ஆளுமை:நூருல் இஸ்ரா, தாஹிர்
பெயர் | நூருல் இஸ்ரா |
தந்தை | ஒமர் தாஹிர் |
தாய் | ராலியத்தும்மா |
பிறப்பு | 1986 |
ஊர் | தெல்தோட்டை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நூருல் இஸ்ரா, தாஹிர் கண்டி தெல்தோட்டை பிறந்த எழுத்தாளர் தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். இவரது தந்தை ஒமர் தாஹிர்; தாய் ராலியத்தும்மா. ஆரம்பக் கல்வித் தொடக்கம் உயர்கல்வி வரை க/எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைமாணி பட்டதாரியாவார். இந்தியா பாரதியார் பல்கலைக்கத்தில் சமூகப் பணிதுறையைத் தெரிவு செய்து மருத்துவம் மற்றும் உளவியல் விசேட துறையில் கற்று 2013ஆம் ஆண்டு சமூக பணியில் முதுமாணிப் பட்டத்தை பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இதே பல்கலைக்கழகத்தில் முதுமாணி நிறைஞர் பட்டப்படிப்பினை சமூக பணி உளவியல் விசேட துறையில் நிறைவு செய்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஆரோ கிவிவ் ஹோப் (Aroh Giving Hope) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முக்கிய உறுப்பினராக செயற்பட்டுள்ளார். புனர்வாழ்வு அதிகார சபையில், புனர்வாழ்வு உதவியாளராக இணைந்து சேவையாற்றினார். இவரின் கணவர் முகம்மத் கபூர் முகம்மத் நௌசாத் ஆகும். பாடசாலைக் காலம் முதலே எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள இவரின் முதலாவது கவிதைத் இன்னுயிர் நீத்த இரு தீபங்கள் என்ற தலைப்பில் 2002ஆம் ஆண்டு சுடர்ஒளி பத்திரிகையில் வெளிவந்தது. கவிதை எழுதுதல், மேடை பேச்சாளர், கலைஞரென பன்முகத் திறமைகளைக் கொண்டவர் நூருல் இஸ்ரா. வெற்றிகரமான கற்றல் நுட்பங்கள் எனும் தலைப்பில் இவரது முதலாவது நூல் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2010ஆம் ஆண்டு பேசும் உள்ளங்கள் (தமிழ் திரைப்படங்கள் சித்தரிக்கும் உளநோய்களின் தொகுப்பு) எனும் இறுவட்டை இவரின் நண்பி சசிகலாவுடன் இணைந்து வெளியிட்டார். 2012ஆம் ஆண்டு திறவுகோல் The Key எனும் ஆவணப்பட்டதை இந்தியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மாநாட்டில் சமர்ப்பித்து ஆவணப் படத்துக்கு முதல் பரிசினைப் பெற்றார். இவரின் ஆய்வு கட்டுரைகள் உள்நாட்டு வெளிநாட்டு சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. இவரின் ஆக்கங்கள் சுடர்ஒளி, தினகரன், வீரகேசரி, நவமணி, விடிவெள்ளி ஆகிய நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளன. பன்முக ஆளுமைகளைக் கொண்ட இஸ்ரா பல அரசசார்பற்ற நிறுவனங்களில் ஆலோசகராகவும், அங்கத்தவராகவும் செயற்பட்டு வருகிறார். இவரது சமூக சேவைகளுக்காக மனித உரிமைகள் நிறுவனம் 2016ஆம் ஆண்டு விருது வழங்கி கௌரவித்துள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடனான தனது சொந்த அனுபவக் குறிப்பினை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆணிவேர் ஆழப்புதைகிறது எனும் தலைப்பில் மிக விரைவில் நூல் ஒன்றை வெளியிடவுள்ளார்.