ஆளுமை:நிசாந்தி, முருகவேல்
பெயர் | நிசாந்தி |
தந்தை | நடராஜா |
தாய் | நேசம்மா |
பிறப்பு | 1978.10.17 |
ஊர் | அம்பாறை அக்கரைப்பற்று |
வகை | சமூகசேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நிசாந்தி, முருகவேல் (1978.10.17) அம்பாறை அக்கரைப்பற்றில் பிறந்த சமூகசேவையாளர். இவரது தந்தை நடராஜா தாய் நேசம்மா. ஆரம்பக் கல்வியை அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் உளவளத்துறை டிப்ளோமா கற்கை நெறியை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்துள்ளார்.
தற்போது கல்முனையில் உள்ள சமூகச் சிற்பிகள் என்ற அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக பணி புரிகின்றார். இதில் பெண்களுக்குரிய இலவச சட்ட ஆலோசனைகளையும் தகவல் அறியும் சட்ட விழிப்புணர்வையும் மேற்கொண்டு வருகின்றார். தமிழ், முஸ்லிம், கிராமங்களில் சமூகமட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மக்களுக்கு அடையாளப்படுத்தி அரச திணைக்களங்கள் மக்களுக்கு சரியான முறையில் சேவைபுரியவேண்டும் என்னும் பொறுப்புக்கூறலை தெரியப்படுத்தி வருகின்றோம் .அவ்வாறு அத்திணைக்களங்கள் சேவைபுரியவில்லையாயின் அந்த சேவையை மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் அத்திணைக்களங்களை கேள்வி கேட்கும் படியாக மக்களுக்குரிய விழிப்புணர்வை அவர்களிடையே உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார். மக்களின் உரிமைகளை அவர்களாகப் பெற்றுக்கொள்வதற்காக பயிற்சிகொடுத்து அவ்வாறான சமூகத்தை உருவாக்குவதற்கு கிராமங்களிடையே ஆர்வமுள்ள ஆட்களை தெரிவுசெய்து அவர்களுக்குரிய வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் கொடுத்து வருகின்றார். அத்துடன் அரசாங்க உத்தியோகத்தர்களையும் அவர்களுடைய பணி பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தலையும் செய்துவருகின்றார்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாகவும் அதற்கெதிராகவும் இயங்குகின்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகின்றார். அத்துடன் பிரதேசசெயலகம், பொலிஸ்,மகளிர் அமைப்புகள் என்பனவற்றுடன் இணைந்து பெண்கள் தொடர்பான பிரச்சினைகளு்கான சட்டரீதியான உதவிச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார். சமூகமட்டத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல்களை நடாத்தி அதற்குரிய தீர்வுகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கின்றார். தற்போது அழுத்தக்குழு, இளைஞர்குழு என்பனவற்றுடன் இணைந்து தகவல் அறியும் சட்டத்தை நாடகம் மூலமாக அம்பாறை,மட்டக்களப்பு மாவட்ட கிராமங்களில் நிகழ்த்துகின்றார். அத்துடன் தகவல் அறியும் சட்டத்தின் வெற்றிக் கதைகளை நூலாக வெளியிட்டிருக்கின்றார். அம்பாறை மாவட்டத்தில் சமூகசேவையில் 20 வருடங்களாக சேவையாற்றுவதால் அரச ஊழியர்களின் அறிமுகம் உள்ளதால் தனது பணியை இலகுவாக செய்யக்கூடியதாக இருப்பதாக சொல்கின்றார். இவர் பால்நிலை தொடர்பான வளவாளராகவும் செயற்படுகின்றார்.
தனது பயிற்சி நெறிகளுக்காக இருமுறை இந்தியாவுக்கும் சென்றிருக்கின்றார்.
விருதுகள்
2019ஆம் ஆண்டு வெகுஜன ஊடக அமைச்சால் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வைஏற்படுத்தியமைக்காக வழங்கப்பட்டது.
2019இல் திறமையான பெண்கள்தான் உலகைப் படைக்கின்றார்கள் என்னும் தலைப்பில் விருது கல்முனை பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டது.
குறிப்பு : மேற்படி பதிவு நிசாந்தி, முருகவேல் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.