கிறிஸ்டீனா வசந்தி, நேரு
பெயர் | கிறிஸ்டீனா வசந்தி |
தந்தை | சேவியர் |
தாய் | அருள் திரேஸ் |
பிறப்பு | 1961.11.19 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | கலைஞர், ஆய்வாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிறிஸ்டீனா வசந்தி, நேரு மட்டக்களப்பில் பிறந்த பெண் ஆளுமை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடன ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். இவரது குரு திருமதி.கமலா ஞானதாஸ் ஆவார். 1982 இல் நடனஆசிரியராக கடமை ஏற்று தனது கலைப்பட்டப்படிப்பினை பேராதனை பல்கலைக் கழகத்திலும், கல்வி டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக் கழகத்திலும், வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தர கலா வித்தகர் பட்டத்தினையும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மூன்று ஆண்டுகள் வீரமணி ஐயாவிடம் பரத நாட்டியத்தில் விஷேட பயிற்சியினையும் பரத நாட்டிய டிப்ளோமாவினை திருச்சிராப்பள்ளி பாரதிதாஸன் பல்கலைக் கழகத்திலும் அதே பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளதுடன், உளவளத்துணை டிப்ளோமாவை ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக் கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார்.
'”நிருத்திய கலாலயம்”' நாட்டியப் பள்ளியின் ஸ்தாபகராவார். இவரால் 30க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. தனது நாட்டியப் பள்ளியான நிருத்திய கலாலயம் ஆரம்பித்து 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டு வருடங்களுக்கொருமுறை தனது நடனப்பள்ளியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடன விழாக்களை முன்னெடுத்து நடாத்திவருகின்றார். மேலும் 1989ல் 'கலைக்கோயில்' நாட்டிய நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட நீ எதிர்கொண்டதேன் என்ற நாட்டிய நாடகத்தைப் பயிற்றுவித்தமைக்காக பேராயர் அதி வந்தனைக்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களால் பாராட்டி பொன்னாடை போர்த்தி கலை பரத சிகாமணி என்னும் பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் கடந்த 38 வருடங்களாக நடன ஆசிரியராகக் கடமையாற்றி இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தனது நடனக் கலையை கற்பித்துள்ளார். இவரது வழித்தோன்றல் வழி வந்த பல மாணவர்கள் இன்று நடனத்துறை ஆசிரியர்களாகவும் கலாசார, முகாமைத்துவ உத்தியோகஸ்தர்களாகவும் கடமையாற்றுகின்றனர் என்பது மட்டுமல்லாது, இவரால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களின் நடன ஆக்கங்கள் பல தேசிய மட்ட தமிழ்த் தினப்போட்டி, ஏனைய தேசிய மட்டப் போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
1992 இல் அகில இலங்கை ரீதியாக தமிழ் தினப்போட்டியில் தனிநடனம் நாட்டியநாடகம் இரண்டிலும் முதலாம் இடத்தினைப் பெற்று அன்றைய ஜனாதிபதி பிறேமதாசாவிடமிருந்து விருதினையும் பெற்றுக்கொண்டார். 2015 முதல் இன்றுவரை கலாசார பேரவையில் அங்கம் வகிக்கிறார்.
தேசிய கல்வி நிறுவகத்தில் க.பொ.த சாதாரணதர, உயர்தர பாடநூல் எழுத்தாளராகவும், தேசிய கல்விக் கல்லூரியில் 04 வருடங்கள் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். இதுவரை நடனத் துறை தொடர்பாக க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கான வினாவிடைப் புத்தகம் ஒன்றினையும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான வினாவிடைப் புத்தகங்கள் இரண்டினையும் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான இறுதி ஆண்டில் காலடி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
நுவரேலியா பிரதிஷ்குமார் நிறுவகத்தினரால் 2007ம் ஆண்டில் மாத்தளை நிருத்தியாஞ்சலி நிறுவகத்தினராலும் 'ஜெயாஞ்சலி விருது. (2012),
மாமாங்கப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினராலும்(2014-2016 வரை) நடனத் துறைக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் பிரதீபா விருதினை இரண்டு தடவைகள் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 2012, 2014 ஆம் ஆண்டு. மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகத்தினால் தேனக விருது - 2017.
குறிப்பு : மேற்படி பதிவு கிறிஸ்டீனா வசந்தி, நேரு அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.