ஆளுமை:மன்னார் அமுதன்
பெயர் | மன்னார் அமுதன் |
தந்தை | ஏ.பி.டி ஜோசப் |
தாய் | சகாயம் விராஸ்பிள்ளை |
பிறப்பு | 1984.04.04 |
ஊர் | மன்னார் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மன்னார் அமுதன், ஏ.பி.டி ஜோசப் (1984.04.04 - ) மன்னாரைப் பிறப்பிடமாகவும் தென்னிந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை ஏ.பி.டி ஜோசப்; தாய் சகாயம் விராஸ்பிள்ளை. ஜோசப் அமுதன் டானியல் சின்னக்கடை என்னும் இயற்பெயர் கொண்டவர். இவர் ஆரம்பக் கல்வி முதல் பட்டக்கல்வி வரை இந்தியாவில் கற்றவர். கணணி விஞ்ஞானத்தில் BSc (Computer Science) இளமாணிப் பட்டத்தையும், சமூகவியலில் M.A (Sociology) முதுமாணிப்பட்டத்தையும், ஆங்கில இலக்கியத்தில் தேசிய உயர் பட்டயநெறிக் கல்வியும், உளவியலில் பட்டயநெறிக் கல்வியும் என நான்கு துறைகளில் 13 கல்வி நெறிகளைப் பூர்த்தி செய்திருக்கின்றார்.
இவர் கவிதை, சிறுகதை, கவியரங்கம், பாடலியக்கம், பட்டிமன்றம், ஆய்வுக்கட்டுரை, பத்திரிகை கட்டுரைகள், திறனாய்வு, குறும்படம் என பல துறைகளில் தடம் பதித்துள்ளார். புத்தாக்க எழுத்துத்துறை (Creative Writing) வளவாளராகவும், சமூக, எழுத்துச் செயற்பாட்டாளராகவும் விளங்குகின்றார். இவர் விட்டு விடுதலை காண் (2009), அக்குரோணி (2011), அன்னயாவினும் (2015) ஆகிய கவிதை நூல்களையும் “Above all” (https://www.youtube.com/watch?v=WiHhN_QFzXg) என்னும் குறும்படத்தையும் வெளியிட்டுள்ளார். இவரின் கவிதைகள் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மன்னார் தமிழ்ச்சங்கத்தில் ஆரம்ப உறுப்பினராக இணைந்து 2013 ஆம் ஆண்டு நிர்வாகச் செயலாளராகவும் 2015 ஆம் ஆண்டு மே மாதம் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது வரை செயற்பட்டு வருகின்றார். அத்துடன் நூல் தொகுப்பாசிரியராகவும், ஒப்புநோக்குநராகவும், செவ்விதாக்குனராகவும் மன்னார் தமிழ்ச்சங்கம் மற்றும் பிரதேச இலக்கிய பேரவை நூல் வெளியீடுகளிலும் பணியாற்றி இருக்கின்றார்.
காக்கைச் சிறகினிலே இதழ்க்குழுமம் நடாத்திய சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர்களுக்கான கி.பி அரவிந்தன் நினைவு சிறுகதைப் போட்டியில் 2016 இல் 45 சர்வதேச போட்டியாளர்களோடு கலந்து கொண்ட இவர் “ஒற்றை யானை” என்ற சிறுகதைக்காக இரண்டாம் பரிசைக் கைப்பற்றினார். amnesty international என்னும் காணாமல் போனோருக்கான அமைப்பு நடத்திய Silenced shadows - Global poetry competition இல் தமிழ்பிரிவில் சிறந்த 5 கவிஞர்களுள் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இக்கவிதை ஆங்கிலம் மற்றும் சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு நூலுருப்பெறவுள்ளது.
மன்னார் அமுதன் சிறுகதை, கவிதைக்கான பிரதேச, மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான, பணப்பரிசில்கள் உட்பட்ட பரிசுகளையும் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் தடாகம் – சர்வதேச கலை இலக்கிய வட்டம் வழங்கும் 2011 ஆம் ஆண்டிற்கான அகஸ்தியர் விருது, கலைத்தீபம் விருது, சான்றிதழ்களையும், 2012 ஆம் ஆண்டிற்கான கொழும்பு தேசிய கவிஞர்கள் சம்மேளனம் வழங்கிய காவ்யஸ்ரீ விருதையும், மன்னார் தமிழ்ச்சங்கத்தின் எழுத்தியல் திலகம் விருது - 2016 மற்றும் பல நினைவுப் பரிசுகளையும் பெற்றுள்ளார்.