ஆளுமை:சபருள்ளா, முகம்மது காசீம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மது காசீம் சபருள்ளா
தந்தை முகம்மது காசீம்
தாய் -
பிறப்பு 1976.09.21
ஊர் கிண்ணியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முகம்மது காசீம் சபருள்ளா அவர்கள் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் அடப்பனார் வயல் எனும் இடத்தில் 1976.09.21 இல் பிறந்தார்.இவர் இலங்கையின் இளம் ஆளுமைகளில் ஒருவர் ஆவார்

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி, வறக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். அதேவேளை வறக்காப்பொல தாருல் ஹஸனாத் அறபுக் கல்வி நிலையத்திலும் கற்றவர்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தனது சட்டமானி பட்டத்தை நிறைவு செய்து அதிலே சிறப்புத் தேர்ச்சி பெற்று சிறுது காலம் விரிவுரையாளராக கடமையாற்றினார். 2004 ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணியாக பணிபுரிந்து வருகின்றார். சம காலத்தில் சட்டத்துறையில் பேசப்படுபவர்களுள் இவரும் ஒருவர். அத்துடன் கிண்ணியா மாநகரசபையின் பிரதி மேயராகவும் கடமையாற்றி வருகின்றார்.

சிறுவயது முதல் கவிதைகள் எழுதினாலும் 1992 ஆம் ஆண்டு 'சோக ராகங்கள்' என்ற இவரது முதலாவது சிறுகதை தினகரனில் வெளியானதன் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். கிண்ணியா சபருள்ளாஹ் என்பது இவரது புனைப் பெயர். இந்தப் பெயரின் மூலமே இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர்.

சட்டம், அரசியல், சமூகம் மற்றும் இலக்கியம், ஆன்மீகம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதுடன் நின்றுவிடாது கவிதை, சிறுகதை, கட்டுரை,பாடுதல், பாடலியற்றல், பட்டிமன்றம், இசை, மேடைப்பேச்சு, திரை விமர்சனம் என பல துறைகளில் வியாபித்து வருகின்றார். தினகரன், வீரகேசரி, தினக்குரல், விடிவெள்ளி, நவமணி, தினமுரசு, தமிழ்மிரர், தமிழ் தந்தி எனப் பல பத்திரிகைளிலும், ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

வியர்த்தொழுகும் மழைப்பொழுது, பிரேத பரிசோதனை, அதிகாலை பற்றிய நாட்குறிப்புகள், கிண்ணியா சபருள்ளாவின் ஹைக்கூக்கள் என்பன இதுவரை வெளிவந்துள்ள இவரது கவிதைத் தொகுப்பு நூல்கள் ஆகும்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், திரை விமர்சனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். முகநூல் பக்கத்தை பலரும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வரும் இக்காலத்தில் இவரது முகநூல் பக்கம் என்றும் இலக்கியம் சார்ந்த தகவல்களோடு காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

கிண்ணியா பிரதேச கலாசாரப் பேரவையினால் கவிதை, சிறுகதைத் துறைக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார். ஜனனி பத்திரிகை தேசிய மட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழ்மிரர் பத்திரிகை தேசிய மட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

தொழில்முறை சார்ந்த தொழில்களுள் ஒன்று சட்டத்துறை. ஓய்வில்லா தொழில். வகை கூறல் அதிகமுள்ளது. இருந்தும் கிடைக்கும் ஓய்வு நேரங்களை இலக்கியத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இவரது எழுத்துநடை அனைவரையும் விரும்பி வாசிக்கத் தூண்டும். இவரது ஆக்கங்களை வாசிப்போர் அவற்றின் கனதியை அறிந்து கொள்ள முடியும்.