ஆளுமை:அஸ்மின், மர்ஹூம் உதுமாலெவ்வை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மர்ஹூம் உதுமாலெவ்வை அஸ்மின்
தந்தை மர்ஹூம் உதுமாலெவ்வை
தாய் ஆயிஷா
பிறப்பு 1983.05.02
ஊர் பொத்துவில், அம்பாறை
வகை எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்
புனை பெயர் பொத்துவில் அஸ்மின், ஈழநிலா
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஸ்மின் மர்ஹூம் உதுமாலெவ்வை அவர்கள் (பி.1983.05.02) அம்பாறை மாவட்டம் பொத்துவிலைச் சேர்ந்த மர்ஹூம் உதுமாலெவ்வை மற்றும் ஆயிஷா ஆகியோருக்கு சிரேஷ்ட புதல்வனாகப் பிறந்தார்.

இவர் கவிதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், பாடல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். மரபுக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல பரிமாணங்களில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வருபவர். செந்தூரம் என்ற செய்தித்தாள் இணைப்பிதழும், கவிஞன் என்ற இதழும் இவருடைய ஒளிப்படத்தை அட்டைப் படத்தில் இட்டுச் சிறப்பித்துள்ளன. இவர் யூ.எல்.எம்.அஸ்மின், பொத்துவில் அஸ்மின், ஈழநிலா ஆகிய புனைபெயர்களில் எழுதி வரும் இளம் கவிஞரும் எழுத்தாளருமாவார்.

பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றதுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துக்கான கலைமாணி பட்டப் படிப்பை முடித்தவர். சிறுவயது முதல் இவர் இலக்கிய ஆர்வம் மிக்கவராகக் காணப்பட்டார். 2007 ஆண்டில் தரம் 9 இல் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தார்.

இவரது முதலாவது கவிதை ஆக்கம் 2000.03.25ம் திகதி தினக்குரல்' பத்திரிகையில் "என்ன தவம் செய்தாயோ" எனும் தலைப்பில் வெளியானது. 2004.07.01ம் திகதி வரை இவரின் இரண்டு சிறுகதைகளும், நாற்பது கவிதைகளும், மூன்று கட்டுரைகளும் இலங்கையில் வெளிவரும் தினக்குரல், தினகரன், வீரகேசரி, நவமணி, ஜனனி, தேடல், தமிழ் உலகம், முஸ்லிம்குரல், இளங்கதிர் ஆகிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் களங்கண்டுள்ளன.

இவை தவிர, பல கவிதைகளையும், சிறுகதைகளையும், பாடல்களையும், இரண்டு சமூக நாவல்களையும், இரண்டு நாடகங்களையும் இவர் கையெழுத்துப் பிரதிகளாக எழுதி வைத்துள்ளார். தனது சிறுவயதிலேயே மூன்று கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை விடை தேடும் வினாக்கள் (2002), விடியலின் ராகங்கள் (2003), பாம்பு குளிக்கும் நதி (2013) போன்றனவாகும். அத்துடன், கவிஞர் ஜீவகவி தொகுத்த "முகவரி தொலைத்த முகங்கள்’ எனும் கவிதைத் தொகுதியிலும் இவரது இரண்டு கவிதைகள் இடம்பெற்றிருந்தன.

இவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு ‘தேடல்’ எனும் இலக்கிய காலாண்டிதழ் இதுவரை நான்கு இதழ்களை வெளிவந்துள்ளது. வெகுவிரைவில் மேலும் மூன்று நூல்களை வெளியிடும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டுள்ளார். அவை ரத்தமில்லாத யுத்தம் (கவிதைத்தொகுதி), நிலவு உறங்கும் டயறி (சிறுகதைத்தொகுதி) (இத்தொகுதிக்கு இந்தியாவின் பிரபல எழுத்தாளர் 'சுஜாதா' முன்னுரை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது) காணாமல் போன கனவுகள் (நாவல்) போன்றனவாகும்.

தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்கேற்று ஐந்து தடவைகள் பரிசில்களை வென்றுள்ளார். மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் முதலாவது நினைவு தினத்தையொட்டி அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகம் ‘மாணவர் சாகித்திய விழாவினை முன்னிட்டு 2002ம் ஆண்டு அகில இலங்கை மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்றார்.

2003ம் ஆண்டில் அகில இலங்கை இந்து மாமன்றம் தேசிய ரீதியாக நடாத்திய சொல்லோவியப் போட்டியில் சிறப்புச் சான்றிதழையும், 2003ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு தேசியரீதியாக பாடசாலை சிரேஷ்ட மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் முதலாமிடத்தினையும், விபவி கலாசார மையம் அகில இலங்கை மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புச் சான்றிதழ் போன்றன பெற்றுள்ளார்.

கவிதைத் துறையில் ஜனாதிபதி விருது, அகஸ்தியர் விருது, கலைமுத்து விருது, கலைத்தீபம், கவிவித்தகன், எடிசன் விருது, கவிப்பிறை விருது, கலைச்சுடர் விருது, கவியரசு கண்ணதாசன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். அத்துடன் ஊடகத்துறையில் சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகைக்கான தேசிய விருது இரண்டு தடவைகள், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு தடவைகள் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 31-34
  • நூலக எண்: 2081 பக்கங்கள் 09
  • நூலக எண்: 10209 பக்கங்கள் 31-34