ஆளுமை:சுகன்யா, அரவிந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுகன்யா
தந்தை சிவானந்தன்
தாய் சந்திரமதி
பிறப்பு 1975.08.11
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுகன்யா, அரவிந்தன் (1975.08.11) யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்த கல்வியாளர். இவரது தந்தை சிவானந்தன்; தாய் சந்திரமதி. தனது ஏழாவது வயதிலேயே முதலாவது அரங்கப் பிரவேசத்தினை மேற்கொண்டுள்ளார். இசையை தனது தாயாரான சங்கீதவித்துவான் திருமதி சந்திரமதி சிவானந்தன் அவர்களிடம் பயின்று சிறப்புத் தேர்ச்சிக்காக இலங்கையின் தலைசிறந்த இசை விற்பன்னரும் தாயாரின் குருவுமாகிய அமரர் சங்கீதபூஷணம் திரு லயனல் திலகநாயகம் போல் அவர்களிடம் முறைப்படி பயிற்சி பெற்றுள்ளார். இசை மற்றும் நடனம் ஆகிய இரு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர் சுகன்யா. யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி, இந்துநாகரிகம், நாடகமும் அரங்கியலும், சமூகவியல் ஆகிய துறைகளில் கற்றதோடு சமூகவியல்துறையை சிறப்புத்துறையாகத் தெரிவு செய்து இளநிலைபட்டப்படிப்பினை சிறப்பாகப் பூர்த்தி செய்துள்ளார். கலாநிதி சுகன்யா. யாழ் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் சிறப்புக்கலைப்பட்டப்படிப்பை பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையில் விரிவுரையாளராக கடந்த 10 ஆண்டுகளாகக் கடைமையாற்றி வருகிறார். வயலின் வாத்தியக் கலைஞரான சங்கீதவித்துவான் அமரர் ஆர்.எஸ்.கேசவமூர்த்தி அவர்களிடம் முறையாக பயின்று குருவுடன் பல இசைவிழா மேடைகளிலே வயலின் இசைக்கச்சேரிகள் சிறப்பாக நிகழத்தியிருக்கின்றார். வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்படுகின்ற பரீட்சைகளிலே சிறப்பாகச் சித்தியடைந்து அச்சபையினால் வழங்கப்படுகின்ற கலாவித்தகர் பட்டத்தினை இரண்டு துறைகளிலும் பெற்றிருக்கின்றார் சுகன்யா. சிறுவயது முதலே நடனத்துறையிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் யாழ்ப்பாணக் கலை வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவராகிய கொக்குவில் ஏரம்பு சுப்பையா அவர்களின் மகளான கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன் அவர்களிடம் நடனம் பயின்று 2003ஆம் ஆண்டு கலாவித்தகர் பட்டம் பெற்றார். கலையின் மீதிருந்த ஈடுபாடு காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடனத்துறையில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டு இந்திய அரசின் கலாசார உறவுகளின் அமைப்பினரால் வழங்கப்படுகின்ற புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் (Indian Council for Cultural Relations - ICCR) தெரிவாகி சென்னைப் பல்கலைக்கழகத்திலே முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை இலங்கை கர்நாடக இசைக்கலை வளர்ச்சியும் மேம்பாடும் (Propagation of Carnatic Music in Srilanka) என்ற பொருளில் சிறந்த முறையிலே நிறைவு செய்துள்ளார். சுமார் 500க்கும் மேற்பட்ட இசைக்கச்சேரிகளை யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்லாமல் இலங்கை தலைநகரான கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற இலங்கையின் பல பிரதேசங்களிலும் தமிழகம், கனடா, சுவிஸ்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்னி, இங்கிலாந்து போன்ற கடல்கடந்த நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளையும் பயிற்சிப்பட்டறைகளையும் மேற்கொண்டு வருகிறார். 25க்கும் மேற்பட்ட இசைப்பேழைகளிலே சுகன்யா தன்னுடைய குரலைப் பதிவு செய்திருக்கின்றார். அவற்றுள் எட்டுப் பேழைகள் இவரால் பாடல்கள் ஆக்கப்பட்டு இசையமைப்பட்டு இவராலேயே பாடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் தமிழுக்காகப் பணியாற்றிய படைப்புக்களை ஆவணப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் தமிழுக்காக வாழ்ந்து மறைந்த புலவர் பெருமக்களது பாடல்களைத் தொகுத்து இசையமைத்துப் பாடப்பட்டவையும் அடங்கும். குறிப்பாக வசாவிளான் ஆசுகவி, கல்லடி வேலுப்பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், அருட்கவி விநாசித்தம்பி போன்றவர்களது பாடல் தொகுப்புக்கள் சுகன்யா அவர்களால் பாடப்பட்டு இசைப்பேழைகளாக ஆக்கம் பெற்றுள்ளன. நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட இவர் பிற்பட்ட காலங்களில் நாட்டிய நிகழ்ச்சிக்குப் பாடவும் நாட்டிய உருப்படிகள் மற்றும் நாட்டிய நாடகங்களுக்கு இசையமைக்கவும் பாடல்களை ஆக்கியும் வருகிறார். ஆய்வுநிலை சார்ந்து நோக்கின் சமூகவியல், இசை, நடனம் ஆகிய மூன்று தளங்களிலே சிறப்பான தேர்ச்சி பெற்றிருக்கின்ற காரணத்தினால் இவரது ஆய்வு முயற்சிகள் சமூகவியல் சார் கலைத்தளத்தை அண்டியதாகவே உள்ளது. 35க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச மற்றும் ஏனைய கருத்தரங்குகளிலே சமர்ப்பிக்கப்பட்டு பதிப்பிலும் வெளியாகியுள்ளன. இது தவிர யாழ்ப்பாண சமூகம் கடந்த பல வருடங்களாக முகம்கொடுத்து வந்த அசாதாரண சூழ்நிலைகளால் இழந்து போனவற்றையும் இழந்து கொண்டிருப்பனவற்றையும் மீளவும் எதிர்கால சமூகத்திற்குக் கையளிப்புச் செய்யும் நோக்குடன் ஆவணப்படுத்தும் முயற்சியிலும் தனது ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அத்தோடு அபிநயா என்கின்ற காலாண்டு சஞ்சிகையிலே தொடர்ச்சியான கட்டுரைகளை எழுதி வருகிறார். இவரின் தாயாரினால் ஆரம்பிக்கப்பட்ட கீதாஞ்சலி என்னும் நிறுவனத்தை தற்பொழுது சுகன்யா பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஐயை குழுமத்தின் யாழ்ப்பாணக்கிளையின் ஆலோசகராகவும், திருமறைக்கலாமன்றத்தின் ஆளுனர் சபையின் அங்கத்தவராகவும் நல்லூர் சிவஞானப்பிள்ளையார் ஆலய ஆயுட்கால அங்கத்தவராகவும், சமூகசேவையாற்றி வருகிறார்.

விருதுகள்

சர்வதேச நிறுவனமாகிய திருமறைக்கலாமன்றத்தின் கனடா கிளை அதன் 25ஆவது அகவை நிறையொட்டி கனடாவில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இசை இளவரசி பட்டத்தினை இவருக்கு வழங்கியது.

இந்திய அரசின் கலை விருதாகிய கலைமாமணி விருது 2016 ஆண்டு.

கனடா ஸ்ரீவரசித்திவிநாயகர் தேவஸ்தானம் இவரது இசைப்புலமையைப் பாராட்டி சங்கீத வித்வ சிரோன்மணி என்ற பட்டம் வழங்கியது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையும் மொரிசியஸ் மாணிக்கவாசகர் திருக்கூட்டம் மற்றும் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகமும் இணைந்து 2017ஆம் ஆண்டு நிகழ்த்திய 16ஆவது சைவத்தமிழ் மாநாட்டிலே இவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையினைப் பாராட்டி இசைச்சுடரொளி விருது வழங்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு தமிழக நந்தவனம் பவுண்டேசனால் சாதனைப் பெண்மணிகளில் இவரையும் தெரிவு செய்தது.

2019ஆம் ஆண்டு இவரின் சேவையைப் பாராட்டி ஐயை குழுமத்தினால் ஐயை சுடரொளி விருது வழங்கியது.

குறிப்பு : மேற்படி பதிவு சுகன்யா, அரவிந்தன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.