந்த நிலையில் இருந்து வந்தது. அவருக்குதவியாக ஸ்ரீ பாலக்கிருஷ்ண ஐயரும் பூசை செய்து வந்ததாக அறியக் கிடக்கின்றது.

ஆதியிலமைக்கப்பட்ட ஆலயத்தில் காலத்திற்குக் காலம் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஆரியநாட்டாரரும், திருவிளங்க நகரத்தாரும் மகாமண்டபம், ஸ்நபன மண்டபம், ஸ்தம்பமண்டபம், வசந்தமண்டபம் என்பனவற்றைக் கட்டியிருக்கின்றார்கள். இரண்டாவது உலகயுத்தத்தின் தாக்கத்தால் ஆலயம் பராமரிப்பிழந்திருந்த போதிலும், நித்தியபூசைகள் நடைபெற்றுவந்தன. 1941 ஆம் ஆண்டு ஆலயத்தில் சில திருப்பணிகளைச் செய்து கும்பாபிஷேகம் செய்திருந்தார்கள். ஆனால் 1942 ஆம் ஆண்டில் ஜப்பானியருடைய குண்டு வீச்சினால் ஆலயப் பராமரிப்புச் சீர்குலைந்து விட்டது. பின்னர் 1980 ஆம் ஆண்டு பல திருப்பணிகள் செய்யப்பட்டு புனருத்தாரண மகாகும்பாபிஷேகம் நடைபெற்று இன்று சிறப்பாக ஆலயப் பூசை விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்த கும்பாபிஷேக பணிகள், பாலஸ்தானம் இடம்பெற்று, நடைபெற்று வருகின்றது.

ஆவணி மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தை முதல் நாளாகக்கொண்டு பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறுகின்றது. வைகாசித் திருவோணத்தில் கம்சன் கதை படிக்கப்பட்டு கிருஷ்ணபரமாத்மாவுக்கு உற்சவம் நடத்துவார்கள். வைகாசித் திருவோணத்தை கிருஷ்ணபரமாத்மாவின் அவதாரத் தின விழாவாகவும், அதனை அடுத்துவரும் ஐந்தாம் நாள் ருக்குமணி கல்யாண விழாவாகவும், ஆறாம் நாள் கம்சன்சுதை விழாவாகவும், ஏழாம் நாள் வாணாசுரன் போராகவும், பத்தாம் நாள் சத்தியபாமா கல்யாண விழாவாகவும் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. ஆவணிமாத ஜென்ம அஷ்டமியன்று உறியடிவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. புரட்டாதிச் சனிவாரம் நான்கு நாட்களிலும், கார்த்திகை விளக்கீடு அன்றும் இரவில் விசேட திருவிழாவும், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவும் திருப்பாவை விழாவும், ஒவ்வொரு ஏகாதசியிலும் திருவிழாவும் இவ்வாலயத்தில் நடைபெற்று ன்வருகின்றது. இவ்வாலயத்தில் கடைசியாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின்னர் இவ்வாலயச் சூழலில் ஒருவகையான அருட்பிரகாசம் காணப்படுகின்றது. மக்களுடைய ஆதரவும் பெருகி வருகின்றது.