நிறுவனம்: கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம்
பெயர் | கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கிளிநொச்சி |
ஊர் | இராமநாதபுரம் |
முகவரி | இராமநாதபுரம் |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
இலங்கைத்திரு நாட்டின் வடபால் யாழ்.மாவட்டத்தில் விவசாயம் செழிக்கவென கிளிநொச்சி எனும் ஊரில் உருவாக்கப்பட்டு அரச அதிபர் சிறிக்காந்தா அவர்களால் 1955 ஆம் ஆண்டில் குடியேற்றிய குடியேற்றத்திட்டமாம் இராமநாதபுரம் கிராமத்தில் இக்கிராம விவசாயிகளின் பிள்ளைகள் கல்வியிலே உயரவென அரசால் அமைக்கப்பட்ட பாடசாலைக்கட்டடம் கொலணி அதிபர் திரு.கிருஷ்ணபிள்ளை அவர்கள் காலமதில் 02.05.1956 ஆம் ஆண்டில் திரு. எஸ். நமசிவாயம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கல்வி இலாகாவால் யாழ்/இராமநாதபுரம் வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டு பழைய கண்டி வீதிக்கு அருகே ஆரம்பிக்கப்பட்டதே கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு திரு.எஸ்.கனகசுந்தரம் எனும் தலைமை ஆசிரியர் பொறுப்பில் கையளிக்கப்பட்டது.அmக்காலத்தில் தரம் 5 வரையே வகுப்புக்கள் நடைபெற்றன. ஆரம்ப காலத்தில் 90 மாணவர்கள் வரை கற்கத் தொடங்கினர். அதிபரின் கல்வி நடவடிக்கைக்கு உதவியாக திருமதி.மாணிக்கம், திருமதி. பொன்னம்மா ஆகிய இரு பெண் ஆசிரியர்கள் கடமையாற்றி வந்தனர் என்றும் முதற் பெண் ஆசிரியரான திருமதி.மாணிக்கம் அவர்கள் இவ்வூர் மக்களால் மாணிக்கக்கா என செல்லமாக அழைக்கப்பட்டதுடன் பத்து வருடங்களுக்கு மேலான காலம் பாலர் பிரிவில் கடமையாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். பாடசாலையில் சேர்விலக்கம் வழங்கிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட போது கற்ற மாணவர்களிடையே பாலர் பிரிவில் அக்காலத்தில் அரிவரி என அழைக்கப்பட்ட வகுப்பில் இருந்த நடராசா ஆனந்தநாயகி என்பவரையே முதலாவது இலக்கத்தில் பதிவு செய்தனர். இக்காலத்தில் இருந்த ஆசிரியர்களுடன் திரு.திருமதி. சிதம்பரப்பிள்ளை ஆகிய இருவரும் இப்பாடசாலைக்குப் பணியாற்ற வந்தனர்.
வளர்ந்து வரும் இப்பாடசாலையை1960 ஆம் ஆண்டில் திரு. T.சங்கரப்பிள்ளை எனும் அதிபர் பொறுப்பேற்றார். இவர் குடியேற்றவாசிகளின் வீடு தோறும் சென்று அவர்களுடன் கலந்துரையாடி இப்பாடசாலை வளர்ச்சிக்காக மேலும் பல மாணவர்களை இணைத்துக் கொண்டார். மாணவர்களின் எண்ணிக்கை 150 இற்கு மேற்பட்டது. கற்றல் செயற்பாட்டுடன் இயைப்பாடவிதானச் செயற்பாட்டிலும் ஊக்கம் காட்டினார். வகுப்புக்கள் 8 வரை உயர்த்தப்பட்டன. இல்லங்கள் பிர்த்து விளையாட்டுப்போட்டி நடத்தினார்.பச்சை,சிவப்பு, மஞ்சள் என்ற நிறங்களிலே பாரதி, நாவலர், விவேகானந்தர் என்று இல்லங்களுக்குப் பெயர் சூட்டிய வருடம் இவருடையதே.இப்பாடசாலைச் செயற்பாடுகளுக்கெல்லாம் அக்காலக் கொலனி அதிபர் கிருஷ்ணப்பிள்ளை சேதுராஜா ஓவசியர் என்பவர் பாடசாலைக்கு அருகில் அமைந்திருந்த அவர்கள் விடுதிகளிலிருந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர்.ஊரின் உதலவி பெற்ற தலைமை ஆசிரியர் சங்கரப்பிள்ளை ,அவர்கள் கலை விழாவும் நடத்தினார்.,வரது காலத்திலேதான் திரு. திருநாவுக்கரசு ஆசிரியரும் கடமையாற்றினார்.1962ஆம் ஆண்டிலேயே இவ்வூர் முதலாவது கலைவிழாவைக் கண்டது.இப்பாடசாலையிலேயே இவ் அதிபரை மக்கள் உவந்தேற்றிருந்தனர் என்பதை 1963 ஆம் வருடம் அவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற போது ஊர்கூடி நடாத்திய பிரியாவிடை வைபவம் சான்றாகும்.இவருடைய காலத்தில் பாடசாலைக்கு வருகை தந்த சைவபட பெரியார் ஆசியஜோதி முத்தையா அவர்களால் நாட்டப்பட்ட பலாமரம் இன்றும் பாடசாலைப் பிரதான மண்டபத்தின் முன்பக்கம் காட்சி தருவதுடன் இனிய கனிகளையும் தந்து நிற்கின்றது. 1963 ஆம் ஆண்டில் வகுப்புக்கள் PROSSC வரை உயர்தப்பட்டது. அதன் பின்னர் SSC வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் இக்கிராம மக்கள் தமது சொந்த ஊர்களில் படித்த பிள்ளைகளையும் இங்கு கொண்டு வந்து சேர்த்தனர்.இவருடைய காலத்தில் செல்வி. தமிழரசி சோமசுந்தரம் செல்வன் வல்லிபுரம் செல்வராசா என்பவர்கள் மாணவர்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட மாணவர்களாக இருந்தனர். தமிழரசி கிளிநொச்சி பிரதேச தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி வாகை சூடிப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார்.
1964 ஆம் ஆண்டில் திரு.கந்தையா அதிபர் அவர்கள் கல்வியை மட்டுமல்ல மாணவர்களிடையே பக்தியையும் வளர்த்தார்.பண்ணோடு தேவாரத்தை தானே சொல்லித் தருவார்.வெள்ளிக்கிழமை தோறும் மாவடி அம்மன் ஆலயத்திற்கு அழகிய இரு வரிசைகளில் ஆண், பெண் இருபாலாரையும் நடைபவனியில் அழைத்துக் கூட்டுப்பிரார்த்தனை நடாத்தி இறைவழிபாடு செய்யவும் பழக்கி அழைத்து வருவார்.
இக்காலப்பகுதியில் முதன்துறையாக SSC எனும் சிரேஷ்ட கல்வித் தராதரப் பத்திரத்திற்குவிணிணப்பித்துப் பரீட்சை எழுதி இப்பாடசாலை மாணவர்கள் சித்தியும் அடைந்தனர். ,க்கால மாணவர்களில் ஒருவர் தான் இப்பாடசாலை ஆரம்பப்பிரிவில் கடமையாற்றிய திருமதி. அன்னமுத்து சின்னத்தம்பி ஆசிரியை ஆவார்.இவர் இப்பாடசாலையிலே கற்று கற்பித்து இங்கேயே ஓய்வு பெற்ற சிறப்புக்குரியவர். 1965 ஆம் ஆண்டில் திரு. பொன்னம்பலம் அவர்கள் அதிபராகக் கடமையேற்றார்.இவர் மாணவர்கள் கல்வித் தராதரப் பரீட்சையில் (SSC) வெற்றி பெறுவதற்காகப் பாடுபட்டார். இவரின் காலத்தில் மாணவர் எண்ணிக்கை 250 ற்கு மேல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1966 ஆம் ஆண்டில் திரு. ஆ.மகாதேவன் வெர்கள் அதிபராகக் கடமையேற்றார். இவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். சிதமபராக் கல்லூரியின் அதிபராக இருந்தவர். இக்காலத்தில் பாடசாலை பெருமைக்குரிய வளர்ச்சி பெற்றது. கிளிநொச்சிப் பிரதேசத்தில் இரு பாடசாலைகள் மகா வித்தியாலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதில் ஒன்று இப்பாடசாலை யாழ்/இராமநாதபுரம் மகா வித்தியாலயம் என்ற பெயர் பெற்றது. இக்காலத்தில் 300 மாணவர்களுக்கு மேல் கல்வி கற்றனர். பாடலைக்கு கொடி உருவாக்கப்பட்டது.அதன் நிறம் கரும் சிவப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கல்வி கற்பித்தவர் பொ.சுப்பிரமணியம் அவர்கள் இப்பாடசாலையின் கீதம் ஆக்குவதில் முன்னின்று உழைத்தவர்.தனது விடாமுயற்சியால் மதிப்பிற்குரிய வீரமணி ஐயர் அவர்களைக்கொண்டு பிலஹரி இராகத்தில் ஆதி தாளத்தில் “வளர்புகழ் ஓங்குகவே என ஆரம்பித்து காலமெல்லாம் பணி செய்து வாழியவே“ என வாழ்த்தி இயற்றுவித்த பெருமை திரு.பொ.சுப்பிரமணியம் அவர்களைின் தனிப்பணியே ஆகும். இயற்றுவித்தது மட்டுமன்றி மாணவர்கள் யாவரும ஆர்மோனிய இசையுடன் அழகாகப் பாட வேண்டும் என்பதற்காக பொன்னான பொழுதையெல்லாம் மாலை நேரம் செலவு செய்து மாணவர் மனங்களில் இசையை வளர்த்து பாடசாலைக்கீதத்தை இசையுடன் பாடவைத்த பெருமை திரு. பொ.சுப்பிரமணியம் சங்கீத ஆசிரியரி திரு. தியாகராஜா ஆகிய இருவரையுமே சாரும். பாடசாலைக்கு என்று ஒரு மகுடவாசகம் ஆக்கப்பட்டது. “ஏருக்கும் ஏட்டிற்கும் ஏற்றம் தருவோம்“ இப்பாடலைச் சின்னத்தில் பொறிக்கப்பட்டது. நடுவில் ஒரு புத்தகம்,அதன் மேல் சிட்டியில் ஏற்றிய தீபம், சுற்றி வட்ட வடிவில் நெற்கதிர், அதனைச்சுற்றி மகுட வாக்கியம் இராமநாதபுரம் வடக்கு அ.த.க. பாடசாலை என்ற பெயர் மாறி இராமநாதபுரம் மகா வித்தியாலயம் என்று ஆன போது அதிபர் மகாதேவன், ஆசிரியர் பொ.சுப்பிரமணியம் இருவரின் அயரா முயற்சியாலும் பாடசாலை புதுப்பொலிவு பெற்று கொடி, கீதம், இலட்சினை எல்லாம் பெற்று புத்துயிர் பெற்றது. புதிய அதிபர் விடுதி கிடைத்தது. பிரதான மண்டபத்தின் பின்புறம் அதே அளவுள்ள சீமெந்துக் கட்டடம் கிடைத்தது. விஞ்ஞான கூடமெ் ஒன்று வேப்பமரத்திற்கு அருகே காட்சி தந்தது. மாணவர்கள் G.C.E(O/L) என்று அழைக்கப்பட்ட க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்றார்கள். ஒற்றுமையுடன் பல ஆசிரியர்கள் பணி செய்தனர். பொற்காலம் உதயமாகி விட்டது என ஊரார் நம்பினார்கள். அதிபர் அவர்களால் பாடசாலை வேலிகள் சீரமைக்கப்பட்டு ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
1969 ஆம் ஆண்டில் திரு.காராளபிள்ளை அதிபர் அவர்கள் பொறுப்பேற்றார். இவருடைய காலம் பாடசாலையினுடைய பொற்காலம் தான். பாலர் பிரிவில் ஆனந்தரத்தினா, மனுவேற்பிள்ளை, பார்வதி, வள்ளியம்மை, நாகம்மா, மணியம் ஆகியோருடன் இன்னும் பல ஆசிரியர்கள் சிறந்த சேவை செய்தனர். பாடசாலையின் நல்லாசிரியர்கள் கூடிப்பணி செய்த காலம் இடை நிலைப்பிரிவிலும் நல்லாசிரியர்கள் பணி செய்தனர். இருந்தும் காராளபிள்ளை அதிபரால் புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பாலர் பிரிவில்கற்பித்த பார்வதி கொண்டு மனையியல் எனும் பாடத்தை O/L தரத்திற்கு கற்பிக்க வைத்து சித்திபெறவும் வைத்தார்.பல்கலைக்கழகத்திற்குப் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களைக் கொண்டு வந்து தன் சொந்த முயற்சியில், சொந்தச் செலவில் சரித்திரம், புவியியல், குடியியல் போன்ற பாடங்களைக் கற்பித்தார். O/L மாணவர்களின் கல்வியில் 100 வீதம் சித்தி பெற அரும்பாடு பட்டார். இவருடைய காலத்தில் O/L வகுப்பில் 8 பாடங்களுக்கு விண்ணப்பித்து 8 பாடங்களிலும் சித்தி பெற்றவர்களும் உண்டு. கல்விச் செயற்பாடுகளில் மட்டுமன்றி இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் ஊக்கம் காட்டினார். 1969 ஆம் ஆண்டு மாணவர்களை உடற்பயிற்சிப்பயிற்சிப் போட்டியில்மாவட்டத்தில் பங்கு பெற வைத்து வெற்றியும் ஈட்ட வைத்தார். இவ்வெற்றிக்கு செல்வி.பத்மாவதி வள்ளியம்மை, பார்வதி அவர்களும் இணைந்து பங்காற்றிப் பாடசாலைக்கு புகழ் சேர்த்தனர்.இவருடைய காலத்தில் பாடசாலை துரித முன்றே்றம் கண்டது. மாசிலாமணி CO அவர்களின் உதவியுடன் தபாலகத்தின் பின்பக்கம் இருந்த காட்டுப்பகுதியை பாடசாலைக்குப் பெற்றுத் தருவதில் அரும்பாடுபட்டார்.இவருடைய ஆரம்ப முயற்சியின் பயனே இன்று நாற்புறமும் வீதியுடன் காட்சி தருகின்றது.ஆரமப காலத்தில் ஆமற்கு வீதியும் வடக்கு வீதியில் பாதி அளவு மட்டுமே பாடசாலைக் காணி காணப்பட்டது. இவருடைய காலத்தில் கல்வி கற்றுப் பயன் பெற்ற பலர் அரச பதவிகளில் உள்ளனர். அவர்களல் சிறப்புப் பதவி வகிப்போராக றோயல் கல்லூரி பிரதி அதிபராக இருந்த திரு.ம. கணபதிப்பிள்ளை, கிளிநொச்சி வரயக்கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றிய ஆகா.செல்வராஜா என்போரைக் குறிப்பிடலாம். ஆசிரியராகக் கடமையாற்றிய கமலாவதி உருக்குமணி, செந்தமிழ்ச்செல்வி, தேவராணி, தபாலதிபர் நடராசா, தபாலதிபர் கோ.செல்வராசா , அதிபர் ஆலாலசுந்தரம், மனேஜர் கருணாநிதி தொலைத்தொடர்பில் சேவை புரிந்த புவனாம்பிகை இன்னும் பலரும் இவரது வளர்ப்புகளே. இவர்கள் யாவரும் தமது நல்லாசான்களான காராளபிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோருக்கு இப்போதும் தலை சாய்ந்தே வாழ்கின்றார்கள்.
1971 ஆம் வருடம் அதிபர் இடமாற்றத்தினால் தியாகராஜா எனும் BScஅதிபர் இப்பாடசாலைக்குக் கிடைத்தார். இவரது பதவிக்காலம் ஒரு வருடம் தான் அதன் பின்னர் 1972 தொடக்கம் 1973 ஆம் ஆண்டு வரை திரு.விஷ்ணு, திருமதி.விஷ்ணு என்னும் அதிபர்கள் வட்டக்கச்சி மகா வித்தியாலயத்திற்கும் இராமநாதபுரம் மகா வித்தியாலத்திற்கும் நியமிக்கப்பட்டனர். இக்காலத்தில் பாடசாலை நிலை தளம்பத் தொடங்கியது. தொடர்ந்து அதிபர் அலோசியஸ் 1974 ஆம் வருடமும் த. மார்கண்டு 1975,76,77 ஆம் ஆண்டுகளிலும், அதிபர் சோமசுந்தரம் 1978 தொடக்கம் 79 ஆம் வருடத்திலும் ,திரு. கோபாலபிள்ளை 1980,1981 ஆம் வருடங்களிலும் அதிபர் பதவி வகித்த போதிலும் தளம்பல் நிலையிலிருந்து மீட்டு முன்னேற்றப் பாதையில் கால் பதிக்க முடியாத நிலையில் பாடசாலை நிர்வாகம் செல்ல நேரிட்டது
1982 ஆம் ஆண்டு J. M.B ஜெயராசா அதிபராக வருகை தந்தார் இவருடைய காலத்தில் மாணவர்களின் கல்வி ஒழுக்கம்,விளையாட்டு, ஆங்கிலக்கல்வி என்பவற்றில் முன்னேற்றம் காணப்பட்டது. இவர் ஓர் உடற்கல்வி ஆசிரியராக இருந்து அதிபரான காரணத்தால் டெற்கல்வியில் ஊக்கமும் காட்டினார். இவரது அயராத முயற்சியில் உடற்பயிற்சிப் போட்டியில் முதலாம இடம் பெற வகை செய்தார். தற்போது ஆசிரியப்பணியாற்றி வரும் பராசக்தி , செல்வி.வீரசிங்கம் பராசக்தியாக அணியை வழி நடத்தி வெற்றி வாகை சூடினார். ஜெயராசா அதிபர் பாடசாலையைப் பலவழிகளிலும் முன்னேற்றமடையச் செய்ததால் கிராமத்தவர் உள்ளங்களில் இடம் பிடித்தார். இவரது திடீர் இடமாற்றத்தைத் தாங்க முடியாத மக்கள் , மாணவர்கள் 1986 ஜனவரிபாடசாலை முதல் நாள் வெளிநடப்புச்செய்து இடமாற்ற எதிர்ப்பைத் தெரிவித்தமை ஊரறிந்த உண்மையாகும். இந்நாளில் வருகை தந்த புதிய அதிபர் இராமநாதன் jன்னை மக்கள் பகிஷ்கரிப்பாதாக எண்ணி வேதனைப்பட்டார். அவரது வேதனையும் கல்விச்சாலை வளர்ச்சிக்கு உரமாய் ஆனது. இவர் ஆங்கில மொழியில் கல்விகற்ற இந்தியப்பட்டதாரி. இவர் கல்விச்சாலை முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறையுடன் செயற்பட்டார்.
O/L வகுப்புக்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத பாடங்களுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து பரீட்சைக்கு மாணவர்களை தயார் படுத்தினார். புலமைப் பரிசில் வகுப்பை திருமதி கண்ணம்மா தணிகாசலத்திடம் பொறுப்பித்து இரு மாணவர்களை சித்தி வகை செய்வித்தார். அதில் ஒருவர் சாதனா சாந்தகுமார் நாட்டிற்காக மாவீரர் ஆகிவிட்டார். ஒருவர் பிரதேசத்தில் வைத்தியராய் பணியாற்றும் த.சுபேந்திரன் ஆவார். எந்த ஆசிரியரின் மனமும் கோணாது வழிநடத்தி பாடசாலை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றார். அமைதியான நடை, மென்மையான பேச்சு, புன் சிரிப்பு, மாணவருடன் ஒன்றித்த வாழ்வு அவருக்கு அணிகலனாய் அமைந்திருந்தது. தமது கடமை காலத்தில் கல்விக்கருத்தரங்கு ஒன்றிற்கு கொழும்பு சென்றிருந்த வேளை 1993 ஆம் ஆண்டு மாரடைப்பால் கொழும்பில் காலமானார். இவரின் இறுதி அஞ்சலி நிகழ்வு இந்த மகா வித்தியாலயத்திலேயே அன்றைய கல்வி பணிப்பாளர் கந்தசாமி அவர்களால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது பிரதிக்கல்விப் பணிப்பாளர்களாக இருந்த திரு.ப. அரியரத்தினம்,திரு.த. குருகுலராசா, திரு.கி. சின்னராசா அவர்களும் கலந்து இரங்கல் உரையாற்றிய வேளை மண்டபத்தில் எழுந்த அழுகை ஒலி மாணவர்கள் அதிபர் மீது கொண்ட பற்றை பறைசாற்றி நின்றது. ஏழு வருடங்கள் அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவரது காலத்தில் 1990 ஆம் ஆண்டு சாரணியத்தையும் திரு.ம. ஜெகதீஸ்வரன் ஆசிரியர் பொறுப்பில் தொடங்கி வைத்தார். 1993 ஆம் ஆண்டின் மீதி காலத்தை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிரதி அதிபராக கடமை ஆற்றி பாடசாலையை நிர்வகித்தார்.
1994 ஆம் ஆண்டில் இவ்வூர்வாழ் அதிபரான திரு.வை. தனிநாயகம் பொறுப்பேற்றார். பற்றோடு பாடசாலையை நிர்வகித்தார் 1995ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஓய்வு பெற்றார் 1995-ன் மீதி காலத்தில் திரு.சிவசாமி அதிபராக நியமிக்கப்பட்டார். இவருடைய காலத்தில் யாழ் மாவட்ட மக்கள் தமிழீழப் போரினால் இடப்பெயர்வு கண்டனர் அவ்வாறு இடம் பெயர்ந்த மக்களில் ஒரு பகுதினர் பாடசாலையிலும் தஞ்சம் அடைந்திருந்தனர். இதனால் கல்வி செயற்பாட்டிற்கு நெருக்கடி ஏற்பட்டது .இக்காலத்தில் அதிபருடன் இணைந்து கிராமவாசியான பிரதி அதிபர் திருமதி. இ.திருநாவுக்கரசு அவர்கள் அரும்பாடு பட்டு பாடசாலை நிர்வாகத்தை தக்கவைத்துக் கொண்டார். சிவசாமி அவர்கள் ஒரு வருடத்தில் மாற்றம் பெற்று செல்ல பிரதி அதிபர் பொறுப்புடன் 1996 ஆம் ஆண்டின் மீதி காலத்து நிர்வாகி தான் இக்காலம் கல்வி செயற்பாட்டை செய்வதற்கு இடம் பெயர்ந்த மக்களால் இன்னல்பட்ட காலமாகும். தனியார் வீடுகளிலும் அயற் கட்டிடங்களிலும் மர நிழல்களிலும் வகுப்புகளை நடத்திய காலமாகும். ஒருவாறு இம்மக்களை எல்லாம் கிராம சேவகர்,அரச அதிபர் கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்கள் உதவியுடன் குடியிருப்புகளை உருவாக்கி அங்கு குடியமர்த்திவிட்டு பாடசாலையை மீட்டெடுக்க 1996 ஆம் வருடம் முடிவுற்றது.
1997 ஆம் வருடம் திரு.க. இரத்தினகுமார் அதிபராகப்பொறுப்பேற்றார். இவர் 1997-2026 ஆம் ஆண்டின் இறுதி வரை ஒரு தசாப்த காலம் பாடசாலையை நிர்வகித்திருக்கலாம். அவரது உயர் கல்விக்காக 2004 ஆம் வருடம் கற்கைக்காக விடுமுறை பெற்றுச் சென்றிருந்தார். இக்கால பகுதியில் திரு இ. இராஜமகேந்திரன் அவர்கள் அதிபராக இருந்து பாடசாலையை நிர்வகித்தார் உயர் கல்வி முடிவடைய மீண்டும் பாடசாலையை திரு.இரத்தினகுமார் பொறுப்பேற்று 2006ம் ஆண்டின் இறுதிவரை அதிபராக கடமை ஆற்றினார். இதில் ஒரு வருடம் பறி போய்விட்டது. இவருடைய காலம் பாடசாலை வரலாற்றில் ஒரு முக்கியமான காலம் என்றால் மிகையாகாது. அண்ணளவாக ஆயிரம் மாணவர்களை கொண்டு தரம் ஒன்று தொடக்கம் 13 வரை நடைபெற்ற இப் பாடசாலையில் மாணவர் தொகை இரட்டிப்பாகியது. இடம்பெயர்ந்த மாணவர்கள் சேர்வினால் மாணவர் தொகை 2000 த்திற்கும் அதிகமாயிற்று. தரம் பதினொன்றில் கலைப் பிரிவு மட்டும் இயங்கி வந்தது. 1997ஆம் ஆண்டில் வணிகப்பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர் தொகை, கட்டடம் பற்றாக்குறை, தளபாடம் போதாமை இதன் காரணமாக இரு வேளை பாடசாலையாக நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடமையாற்றினர். கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிகக் கூடுதலான மாணவர் தொகையை கொண்டு இருந்தது இப்பாடசாலை ஆகும்.(திரு.பூராஜா அதிபருக்கு உதவியாக) இடம்பெயர்ந்து இங்கு வந்த அதிபர்களான திரு.பூராஜா,திரு.அலெக்சாண்டர் ஆகிய இடம்பெயர்ந்து வந்த நல்லா சிரியர் பலர் கடமை ஆற்றினர். தற்போதைய கிளி. வலய ஆரம்பப் பிரிவு பணிப்பாளரான திரு. சி.கணேசலிங்கம் அவர்களும் அக்காலத்தில் இப்பாடசாலையில் தமிழ் பாட ஆசிரியராக கடமை ஆற்றியது குறிப்பிடத்தக்கது. பாடசாலைக்கு முன்பாக உள்ள அரச காணியில் இருந்த நெசவுநிலையை கட்டிடம் அழகு படுத்தப்பட்டு அங்கு பாலர் வகுப்புகள் நடைபெற்றன.
அதிக மாணவர்களை கொண்ட பாடசாலை என்பதாலும் வசதியின்மைகளையும் கருத்தில் கொண்டு உலக வங்கி இப்பாடசாலைக்கென 150 லட்சம் ரூபாய் பண ஒதுக்குடு செய்தது. இதன் பயனாக இப் பாடசாலைக்கு மாடி கட்டிடங்கள் இரண்டு,அழகிய நூலகம் செயற்பாட்டுக்கூடம், அழகியற்கூடம், விஞ்ஞானகூடம், மனைப்பொருளியல் கல்விக்கூடம் என ஏழு கட்டடங்கள் அமைக்கப்பட்டதன் பயனால் ஓலையினால் வேயப்பட்ட கொட்டில் வகுப்பறைகள் மறைந்தன. குழாய் நீர் வசதிகள் செய்யப்பட்டது. பூந்தோட்டம், சிறுவர் பூங்கா, மதில், பாடசாலை முகப்பு வாசல்வளைவு என பாடசாலை புதுப்பொலிவு பெற்றது. இரவு வேளையில் மாணவர்கள் வந்திருந்து கற்றல், கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்காக மின்சார வெளிச்ச வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. பாடசாலைக்கு பகல் காவலாளி இரவு காவலாளி என நியமிக்கப்பட்டு பாடசாலை பாதுகாக்கப்பட்டது. அதிபரின் 5S திட்ட நடைமுறையால் பாடசாலை தூய்மையாக பேணப்பட்டது. வெளிநாடுகளில் வசித்த பழைய மாணவர்கள் உதவியால் கணினி பயிற்சி பிரிவு ஆரம்பிக்கப்பட்டு மாணவர் கணனி அறிவு பெற வகை செய்யப்பட்டது. அதிபர் அலுவலகம் கண்ணாடி அலுவலகமாக மாற்றி அமைக்கப்பட்டது. இவை ஒருபுறம் நடக்க கற்பித்தல் செயற்பாட்டில் தரத்தை வருடம் தோறும் வளர்ச்சி பெற்று காணப்பட்ட புலமை பரிசில் சித்திப் பெறுபேறும், O/L பெறுபேறும், பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் பலர் தெரிவாகியமையும் பறைசாற்றி நின்றன. இவரது காலத்தில் திரு.ம. ஜெகதீஸ்வரன் ஆசிரியர் வழிநடத்தலில் அமரர் கெ. பிரசாந்த் என்ற மாணவன் சாரணர் ஜனாதிபதி விருது பெற்றமையும் புகழாகும். இவருடைய கடமை காலத்தில் 2003 ஆம் ஆண்டில் விவசாய ஆசிரியர் திருமதி.செ. உருக்குமணி அவர்களால் விவசாய பாடத்திற்காக வடிவமைக்கப்பட்ட பயிர்ச்செய்கைப் போட்டியின் அறுவடை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சமாதான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடாத்தியமையும், பழைய மாணவர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி சேகரித்து வழங்கியமையும் பாடசாலை வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. 2006 ஆம் ஆண்டில் புதிய பாடமாக ICT அறிமுகப்படுத்தப்பட்டு கற்பிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு க. பொ.த பரீட்சைக்கு மாணவர்களை தோற்றவைத்து 100% சித்தியும் பெற வைத்தார். திருமதி. சிவாஜினி பரமேஸ்வரன் இவர் ஒரு விஞ்ஞான பாட ஆசிரியராக இருந்த போதும் ICT ஜ கற்பிப்பதில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். இணைப்பாடவிதானச் செயற்பாட்டை பொறுத்த அளவிலும் பெருமுன்னேற்றம் காணப்பட்டது. தமிழ்த்தினப்போட்டி, ஆங்கிலதினப்போட்டி, விளையாட்டுப்போட்டி, உடற்பயிற்சிப்போட்டி எனப்பல பக்கத்திலும் பெருமை சேர்க்க அதிபர் அரும்பாடுபட்டார்.அவருக்கு ஒத்தாசையாக ஒற்றுமையுள்ள ஆசிரியர் குழாமும் காணப்பட்டது. உடற்பயிற்சிப்போட்டியில் தடகளப்போட்டி, பெருவிளையாட்டுக்கள் என்பவற்றிலும் வெற்றிகள் பல பெற்றுப் பாடசாலை புகழ் பூத்தது. ஆங்கிலதினப்போட்டிகள் வெற்றி பெற்று மாவட்டம் வரை சென்றது. தழிழ்த்தினப்போட்டிகளின் வெற்றிகள் மாகாணம்வரை நீண்டது. 2002 ஆம் ஆண்டு காத்தவராயன்கூத்து மாகாணம் வரை சென்று நீண்டது. இவ்வாறு பலவழிகளிலும் முன்னேறி மீண்டும் புகழ் பெற்ற பாடசாலையாகத் திகழ்ந்தது. 2007ஆம் ஆண்டில் திரு.க.முருகவேல் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார். இக்காலம் ஈழப்போராட்டத்தின் இழந்தும்,பிரிந்தும் தவித்தகாலம் கிராமத்தில் ஒவ்வொரு நாளும் அவல நிலை காணப்பட்டது. இவ்வேளை மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டமுடியாது ஏங்கியகாலம். அதிபர், ஆசிரியர் கல்வி அதிகாரிகள் கல்வித்துறையில் கவனம் செலுத்த முடியாத காலமாகப் போர்ச்சூழல் காணப்பட்டது.
மாணவர்கள் வாழ்வு வகுப்பறை பதுங்கு குழிகளுக்குள் முடங்கிக் காணப்பட்டது. இருந்தும் அதிபர் அவர்கள் கல்வியில் முன்னேற்றத்துடனும் கரிசனையுடன் செயற்பட்டு மாணவர்கள் பரீட்சைக்குத் தயார்ப்படுத்தபட்டனர். பெறுபேறுகளிலும் திறமை கிடைத்தது. 2008ஆம் ஆண்டில் திரு.சி.முருகானந்தம் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்ற போது கிளிநொச்சி இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி வழிந்தது. தொடர்யுத்தம் குண்டு வீச்சு எறிகணை வீச்சு யாவுக்கும் முகங்கொடுத்த அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் 2008ம் வருட O/L பரீட்சை வரைகல்விச்செயற்பாட்டில் மட்டும் இயன்றவரை ஊக்கம் காட்டி பரீட்சைக்கு முகங்கொடுத்தனர். 06.01.2009 ல் இப்பிரதேசம் முழுவதும் இடம்பெயர்ந்து விட்டது.
மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 26.04.2010 ஆம் ஆண்டில் மீளப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது சுடுகாடாக் காட்சியளித்தது. தொடர்ந்தும் மீள்குடியேற வரும் மக்களின் முகாமாகப் பேணப்பட்டது. அதிபரின் முயற்சியால் இடிந்த கட்டிடங்கள் திருத்தப்பட்டு சுற்றுவேலிகள் போடப்பட்டு பாடசாலைச் சுற்றுப்புறம் பூந்தோட்டங்களால் அலங்கரிக்கப்பட்டது. மாணவர்களுக்கு குழாய் நீர் வசதி செய்யப்பட்டு பாடசாலைச்சூழல் கல்வி நிலைக்கு கொண்டு வரப்பட்டது. கல்வி நிலையை உயர்த்துவதற்காக பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் மூலம் மேலதிக வகுப்புக்கள் நடாத்த கல்வியில் மேம்படச் செய்தார். மாணவர்களைக் கல்வியில் ஊக்குவிப்பதற்காக பரிசளிப்புவிழா நடாத்தினார். முதன்முறையாக “இராமாமிர்தம்”எனும் சஞ்சிகை வெளிவர ஆவன செய்தார். 2015 ஆம் ஆண்டில் இடைக்காலத்தில் அதிபராக இப்பாடசாலையின் பழைய மாணவனாகிய திரு. சுப்பிரமணியம் நடராசா அவர்கள் பதிவியேற்றார். “தான் கற்ற பாடசாலை தன்னுடைய பாடசாலை என்ற பற்றோடு சேவை செய்தார். மாணவர்களுடன் மிகவும் கண்ணிய உறவைப் பேணியவர் வைரவிழா நினைவுத்தூபி, சரஸ்வதிசிலை என்பவற்றை ஸ்தாபித்த பெருமைக்குரியவர். மைதானத்தின் ஒருபகுதிக்கு மதில் அமைத்தமை, வேலிகள் புனரமைக்கப்பட்டது, அலுவலகக் கோவைகள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டமை, அலுவலகத்தை கவின் நிலைப்படுத்தியமை, மாணவர் ஒழுக்கக்கோவை வெளியிட்டமை, மாணவர் பதிவுப் புத்தகம் செயற்படுத்தியமை, பாடசாலைக்கு கணினிகள் பெற்றுக் கொடுத்தமை மிகவும் குறிப்பிட கூடிய செயற்பாடுகள் ஆகும். மேலும் எமது பாடசாலையில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பித்து கால்நூற்றாண்டை அண்மித்த நிலையில் முதல் “இராமநாதம்“ எனும் சஞ்சிகை வெளியிடக் காலாக இருந்த அதிபர் ஆவார்.
திரு.ஆM.C.L. மனுவல் அவர்கள் எம்பாடசாலையைப் பொறுப்பேற்றுள்ளார் இவரது காலத்தில் எமது பாடசாலை வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வாழும் பழையமாணவர்களின் பெரும் முயற்சியினால் வைரவிழாக்கான ஆவனு செய்யப்படுகின்றது. வெள்ளிவிழாவின்றி, பொன்விழாவின்றி, வைரவிழாவுக்கான விழாவையும் இந்தப் பாடசாலைக்கு சிறந்த நிர்வாகத்திறமை மிக்க அதிபர் கிடைத்திருப்பது பாடசாலையின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் திரு.மனுவல் என்பவர் அதிபர் அவர்கள் இப்பாடசாலைக்கு புதியவர் அல்லர். உயர் வகுப்பு ஆசிரியராகவும் பாடசாலை நிர்வாகத்தில் பங்கு கொண்டவராகவும் ஒரு தசாப்த காலத்திற்கு மேல் எம்பாடசாலையில் ஆசிரியப்பணி புரிந்தவர். எம்பாடசாலையின் வருத்த துன்பங்களை தெரிந்தவர் அதை இணங்காணும் திறமையும் தீர்த்துக்கொள்ளும் பக்குவமும் தெரிந்தவர்.