நிறுவனம்:ஸ்ரீ சண்முகா தர்மஸ்தாபனம்
பெயர் | ஸ்ரீ சண்முகா தர்மஸ்தாபனம் |
வகை | சமூக நிறுவனம் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | திருகோணமலை |
முகவரி | ஸ்ரீ சண்முகா தர்மஸ்தாபனம், திருகோணமலை |
தொலைபேசி | 0265670234 |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
ஸ்ரீ சண்முகா தர்மஸ்தாபனம் திருகோணமலையில் பல்வேறுபட்ட பணிகளை இன்றுவரை செய்து வரும் ஒரு ஸ்தாபனம் ஆகும். திருகோணமலையில் இந்து சமயம், கல்வி வளர்ச்சி குன்றிய காலத்தில், திருகோணமலையிலிருந்து கல்வி கற்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ் இந்துப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள இராமநாதன் கல்லூரிக்குச் சென்றார்கள். இக்காலத்தில் திரு. சிற்றம்பலம் சண்முகம்பிள்ளை அவர்கள் தமது உறவினர் கல்வி கற்கும் இராமநாதன் கல்லூரிக்குச் சென்றிருந்தார். அக்கல்லூரியின் கல்வி, சமய வளர்ச்சியைக் கண்டு மனம் பூரித்தார். இது போன்ற பாடசாலையை திருகோணமலையில் நிறுவி சமய, கல்வி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டு மென்ற நற்சிந்தனையை தனது மனதில் எண்ணி தன் துணைவியார் திருமதி. தங்கம்மா சண்முகம்பிள்ளை அவர்களிடம் தெரிவித்தார். எண்ணத்தை செயற்படுத்துவதற்கு முன்பாகத் திரு. சிற்றம்பலம் சண்முகம்பிள்ளை அவர்கள் 1917ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
தனது கணவரின் நற்சிந்தனையை செயற்படுத்த வேண்டுமென்ற அவாக் கொண்ட திருமதி. தங்கம்மா சண்முகம்பிள்ளை அவர்கள் இதற்கமைவாக, கோணேசப் பெருமானின் அருளுடன் 1923ம் ஆண்டு தாய் மொழியாகிய தமிழ் மொழி தழைக்க ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தை நிறுவினார். இவ்வித்தியாலயத்தை சிறந்த முறையில் நடாத்த வேண்டு மென்று ஆர்வம் கொண்ட அவ்வம்மையார் தனது பெறாமகன் திரு. நா. கிருஸ்ணதாசன் அவர்களைப் பக்கபலமாகக் கொண்டு செயற்பட்டார். இவ்விருவரும் திருகோணமலை மாவட்டத்தில் இவ்வித்தியாலயம் முன்னனியில் திகழ வேண்டுமென்ற நோக்கத்தோடு அதிசிறந்த அதிபர்களையும், ஆசிரியர்களையும் இந்தியாவில் இருந்து வரவழைத்து இவ்வித்தியாலயத்தைத் திறம்பட நடத்தி வந்தனர்.
1939ம் ஆண்டு ஏற்பட்ட இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படுத்துவதற்காக இப்பாடசாலை எடுக்கப்பட்டது. யுத்தத்திற்குப் பின் நாட்டில் அமைதி நிலவியதும், இவ்வித்தியாலயம் செயற்பட தொடங்கியது. தாம் தொடங்கிய வித்தியாலயத்தை திருகோணமலை இந்து மக்களின் பொது ஸ்தாபனமாக தரும சாதனம் முடித்து தமது பெறாமகன் திரு. நா. கிருஸ்ணதாசன் அவர்களை 1949இல் தர்மகர்த்தாவாக நியமனம் செய்தார். தமது கணவரால் கட்டப்பட்ட இந்து மக்களின் அந்தியேட்டி நடைபெறும் மடங்களை கவனிப்பதற்கு புண்ணிய வெந்நீரூற்றுக்கள் பொருந்திய கன்னியாவில் சொற்பகாலம் சென்று தங்கி இருந்தார். பின்னர் இவ்வம்மையார் திருகோணமலையிலுள்ள தமது இல்லத்தில் 1953ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
1953ம் ஆண்டிலிருந்து 1961ம் ஆண்டு வரை திரு. கிருஸ்ணதாசன் அவர்கள் ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தின் நிர்வாகப் பொறுப்பினை தடாத்தி வந்தார். திருமதி. கமலாம்பிகை கிருஸ்ணதாசன், திரு. நடராஜா, திரு. முருகுப்பிள்ளை போன்ற பெரியோர்கள் இவ்வித்தியாலயத்தில் முகாமையாளராக கடமையாற்றினார்கள். இவ்வித்தியாலயத்தில் மும்மொழிகளிலும் கல்வி போதிக்கப்பட்டு வந்ததுடன் திருகோணமலை மாவட்டத்தில் இவ்வித்தியாலயம் முதல் இடத்தையும் வகித்தது. இப்பாடசாலையில் சிங்கள மாணவர்கள் கல்வி கற்பதற்கு சிங்கள ஆசிரியர்களை நியமனம் செய்து, வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வந்தன. இவ்வித்தியாலயத்தில் விஞ்ஞானக் கல்வியை ஆரம்பித்த பெருமை திரு. தா. கிருஸ்ணதாசன் அவர்களையே சார்ந்ததாகும். 1961ம் ஆண்டு இவ்வித்தியாலயத்தை அரசாங்கம் பொறுப்பேற்றது. இதன் பின்னர் திருமதி. தங்கம்மா சண்முகம்பிள்ளையின் ஞாபகார்த்தமாக ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனம்' உருவாக்கப்பட்டது. திருமதி. தங்கம்மா சண்முகம்பிள்ளை அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு, வசதியற்ற மாணவர்களுக்கு இல்லம் ஒன்று உருவாக்கி, திரு. கிருஸ்ணதாசன் பராமரித்து வந்தார். இப்பிள்ளைகளை திரு. நவரத்தினம் அவர்களும், திரு. கந்தையா அவர்களும் மேற்பார்வை செய்து வந்தனர். இதற்கு ஸ்தாபகராக திரு. கிருஸ்ணதாசன் இருந்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கிராமப் புறத்திலுள்ள வசதியற்ற மாணவர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கும் பொருட்டும் அவர்களுக்கு உணவு, உடை, உறையுள் ஆகிய வற்றை அளிக்கும் பொருட்டும் விடுதி வசதிகளை விஸ்தரிப்பதற்காக ஸ்ரீ சண்முக தர்ம ஸ்தானத்தினால் பின்வரும் இல்லங்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.
1.ஸ்ரீ சண்முக மகளிர் இல்லம் - வித்தியாலயம் வீதி, திருகோணமலை.
2. ஸ்ரீ சண்முக மகளிர் இல்லம் - ஏகாம்பரம் வீதி, உப்புவெளி.
3. ஸ்ரீ சண்முக ஆண் பிள்ளைகள் இல்லம் - உட்துறைமுக வீதி.
இவற்றில் வித்தியாலயம் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சண்முக மகளிர் இல்லம் 1957ம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்றது. இவ் இல்லம் தனியார் வீட்டில் நடாத்தப்பட்டு வந்தது. பிள்ளைகனின் எண்ணிக்கை அதிகரித்தமையால், 1960ம் ஆண்டு உப்புவெளியில் திரு. விதானகே அலிஸ் சில்வா என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் காணியில் சமூக சேவை திணைக்களத்தின் உதவியுடன் ஸ்ரீ சண்முக மகளிர் இல்லம் அமைக்கப்பட்டது. 1970ம் ஆண்டளவில் கண்டி றோட், மட்டிக்களியில் திரு. கிருஸ்ணதாசனுடைய மகன் திரு. விசாகன் கிருஷ்ணதாசனால் வழங்கப்பட்ட காணியில் ஆண் பிள்ளைகளுக்கான இல்லம் அமைக்கப்பட்டது. இங்கு தங்கியிருக்கும் பிள்ளைகள் விவசாயம் செய்யும் பொருட்டும் ஏனைய தேவைகளின் பொகுட்டும் 11 ஏக்கர் காணி அரசாங்கத்திடம் இருந்து 99 வருட குத்தகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டது. இம் மூன்று இல்லங்களிலும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தங்கியிருந்தனர். 1971ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இம்மூன்று இல்லங்களையும் திரு. நா. கிருஷ்ணதாசன் அவர்களின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் அவருடைய சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மேற்பார்வை செய்து வந்தனர்.
1971ம் ஆண்டு செல்வி. திலகவதி ஆறுமுகம் இவ்வில்லங்களுக்கு முகாமையாளராக இருந்து தொண்டாற்றினார். இவர் ஒரு ஆசிரியராக இருந்த காரணத்தால் விடுதியில் தங்கியிருந்த பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்தார். விசேடமாக உயர்தர வகுப்பில் கணிதப் பாடத்தில் பெரும்பாலான பிள்ளைகளை சித்தியடையச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வில்லத்தில் தங்கியிருந்து கல்வி கற்ற பிள்ளைகள் இன்று பட்டதாரி ஆசிரியர்களாகவும், பயிற்றப்பட்ட எழுதுவினைஞர் இன்னும் பல்வேறு துறைகளிலும் கடமையாற்றி வருகின்றனர். செல்வி. திலகவதி ஆறுமுகம் அவர்கள் வசதியற்றவர்களுக்கு கல்வித்தானம் வழங்கி வந்தார். இவர் ஸ்ரீ சண்முக வித்தியாலய அதிபராக கடமையாற்றி, அப்பாடசாலையின் அபிவிருத்திக்கு பெரும்பாடுபட்டுள்ளார்.
ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனத்தின் மேற்குறிப்பிட்ட மூன்று இல்லங்களும் சிறந்த முறையில் இயங்கி வந்தன. சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பிள்னைகளுக்கு மாதாந்தம் ரூபா 50/- வீதம் வழங்கப்பட்டது. ஆனால் இல்லத்தில் இருக்கும் அங்கீகாரம் பெறாத பிள்ளைகளுக்கும் வயதடைந்த பிள்ளைகளுக்கும் (18 வயதிற்கு மேற் பட்டோர்) அரசாங்கம் நிதியுதவி வழங்குவதில்லை. அரசாங்கம் அளிக்கும் சிறு தொகை கூட உரிய நேரத்தில் கிடைப்பதுமில்லை. இவர்களது பராமரிப்புச் செலவிற்கு வேறு பொது நிறுவனங்களும், அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாடுகளும் உதவியளித்து வருகின்றன.
இல்லப் பிள்னைகள் ஸ்ரீ சத்தியசாயி சேவா சமித்தியில் நடைபெறும் சமய வகுப்புக்கவில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வகுப்புக்களில் மனித மேம்பாட்டுக் கல்வி பயிற்றப்பட்டு வந்துள்ளது. அத்துடன் பஜனை வகுப்புக்களும் நடைபெற்றுள்ளன. திருகோணமலை இந்து இளைஞர் பேரலையினால் நடாத்தப்படும் சமயப் போட்டிகளில் இல்லப் பிள்ளைகள் பலர் பங்கு பற்றி பரிசுகளும் பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயலின் காரணமாக மட்டிக்களியில் அமைந்துள்ள ஸ்ரீ சண்முக ஆண் பிள்ளைகள் இல்லம், இலங்கை அரசாங்க படையினரால் சேதப்படுத்தப்பட்டது. இங்கு தங்கியிருந்த பிள்ளைகளும், மேற்பார்வை யாளர்களும் இவ்வில்லத்தில் தொடர்ந்திருக்க அஞ்சி, உப்புவெளியில் அமைத்திருந்த மகளிர்களுக்கான இல்லத்தில் தஞ்சம் புகுந்தனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள மக்களால் அவ்வில்லம் சேதமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1985ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தின் போது ஆண் பிள்ளைகளுக்கான இல்லமும், பெண் பிள்ளைகளுக்கான இல்லமும் முற்றாக சேதமாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, பொருட்கள் யாவும் சூறையாடப்பட்டன. இவ்வில்லத்தில் இருந்த பிள்ளைகள் ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தில் அகதிகளாக இருந்து வித்தியாலயம் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சண்முக மகளிர் இல்லத்தின் தற்காலிகமாகக் கொட்டில் அமைத்து தங்கி வருகின்றனர்.
1985ம் ஆண்டிலிருந்து அழிந்து போன இவ்விரு இல்லங்களையும் திருப்பிக் கட்டுவதற்கு திருகோணமலை அரசாங்க அதிபர், சிறுவர் நன்னடத்தை திணைக்களம், புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாண அரசு முதலிய அரச திணைக்களங்களுடன் பல தடவை தொடர்பு கொண்டும், போதியளவு நிதி கிடைக்கப் பெறாதது மன வேதனைக்குரிய விடயமாகும். ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட கன்னியாவில் அமைந்துள்ள அந்தியேட்டி மடங்களும் திருத்த வேண்டி இருந்துள்ளது.
1986ம், 1987ம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் ஏற்பட்ட வன்செயலின் காரணமாக ஆதரவற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து பிள்ளைகளை இல்லத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் நாள்தோறும் வந்து கொண்டிருந்தன. ஆனால் இட நெருக்கடியினாலும் நிதி பற்றாக்குறையினாலும் இப்பிள்ளைகளை இல்லத்தில் சேர்க்க முடியாமலிருந்தது. அத்துடன் பெண் பிள்ளைகள் தங்கியிருக்கும் இல்லம் தனியாருடைய வீடாகும். வீட்டுச் சொந்தக்காரர் தங்கள் தேவையின் பொருட்டு, வீட்டை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டதன் காரணமாக ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனத்திற்கு சொத்தமான இல, 54 வித்தியாலயம் வீதியில் அமைத்துள்ள பழைய கட்டிடம் இருந்த இடத்தில் நிரந்தரமான கட்டிடத்தைக்கட்ட வேண்டுமென தர்மஸ்தாபனத்தால் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைவாக திரு. கிருஸ்ணதாசன் அவர்களின் ஆலோசனையின் பேரில் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் 31 திகதி நோராட் நிறுவனத்திற்கு இல்லம் கட்டுவதற்கான நிதியுதவி கேட்டு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. விண்ணப்பம் அனுப்பிய சொற்ப காலத்தில் மீண்டும் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நோராட் நிறுவனம் இலங்கையில் தங்கள் அலுவலகத்தை மூடி விட்டு தம் நாட்டிற்குச் சென்றனர். 1988ம் ஆண்டு திரும்பவும் இலங்கையில் நோராட் நிறுவனம் திறக்கப்பட்டது. மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை செயலாளரும், ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனத்தைச் சேர்த்தவருமான திரு. செ. சிபாதசுந்தரம் அவர்கள், அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தில் கடமையாற்றிய திருவாளர் கந்தசாமி அவர்களை அழைந்து இல்ல கட்டிட நிலைமைகளை நேரில் விளக்கிக் கூறினார். இல்லம் கட்டிடத்தின் நிலைமையை உணர்த்த திருவாளர் கந்தசாமி அவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு ஆயர் வணக்கத்துக்கும் உரிய சுவாமிப்பிள்ளை அவர்களை இல்லத்திற்கு அழைத்து வந்து, புதிய கட்டிடம் ஒன்று கட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதனை உணர்த்த வணக்கத்துக்குரிய ஆயர் அவர்கள் தன்னால் இயன்றவரை உதவி செய்வதாக உறுதியளித்தார். இதற்கிடையில் திரு. கிருஷ்ணதாசன் அவர்களும் இது சம்பந்தமாக நோராட் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டார்.
திரு. கந்தசாமி அவர்கள் 1988.03.20த் திகதி நிர்வாகச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் '"நானும் அகதிகள் புனர்வாழ்வு நிறுவன குழு உறுப்பினர் திரு. கணபதிப்பிள்ளை அவர்களும், நோராட் நிறுவனத்துடன் 1988.03.18த் திகதி திட்டம் சம்பந்தமாக கலந்துரையாடினோம். இது சம்பந்தமாக வணக்கத்துக்குரிய ஆயர் அவர்களின் சிபாரிசும் கிடைக்கப் பெற்றது. இத்திட்டத்திற்கு நோராட் நிறுவனம் உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்குண்டு இது சம்பந்தமாக நோராட் நிறுவனத்திடமிருந்து குறுகிய காலத்தில் உங்களுக்கு அறிவித்தல் கிடைக்கும். நீங்கள் கூடிய விரைவில் கட்டிடத்தை ஆரம்பிக்கலாம் என்று எழுதியிருந்தார்.
திரு.கந்தசாமி அவர்கள் எழுதிய கடிதத்தின் பிரகாரம் நோராட் நிறுவனம் இக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு அங்கீகரித்து ரூபா 780.000/- வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தது. இது சம்பந்தமாக 1988.05.08ந் திகதி ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனத்திற்கும் நோராட் நிறுவனத்திற்கும் உதவிய திரு. கந்தசாமி அவர்களின் அகால மரணத்தை கேள்வியுற்று அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்து ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டது.
இல்லத்திற்கு வருகை தரும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியினாலும் விஸ்தீரணம் பற்றாக்குறையினையும் கருத்திற் கொண்டு 2 மாடி கட்ட வேண்டும் என்று ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனத்தினர் தீர்மானித்து, கட்டிடத்திற்கான வரைபடமும் மதிப்பீடும் திருத்தியமைக்கப்பட்டது. இக்கட்டிடத்திற்கான மதிப்பீடு 2,075,000/ ஆகும். இக்கட்டிடத்திற்கான செலவு மதிப்பீட்டையும் வரைபடத்தையும் தந்து உதவிய பட்டய கட்டிடக் கலைஞரும், பொறியியலாளரும் செல்வரெத்தினம் பெரேராக் குழுவினர் ஆவர். இக்கட்டிடத்திற்கான திருத்த மதிப்பீடும் வரைபடமும் நோராட் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. புதிய கட்டிடத்திற்கான அத்திவாரக்கல் 14.08.1988ம் திகதியன்று இல்லத்தை சார்ந்த பெண் பிள்ளைகளால் நாட்டப்பட்டது. கோரிக்கைகளை ஏற்று நோராட் நிறுவனம் இதற்கான நிதியுதவி வழங்க சம்மதித்தது. இம்மகிழ்ச்சிகரமான வேளையில் இக்கட்டிடத்திற்கான வரை படத்தையும் மதிப்பீட்டையும் தந்துதவிய பொறியியலாளர் திரு. செல்வரெத்தினம் அவர்களின் நிடீர் மரணச் செய்தி ஆழ்ந்த துயரத்தில் மூழ்கச் செய்தது அவர் ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனத்துக்கு ஆற்றிய சேவைக்கு அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது.
இவ்விரண்டு மாடிக் கட்டிடம் உறுதியாக கட்ட வேண்டியிருந்ததினால் இப்பாரிய கட்டிட வேலைப் பொறுப்பு ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபன உறுப்பினரான திரு. கா. விநாயகசோதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இப்பாரிய பொறுப்பை ஏற்க தயங்கிய பொழுதும் தர்மஸ்தாபனத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட ஆதரவற்ற பிள்ளைகளுக்காக இப்பாரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இக் கட்டிடத்துக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வது முதல் கட்டிட வேலைகளை மேற்பார்வை செய்வது வரை கடமைகளை செய்து வந்தார். இந் நிதி உதவியை பெற கட்டிடத்திற்கு ஏற்பட்ட செலவிற்கான நிதியை ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபன நிர்வாகச் செயலாளர் வழங்கி வந்தார்.
திரு. கா. விநாயகசோதி அவர்களிடம் இக்கட்டிடம் 500 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்க வேண்டும் என்றும், இவ்வில்லத்தில் தங்கியிருக்கும் பிள்ளைகள் சகல வசதியுடன் இருக்க வேண்டும் என்றும் எண்ணி செய்லாற்றி வந்தார். பிறிதொரு பலனும் கருதாமல் தனது பணியை நிறைவேற்றினார். இவருடைய பரந்த நோக்கத்தின் பயனாக இக்கட்டிடம் எழுந்து நிற்கின்றது.
பின்னர் ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனத்தில் அவருடைய மகன் திரு. விசாகன் கிருஸ்ணதாசன் உட்பட எட்டு உறுப்பினர்கள் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகின்றார்கள். சில தரும ஸ்தாபனத்தார் வெளிநாடுகளில் இருந்தாலும் தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சண்முக தர்ம ஸ்தாபனத்தினால் ஆற்ற வேண்டிய பணிகள் பல உண்டு. அத்துடன் முதூர் தேர்தல் தொகுதியில் கட்டைப்பறிச்சான், பூமாலைவெட்டை போன்ற கிராமங்களில் ஸ்ரீ சண்முக தர்மஸ்தாபனத்துக்குரிய சுமார் 27 ஏக்கர் வயல்கள் உண்டு. ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள வன்செயலைச் சாதகமாக பயன்படுத்தி சிலர் அத்துமீறி தர்மஸ்தாபனத்துக்குரிய காணியை தமக்குரியதாக்கிக் கொண்டு தெற்செய்கை செய்வது மிகவும் மனவேதனைக்குரிய செயலாகும்.
வசதியற்ற பிள்ளைகளின் சரணாலயமாக நிகழ்ந்து வரும் ஸ்ரீ சண்முக இல்லம் எதிர் காலத்திலும் தனது நற்பணியை தொடர வேண்டும். இந்த இல்லம் மற்றும் ஸ்தாபனம் தொடர்ச்சியாக இன்றுவரை இயங்கி வருகின்றது.