நிறுவனம்:யாழ்/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயம்
பெயர் | யாழ்/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயம் |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | |
முகவரி | கண்டி வீதி, யாழ்ப்பாணம் 40000 |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
ஶ்ரீ சித்தி விநாயகரும் சிவன் பார்வதியும் இனைந்து அருட்பார்வையை வீசும் புனித பூமியில் ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை அமைந்திருக்கிறது. சைவப்பாரம்பரியத்தையும் தமிழ்ப்பண்பாட்டையும் கட்டிக்காக்கும் ஓர் பாடசாலை ஆகும். ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை தன்னைச் சூழ உள்ள பிள்ளைகளின் ஆரம்பக்கல்விக்கு உறுதியான சிறப்பான அத்திவாரத்தினை இட்டுக் கொள்வதோடு தரமான இடைநிலைக்கல்வியையும் வழங்கி வருகின்றது. 1910 ஆம் ஆண்டு ஶ்ரீமான் விஸ்வநாதர் காசிப்பிள்ளை அவர்களால் ஶ்ரீ சித்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான காணியிலேயே சைவப்பாடசாலையாக ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஶ்ரீமான் காசிப்பிள்ளை அவர்களுக்கு பின்னர் பாடசாலை முகாமைத்துவம் திரு ஆ.கனகரத்தினம் அவர்களால் பொறுப்பேற்கப்பட்டது. காசிப்பிள்ளை அவர்கள் தனது பெரும் பணிக்கு ஆதரவு வழங்கிய தன் வாழ்க்கைத்துனைவி பார்வதியின் பெயரை இப்பாடசாலைக்கு சூட்டினார் என்பதும் நாம் அறியகிடக்கும் அரிய உண்மைகளாகும். 1928 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அடிகள் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவருடன் இராஜகோபாலச்சாரியாரும் வந்தார். இவர்களை சித்தி விநாயகர் ஆலய வெளிவீதி வடகிழக்கு மூலையில் முன்னமே அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைத்து வரவேற்றனர். இதை முன்னின்று செய்தோர் கெளரவ திரு. ஆ.கனகரத்தினம் அவர்களும் ஶ்ரீ பார்வதி வித்தியாசாலைக் குழுவும் அப்போது நல்ல நிலையில் இருந்த இளைஞர் கலாவிருத்தி சங்கமுமே ஆகும். மகாத்மா காந்தி ஐந்து நிமிடம் வரையில் இந்திய மக்களின் வறுமை நிலை பற்றியும் கதர் ஆடையைப் பற்றியும் பேசினார். தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு பைசாவும் வறியோருக்கே செலவு செய்யப்படும் என்றார். அப்போது அங்கு நின்ற மக்களும் கோயில் குருக்களும் பணமுடிச்சுக்களை கொடுத்தனர். இவ்வாறு காந்தி வருகையினாலும் ஆசியினாலும் அடுத்த தசாப்தங்களில் ஶ்ரீ பார்வதியின் வரலாற்றில் பொற்காலம் ஏற்பட்டதாக குறிப்பிடுகின்றனர். இலங்கையில் குறிப்பிட்ட ஒரு காலப்பரப்பில் அனைத்துப்பாடசாலைகளும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. இவ்வாறு வடமாகணத்திலும் அரசினால் சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகளுள் முதலாவது பாடசாலையாக ஶ்ரீ பார்வதி குறிப்பிடப்படுகின்றது. 1987 ஆம் ஆண்டு இந்தியா அமைதிப்படையினரின் வருகையுடன் பாதிக்கப்பட்ட இப்பாடசாலையானது 1990 இல் தீவகத்திலிருந்து இடம்பெயர்ந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் தன்னகத்தே உள்வாங்கி அம்மாணவர்களுக்கும் கல்வியை வழங்கியது. 1995 ஒக்டோபர் 30ஆம் திகதி இடம்பெயர்ந்த எமது பாடசாலையின் கட்டிடங்கள் கற்றல் உபகரணங்கள் என்பவற்றை இழந்து நின்றது. இடப்பெயர்வின் போது கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் தற்காலிகமாக இயங்கியது. மீண்டும் 1996 மே மாதம் தன் சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கிய ஶ்ரீ பார்வதி வளர்ச்சி கண்டு கொண்டிருக்கையில் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அரியாலை பகுதியில் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக பாடசாலை இடம்பெயர்ந்து யா/கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் தொடர்ந்து யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்திலும் இயங்கியது. ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை அரச பாடசாலையாவதற்கு முன் பாடசாலை நிர்வாகத்தை கட்டிக்காத்த முகாமையாளர்களாக பின்வருவோர் குறிப்பிடப்படுகின்றனர். 1.ஆ.கனகரத்தினம் [1910] 2.சி.அருளம்பலம் [1930] 3.அ.விசுவநாதன் [1943] 4.செல்வி.கனகம்மா சரவணமுத்து [1960] 2003 ஆம் ஆண்டில் ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை புனர்நிர்மானம் செய்யப்பட்டு நூலகம், ஆய்வுகூடக்கட்டிடம், பாடசாலை மைதானம் என செழிப்புடன் விளங்குகின்றது. அத்துடன் 2010 ஆம் ஆண்டில் இப்பாடசாலையின் வரலாற்றில் உச்சக்கட்டமான நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக அதிபர் சி.சிவநேசன் தலைமையில் இடம்பெற்று நூற்றாண்டு விழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.