ஆளுமை:கெளரிதாசன், அம்பலவாணர்
பெயர் | அம்பலவாணர் கெளரிதாசன் |
தந்தை | தம்பையா அம்பலவாணர் |
தாய் | இரத்தினம்மா |
பிறப்பு | 1959.05.15 |
இறப்பு | - |
ஊர் | ஆலங்கேணி, திருகோணமலை |
வகை | கவிஞர் |
புனை பெயர் | மோகனமணாளன், ஆயிலியன், இரத்தின மைந்தன், தாமரைதாசன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அம்பலவாணர் கெளரிதாசன் அவர்கள் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகரசபை மருங்கிலுள்ள ஆலங்கேணி கிழக்கினைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடறிந்த நல்ல கவிஞர். இவர் 1959.05.15 அன்று ஆலங்கேணியில் தம்பையா அம்பலவாணர் மற்றும் இரத்தினம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
எழுபதுகளில் எழுத்துலகில் காலடி பதித்த இவரது கவிதை "பற்றுக்கள்" என்ற தலைப்பில் "சுடர்" சஞ்சிகையிலும், " எதைப்பாடுவேன்!" என்ற தலைப்பில் "சிந்தாமணி" வாரஇதழிலும் பிரசுரமாகி "மரபுக்கவிஞர்" என்ற மகுடத்தினை வழங்கியது. நான்கு தசாப்தங்களுக்கு மேல் இலக்கியம் படைத்து வருகின்றார். தீவிரமான தேடலும், தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கமும் குறுகிய காலத்தில் முன்னேற்றப் படிகளில் இவரை ஏற்றி வைத்தது. பிரதேசம். மாவட்டம், மாகாணம், தேசியம், சர்வதேசம் என்று பங்கேற்ற கவிதைப் போட்டிகளில் பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இலங்கையில் வெளிவரும் வார நாளிதழ்களிலும், சஞ்சிகைகளிலும், சிற்றேடுகளிலும் இவரது இயற்கை, காதல், சமூகம், அரசியல், ஆன்மீகம் சார்ந்த கவிதைகள் அடிக்கடி வெளிவந்த வண்ணமுள்ளன. மரபில் ஆர்வம் குறைந்து வருகின்ற இக்காலத்தில் மரபுக்கவிதை படைப்போர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒருவர்.
மோகனமணாளன், ஆயிலியன், இரத்தின மைந்தன், தாமரைதாசன் என்ற புனைபெயர்களில் அவ்வப்போது எழுதிவந்தாலும் இவரது இயற்பெயரான அ. கௌரிதாசன் என்ற பெயரே பலருக்கும் பரிச்சயமானது. இவரது "ஒரு கவிதை எழுதிவிட" கவிதை நூல் ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது.
கவியரங்கங்கள் உள்ளிட்ட பல மேடைகளில் இவரது கவித்திறன் பறைசாற்றப்பட்டுள்ளது. தமிழின் செழுமையை நன்கு பயன்படுத்திக் கவிதை புனைவதிலும், கவிதை படிப்பதிலும் தனக்கென தனியிடத்தைக் கைப்பற்றிக் கொண்டவர் இவர். சமகால இலக்கியகர்த்தாக்களுள் இவரும் மூத்த பெயர் சொல்லக்கூடிய ஒருவர். பல்வேறு கருப்பொருள்களின் கீழ் தடம் பதித்துள்ள இவரது கவிதைகளும் தமிழ்கூறும் நல்லுலகில் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை.