நிறுவனம்:லக்ஷ்மி நாராயணர் ஆலயம்
பெயர் | லக்ஷ்மி நாராயணர் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | ஆத்திமோட்டை |
முகவரி | லக்ஷ்மி நாராயணர் ஆலயம், ஆத்திமோட்டை, திருகோணமலை |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
இவ்வாலயம் ஆத்திமோட்டைப்பகுதியில் நிலாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது பொன்னிறத்தில் பொற்கோவில் போல் காட்சியளிக்கின்றது. இவ்வாலயத்தின் மேற்பகுதி பொன்னிறமாகவும், கீழ்ப்பகுதி நீலநிறமாகவும் உள்ளது. திருக்கோணமலை நகரத்தில் வாழும் ஒரு நாராயண பக்தரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. 07 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு 2011ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இலங்கையிலுள்ள முக்கிய வைஷ்ணவ ஆலயம் இதுவாகும். திருக்கோணமலையிலுள்ள ஆயங்களுள் மிகப்பெரிய ஆலயம் இதுவாகும். வைஷ்ணவ சமய முறைப்படி இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ் ஆலயமானது லக்ஷ்மி நாராயணரினின் ஒரு மீள்பிரவேசமாகுமென இவ்வாலயத்தை அமைத்த நாராயணபக்தர் கூறுகின்றார். ஏனெனில் ஒரு காலத்தில் திருகோணமலையில் நாராயணர் ஆலயம் இருந்திருக்கின்றதென்றும், அவ் ஆலயத்தின் நாராயணர் சிலை இன்மைக்காலத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இவர் கூறுகின்றார். பகிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகிய மண்டபங்கள் இவ் ஆலயத்தில் அமைந்துள்ளன. பெரிய மணிக்கோபுரமும், கொடிக்கம்பமும் ஆலயத்தின் முன்பு அதன் வெளிப்புறத்தில் அமைந்துள்ளன. உள்வீதி, மாடவீதி, வெளிவீதி ஆகிய வீதிகள் இவ்வாலயத்தில் அமைந்துள்ளன. பெரியதொரு அன்னதான மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் ஐந்துகாலபூசை இவ் ஆலயத்தில் நடைபெறுகின்றது. கோ பூசை, காலைப்பூசை, உச்சிக்காலப்பூசை, சாயரட்சபூசை, சயனபூசை என்பவையே அவையாகும். தினமும் காலை 10.00 மணிக்கு சகஷ்ர நாம பூசை நடைபெறுகின்றது. ஆலயத்தின் பூசைகள் வைஷ்ணவ ஆச்சாரியர்களினாலேயே செய்யப்படுகின்றது. மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் நடைபெறுகின்றது. பக்தர்கள் 11 சனிக்கிழமைகளில் விளக்கெரித்து வழிபாடு செய்தால் எதிர்பார்க்கும் நல்லகாரியங்கள் நடைபெறுகின்றதாம்.
இவ்வாலயத்தில் வருடாந்த மகா உஉறசவம் ஆனி மாதத்தில் 11 நாட்கள் நடைபெறுகின்றது. 08ஆம் நாள் ஆனி உத்தரத்தன்று தேர்த்திருவிழா நடைபெறுகின்றது. 11ஆவது நாள் தீர்த்தம் ஆலயத்தின் வளவிலேயே இடம் பெறுகின்றது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூர் மக்கள், சிங்கள மக்கள், வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் ஆகியோர் இவ்வாலயத்தால் கவரப்பட்டு ஆலயத்தை தரிசிக்கின்றனர். பூசகர்கள், உதவியாளர்கள், கணக்காளர், களஞ்சியப்பொறுப்பாளர் ஆகியோரை உள்ளடக்கிய நிரந்தர ஊழியர் குழுவையும் இவ்வாலயம் கொண்டுள்ளது. வருடத்தில் ஒருதடவை இவ் ஆலயத்தின் வடக்கு வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்பட்டு, இவ்வாயிலூடாக நாராயண சுவாமி வெளிவந்து வீதி உலா வருவார்.
இந்த ஆலயம் திருக்கோணமலையின், முக்கிய இடங்களில் ஒன்றாக தற்பொழுது காணப்படுகின்றது.