ஆளுமை:யோகானந்தன், கனகசூரியம்
பெயர் | கனகசூரியம் யோகானந்தன் |
தந்தை | கோபாலப்பிள்ளை கனகசூரியம் |
தாய் | கணபதிப்பிள்ளை கமலாம்பிகை |
பிறப்பு | 1961.11.12 |
ஊர் | சம்பூர், திருகோணமலை |
வகை | எழுத்தாளர் |
புனை பெயர் | சம்பூர்தாஸன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனகசூரியம் யோகானந்தன் அவர்கள் திருகோணமலையின் மூதூர் கிராமத்தில் சம்பூர் எனும் இடத்தில் 1961.11.12ஆம் திகதி கோபாலப்பிள்ளை கனகசூரியம் மற்றும் கணபதிப்பிள்ளை கமலாம்பிகை ஆகியோருக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று பெண் சகோதரிகள் உள்ளனர். இவர் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் சம்பூர்தாஸன் என்ற புனைபெயர் கொண்டும் அழைக்கப்படுகின்றார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை தரம் ஒன்று தொடக்கம் பதினொன்று வரை சம்பூர் தமிழ் மகா வித்தியாலயத்திலும், அதனைத் தொடர்ந்து உயர்கல்வியை புனித அந்தோனியார் மகா வித்தியாலயம் மற்றும் மூதூர் மத்திய கல்லூரி ஆகியவற்றிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த போது இரண்டாம் ஆண்டில் போட்டிப் பரீட்சை ஊடாக ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் தனது முதலாவது நியமனத்தை 1985 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் பத்தாம் திகதி நுவரெலியா கினிகத்தென என்னும் இடத்தில் உள்ள பாடசாலையில் தமிழ்ப்பாட ஆசிரியராக இணைந்து கொண்டார். பின்னர் 1989 ஆம் ஆண்டு சம்பூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்து, அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்திலும் பணியாற்றி அதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பணியாற்றினார்.
பின்னர் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 வரை சாம்பல்தீவு தமிழ் மகாவித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றி தனது அளப்பெரும் சேவையை ஆற்றிய இவர், உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் ஒரு வருடம் பிரதி அதிபராக பணியாற்றி அதனை தொடர்ந்து, லிங்கநகர் கோணலிங்கம் மகா வித்தியாலயத்திலும், தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா கல்லூரியிலும், சீனன்குடா தமிழ் வித்தியாலயத்திலும் அதிபராக பணியாற்றி 2021 ஆம் ஆண்டு 11 மாதம் 12ஆம் திகதி ஓய்வு பெற்றார்.
இவர் கவிதை எழுதுவதில் சிறப்பான ஆற்றலை கொண்டிருந்ததுடன், பட்டிமன்றம், கவியரங்கு போன்றவற்றிலும், நிகழ்வுகளில் அறிவிப்பாளராகவும் பல விடயங்களை முன்னின்று செய்கின்ற ஆளுமையாவார். இவரது முதலாவது கவிதை நூல் 2005 ஆம் ஆண்டு "உண்மை என்றும் உயிர் பெறும்" எனும் தலைப்பில் வெளிவந்தது. இது சாகித்திய விருது பெற்ற நூலாகும். இவர் ஐந்து கவிதை நூல்களையும், இரண்டு கல்வி சார் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது ஆக்கங்களாவன உண்மை என்றும் உயிர் பெறும், என் மன வானில், மழலைக்கோர் பாட்டு, நதியில்லா ஓடம், காற்றுக்குத் தூதுவிட்டு என்பன ஆகும். இதை விட பல பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை தொடர்ச்சியாக எழுதி வந்தார்.
இவர் சிறுவயது முதல் சம்பூரில் இலக்கிய வாழ்வும், அங்கு அவருக்கு கிடைத்த வாசிப்பு பழக்கமும், இவரது ஆசிரியர்களின் ஆதரவும் இவரை சிறந்த எழுத்தாளராக மாற்றியது. இவர் பாடசாலை கல்வியின் போது செல்லக்குட்டி அதிபரால் நடத்தப்பட்ட கவிதை, நாடகம் மற்றும் சம்பூர் தமிழ் கலா மன்றம், சிலம்பொலி மன்றம் போன்றவற்றினால் நடத்தப்பட்ட சமூக நாடகங்களால் கவரப்பட்டு தனது எழுத்தாற்றலை அதிகரித்துக் கொள்ளும் எண்ணத்தை வளர்த்துக் கொண்ட ஒருவராவார். மேலும் இவர் சிறுவயதில் கண்ட தங்கையின் பாசம், 5000 ரூபாய், ஆபரேஷன் போன்ற நாடகங்கள் இவரது இலக்கிய ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. அத்துடன் சம்பூரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நாட்டுக்கூத்துகளும் இவருக்கு கலைத்துறை மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.
இவர் மித்திரன் வாரமலர், தினக்குரல், வீரகேசரி போன்றவற்றில் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். குறிப்பாக 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் தினக்குரல் பத்திரிகையில் இவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இவரது கவிதைகள் போரியல் சம்பந்தமாகவும், அதனைத் தொடர்ந்து வறுமை, காதல் என்பவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. மேலும் இவர் இந்தியாவின் வளரி குழுமம், அது போல திருகோணமலையின் பல இலக்கிய குழுமங்களிலும் இணைந்து பணியாற்றி வருகின்றார்.
அத்துடன் தற்காலத்தில் சிறுகதை திறனாய்வு நூல் ஒன்றையும் உருவாக்கி வருகின்றார். இவரது முதல் கவியரங்கு தேடல் அமைப்பினால் கிண்ணியாவில் இடம்பெற்ற நூல் வெளியீட்டின் போது நடத்தப்பட்டது. அவ்வாறே சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றிய போது "அச்சாணி" என்ற பரிசளிப்பு விழா மலரை வெளியிடவும் முன்னின்று செயல்பட்டார். மேலும் சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்தின் வளர்ச்சியில் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றியுள்ளார். குறிப்பாக உயர்தரத்தில் சிறந்த சித்திகள், பாடசாலைக்குள் ஒரு பாலர் பாடசாலைக்கான நிரந்தர கட்டிடத்தை உருவாக்கியமை, நாடகப் பாடத்தில் மாணவர்களின் ஆற்றலை தூண்டியமை என பல்வேறுபட்ட விடயங்களை நடத்திக் காட்டினார்.
இவருக்கு கிழக்கு மாகாண இலக்கிய வித்தகர் விருது, சாகித்திய விருது (2006), பிரமிள் (2009) விருது, நகர முதல்வர் விருது, உலக தமிழர் கலைப் பண்பாட்டு பேரவையினால் "இணை உரை திலகம்" என்ற விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் 1992 ஆம் ஆண்டு திருகோணமலையை சேர்ந்த வனராணி என்பவரை திருமணம் புரிந்து இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். இவரது இலக்கியப் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.