ஆளுமை:வரதராஜன், சிவனடியான்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவனடியான் வரதராஜன்
தந்தை சிவனடியான்
தாய் தங்கப்பாக்கியம்
பிறப்பு 1973.11.12
ஊர் பாண்டிருப்பு , அம்பாறை
வகை எழுத்தாளர்
புனை பெயர் சிவ வரதன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிவனடியான் வரதராஜன் அவர்கள் (பி.1973.11.12) அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். எழுத்துத் துறையில் சிவ வரதன் என அழைக்கப்படுகிறார். இவர் சிவனடியான், தங்கப்பாக்கியம் தம்பதிகளுக்கு மகனாக 1973ம் ஆண்டு பாண்டிருப்பில் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் தரம் 5 ஆண்டு வரை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்திலும் அதன் பின் உயர்தரம் வரை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் பயின்றார். உயர்தரத்தில் வர்த்தகத் துறையை பயின்று பின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வணிகமானி பட்டம் பெற்றார். 2005ம் ஆண்டு திருக்கோயில் பிரதேச சபையில் நியமனம் பெற்று அங்கு 5 வருடங்கள் கடமையாற்றினார்.

அதன் பின் காரைதீவு பிரதேச சபையில் 3 வருடங்களும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் 5 வருடங்களும் கல்முனை நன்னடைத்தை பிரிவில் 5 வருடங்களும் தற்போது கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிந்து வருகின்றார். இவர் பாடசாலைக் காலத்திலிருந்தே எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறுவனாக இருந்த போது புகழ்பெற்ற கவிஞர் பாண்டியூரன் அவர்களுடன் வளர்ந்து அவருடைய எழுத்துக்களை வாசித்து அதை ஒப்புவித்து இலக்கிய துறையில் விருப்பத்தை உண்டாக்கிக் கொண்டார்.

பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் இலக்கிய பங்களிப்புகளை நிகழ்த்தியுள்ளார். 1994ம் ஆண்டு பாண்டிருப்பில் நவதர்ஷிகள் எனும் கலை இலக்கிய அமைப்பினை இவரும் சேர்ந்து உருவாக்கினார். அதில் புதிதாக கவிதை கட்டுரை போன்ற தினகரன் கவிதாசாரம், வீரகேசரி போன்றவற்றில் எழுத ஆரம்பித்தார். நவதர்ஷிகள் கலை இலக்கிய அமைப்பின் வெளியீடாக அதன் அங்கத்தவர்கள் 7 பேர் எழுதிய 25 கவிதைகளின் படைப்பாக சொந்த சுமை எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் பரராசு சுவாமித்தம்பி, அன்ரனி பால்ராஜ் எனும் பெயரில் உமா வரதராஜன் அவர்கள் சேர்ந்து அக்கரைப்பற்றில் இருந்து வெளியிடப்பட்ட களம் எனும் சஞ்சிகையிலே இவரது நத்தை சுவர் எனும் முதல் சிறுகதை பிரசுரிக்கப்பட்டது. அதன் பின்னர் வீரகேசரி, தினகரன், சரிநிகர் போன்ற பத்திரிகையில் எழுதினார். பல்கலைக்கழகத்தில் எழுவரின் சிறுகதை முகங்கள் எனும் பெயரில் இவரது சிறுகதை பிரசுரிக்கப்பட்டது.

இவரது சிறுகதைகள் களம், வியுகம், கதிரொளி போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளது. 1998 காலப்பகுதியில் குருட்டொளி எனும் சிறுகதை, மங்கித் தெரியும் சில முகங்கள் எனும் சிறுகதை போன்றன வெளிவந்ததாகும். இவர் சிறுகதை மட்டுமன்றி ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். அத்தோடு சொந்த கிராமத்தின் சமூக செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.

பாண்டிருப்பு சமூக அபிவிருத்தி அமைப்பு சங்கத்தின் உப தலைவராக செயற்பட்டு பொது விளையாட்டு மைதானம் உருவாக்கினார். பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக அமைப்பிலும் இவரது பங்களிப்பு இருந்தது. அதனோடு சேர்ந்து பாண்டிருப்பு பொது நூலகத்தை உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. அத்தோடு பாண்டிருப்பு பொது மயானம், பாண்டிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை போன்றன உருவாகவும் உழைத்துள்ளார்.