நிறுவனம்: தி/ நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தி/ நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் நிலாவெளி
முகவரி தி/ நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி, நிலாவெளி, திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

திருகோணமலை நகரிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் இயற்கை நிறைந்த நிலாவெளிக் கிராமத்தின் பிரதான வீதியில் கைலேஸ்வரா கல்லூரி அமைந்துள்ளது. தெற்கே பெரியகுளம் தொடக்கம் வடக்கே திரியாய் வரையான பிரதேசத்தில் வாழும் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி மூலம் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியை வழங்கும் நிறுவனமாக இது சிறப்புப் பெறுகின்றது.

மெதடிஸ்த திருச்சபையினால் 1879இல் ஆரம்பிக்கப்பட்டதாகக் கருதப்படும் இப்பாடசாலை ஒன்றே கால் நூற்றாண்டைக் கடந்து பெருவிருட்சமாக வளர்ந்துள்ளது. நிலாவெளி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் மிக நீண்ட காலம் இயங்கி வந்த இப்பாடசாலைக்கு இக் கிராமத்திலிருந்து கற்றோர் பலரை உருவாக்கித் தந்தபெருமை உண்டு.

நிலாவெளியில் மெதடிஸ்த திருச்சபை 1915 இல் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. மெதடிஸ்த தேவாலயம் 1917 இல் கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. அதேகாலப் பகுதியில் தேவாலய வளாகத்திலே பாடசாலையும் இயங்கி வந்துள்ளது. 30'×30'அளவுள்ளதும் களிமண் சுவர், ஓலைக் கூரை கொண்டமைந்ததுமான சிறிய கட்டிடத்தில் சுமார் ஐம்பது மாணவர் கல்வி பயின்றுள்ளனர். பின்னர் தேவாலயத்தின் பின்புறம் நிரந்தரக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. பாடசாலையின் ஒரு பகுதி 1969 இல் 5 ஏக்கர் பரப்புள்ள அரச காணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது. 1972இல் புதிய இடத்தில் முழுமையாக இயங்கத் தொடங்கியது. பழைய கட்டிடங்கள் மீண்டும் மெதடிஸ்த திருச்சபையால் பொறுப்பேற்கப்பட்டுத் தற்போது 'அருளகம்' எனும் நிறுவனத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்த இப்பாடசாலை 1942இல் 8ம் தரம் வரை கொண்ட பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 1944 இல் முதல் தடவையாக நான்கு மாணவர்கள் ஐந்தாந்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை அக்காலத்தில் வரலாற்றுச் சாதனையாகக் கருதப்பட்டது. 1977.03.01 இல் தரமுயர்த்தப்பட்ட பின் தி/ நிலாவெளி தமிழ் மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1979 முதல் க.பொ.த (உ/த) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1981 இல் முதற் தொகுதி மாணவர்கள் க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றினார்கள்.

பல வகைகளிலும் துரிதவளர்ச்சி கண்டுவந்த இப்பாடசாலை இன்று அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் உள் வாங்கப்பட்டு விரைவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது அண்ணளவாக 800 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 23.01.2014 இலிருந்து தி/ நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது. 01.05.2013 இலிருந்து '1ஏபி' தரப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. க.பொ.த (உ.த) இல் கணித, விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிலாவெளிக் கிராமத்தில் கல்வி ஒளிச்சுடர் விட்டுப் பிரகாசிக்கக் காரணமாயிருந்த இப்பாடசாலையை நிறுவிய மெதடிஸ்த திருச்சபையும் அதனோடு இணைந்து பணியாற்றிய இக்கிராமத்தின் கல்வி முன்னோடிகளும் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறப்படவேண்டியவர்கள்.