நிறுவனம்:மனையாவெளி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் ஸ்ரீ வல்லபசக்தி தேவஸ்தானம்
பெயர் | மனையாவெளி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் ஸ்ரீ வல்லபசக்தி தேவஸ்தானம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | மனையாவெளி |
முகவரி | திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் ஸ்ரீ வல்லபசக்தி தேவஸ்தானம், மனையாவெளி, திருகோணமலை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
மனையாவெளிப் பிள்ளையார் கோவிலென விளங்கும் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் திருக்கோணமலையில், மனையாவெளி என்னும் இடத்தில் இருக்கின்றது. ஈழத்தின் கிழக்குக் சுரையில் திருக்கோணேசப் பெருமான் அமர்ந்திருக்கும் கோணேசமலைக்கும் கந்தசுவாமி மலைக்கும் (கடற்படைத்தளப் பிரதேசத்திலுள்ளது) இடையிலுள்ள "இராசமலை" என்னும் குன்றின் சாரலில் கடற்கரையை அடுத்துள்ள சமவெளியில் கிழக்கு முகமாக இவ்வாலயம் அமைத்திருக்கின்றது. திருக்கோணமலைப் வைத்தியசாலையிலிருந்து சிறிது தூரத்தில் டொக்கியாட் வீதியிலிருந்து பிரிந்துசெல்லும் நீதிமன்ற வீதியின் இறுதியில் இவ்வாலயம் இருக்கின்றது.
போத்துக்கீசர் இலங்கையைக் கைப்பற்றிய காலந் தொடக்கம், பிரித்தானியராட்சிக்காலம் வரையும் இராசமலை என்று சொல்லப்படும் சிறு குன்றிலுள்ள அரசாங்க மனையில் தான் அரசாங்க அதிபர் இருந்து திருக்கோணமலையை ஆட்சி செய்துவந்தார். இன்றும் அப்படித்தான் நடைபெற்று வருகின்றது. இதனால் இந்த இடத்தை "இராசமலை" என்று பரம்பரையாக வழங்கி வருகின்றார்கள். "மனையார்வெளி என்பது "மனையாவெளி" என்று மருவி வழங்கி வருவதாகக் கருத இடமுண்டு. அரச மனையைச் சேர்த்தவர்களுடைய மாடு, ஆடுகளின் மேய்ச்சல் வெளியாக இருந்ததினால் இந்த இடம் மனையார்வெளியெனப் பெயர் பெற்றிருந்தது. இவ்வாலயம் தற்போதுள்ள இடத்தைக் "கோயிற்காடு" எனப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தார்கள். இந்த இடத்தைக் கோவிற்காடு என்று அரசாங்க நில அளவைப்பகுதியாரும் குறிப்பிட்டு வந்திருக்கின்றார்கள்.
திரு. முருகப்பர் கதிரவேலு என்பவர் யாழ்ப்பாணம், வேலைணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் திருக்கோணமலைக்கு வந்தபோது மனையாவெளிக் காட்டில் ஒரு பாழடைந்த ஆலயம் இருப்பதையறிந்தார். அரசாங்கத்தின் அனுமதி பெறாது அந்த இடத்தைத் துப்பரவு செய்து ஆலயத்தைத் திருத்த முற்பட்டதினால் அரசாங்கம் அவருக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது. 27.09.1905 ஆம் ஆண்டு இந்தக் கோயிற்காட்டில் அரை ஏக்கர் நிலத்தை அரசாங்கம் திரு. முருகப்பர் கதிரைவேலு என்பவருக்கு ரூபா பதினேழுக்கு விலைக்கு கொடுத்திருந்தது. அந்த வழக்கின் வெற்றியாகத்தான் அரையேக்கர் நிலத்தை விலையாகப் பெற்றார். அதன்பின் ஆலயத்தின் திருத்தவேலைகளை ஆரம்பித்து கற்பக்கிரகம், அர்த்தமண்டபங்களைத் திருத்திக் கட்டி 1906ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்தார். தொடர்ந்து ஆலயத்தைப் பராபரித்து வருங்காலத்தில் சுற்றுப்புறங்கலுள்ள காட்டை நோட்டம்விட்டு ஆராய்ந்தபோது புதருக்குள் ஒரு அம்மன் விக்கிரகமொன்று இருப்பதைக் கண்டு அதனை எடுத்துவந்து தான் திருத்தியமைத்த பிள்ளையார் கோவிலுக்குள் வைத்திருந்தார். பாழடைந்து இந்த விக்கிரகம் பண்டைக் கோவிலுக்குரியதாயிருக்க வேண்டும். இந்த பிரதேசம் முழுவதும் பண்டைக்காலத்தில் சைவத் தமிழ் மக்களின் குடியிருப்பாக இருந்ததென்பதற்கு இவை ஆதாரமாகின்றது. திருக்கோணேஸ்வரத்தோடு தொடர்புபட்ட வரலாறு ஒன்றும் இந்த ஆலயத்திற்கு உண்டு. இவ்வாலயத்தில் கோணலிங்கத்திற்கு தனியாகச் சிறிய கோயிலோன்றிருக்கின்றது. இவ்வாலயத்திலிருந்து அபிஷேக திவியங்கள் எடுத்துச் சென்று கோணேஸ்வரத்தில் அபிஷேகம் செய்வித்த பின்னரே இவ்லாலய அலங்கார உற்சவம் ஆரம்பம். இந்தப் பண்டைய வழக்கம் இன்றும் திகழ்ந்து வருகின்றது.
இந்தியாவிலிருந்து வந்த சந்நியாசி ஒருவர் இங்கு வந்த போது இந்த அம்மன் விக்கிரகம் பராபரிப்பில்லாமல் வைக்கப்பட்டிருப்பதைத் தனது ஞானத்தாலறிந்து கதிரவேலுவை, அந்த அம்பாளின் மகத்துவத்தைப்பற்றிக் கூறி இந்தப் பிள்ளையார் கோவிலிலேலே அம்பாளையும் பிரதிஷ்டை செய்யும்படி வேண்டிக்கொண்டாராம். பொது மக்களும் இடையில் அபிப்பிராயபேதம் இருந்தபோதிலும் கோணேசப்பெருமானை முன்வைத்து அப்பெருமானுடைய திருவருட் குறிப்பைப் பெற்று இந்த அம்பாளைச் சந்நியாசியார் பிரதிஷ்டை செய்தார். அவர் ஸ்ரீவல்லபாம்பிகையின் ஆலயவாசலிலுள்ள குண்டத்தில் அன்று தொடங்கிவைத்த நித்தியாக்கினி இன்றும் அனையாமற் காப்பாற்றப்பட்டு வந்துள்ளது.
இன்றும் அக்குண்டத்தில் வேப்பங்கட்டைகளையிட்டு அக்கினியை அணையாமல் வளர்த்து வருகின்றார்கள். ஸ்ரீவல்லபாம்பிகைக்கு பிள்ளையார் கோவிலின் மகாமண்டபத்தில் விமானத்தோடு கூடிய தனி ஆலயமமைத்து தெற்குமுகமாகப் பிரதிஷ்டை செய்திருக்கின்றார்கள். கொடிய நோய்களையும் தீர்க்கும் தாயாராக அம்பாள் அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றாள். திரு. கதிரவேலு அவர்களின் மறைவுக்குப்பின் அவருடைய மகன் திரு. க. குணசேகரம் என்பவர் பயபக்தியோடு பல திருப்பணிகளைச் செய்து சிறப்பாக நடத்திவந்தார். அவருக்குப்பின் அவருடைய மகன் திரு. கு. லிங்கராசா அவர்களும், அவருடைய மகன் திரு. லி. அம்பலவாணரும் ஆலயத்தைப் பராபரித்து வந்தார்கள். இவ்வாலயத்தில் ஆரம்பத்தில் சிவஸ்ரீ சிவச்சாமிக் குருக்கள் பூசை செய்துவந்தார். பின்னர் அவருடைய பரம்பரையில் வந்த சிவஸ்ரீ இ. கு. பூரணானத் தேஸ்வரக் குருக்களுடைய பரம்பரையினர் பூசை செய்து வருகின்றர்கள். பின்னர் சிவஸ்ரீ பூ. சுந்தரேஸ்வர ஐயர் பூசை செய்து கொண்டிருந்தார்.
கருவறையில் பிள்ளையார் பிரதிஷ்டையும், மகாமண்டத்திலுள்ள அம்பாள் கோவிலில் ஸ்ரீவல்லபாம்பிகையும் பிரதிஷ்டையும் செய்யப்பட்டிருந்தது. அம்பாள் அற்புதமான அமைப்பையுடையது. சதுர்ப்புஜங்களையுடைய நின்ற திருவுருவம் மேல்நோக்கிய இரு கரங்களிலும் சங்கும், சக்கரமுமுண்டு. மற்றிருகைகளில் ஒன்று அபயம், மற்றது தொடையோடு தொங்கவிடப்பட்டிருக்கின்றது. அம்பாளுக்கு முன் நித்தியாக்கினிக் குண்டம் காணப்பட்டது. எழுந்தருளி விக்கிரகங்களும் மகாமண்டபத்திலிருந்தன. ஸ்நபனமண்டபத்தின் தெற்குப் பக்கம் சுப்பிரமணியருக்கும், வடக்குப் பக்கம் கிருஷ்ணருக்கும், அவருக்கெதிரே சூரிய நாராயணருக்கும் தனித்தனி ஆலயங்களிருந்தன. ஸ்தம்ப மண்டபவாசலில் சாளக்கிராமம் கட்டப்பட்டு அருகே மணிக் கோபுரமுமுண்டு. தெற்கு வீதியில் வைரவரும், வடக்கு வீதியில் நாகதம்பிரானுக்கும், கோணலிங்கத்திற்கும் தனியான ஆலயங்களிருந்தது. நாகதம்பிரான் கோவிலுக்கருகில் வேம்பும், அரசும் ஒன்றக வளர்ந்து அதனைச் சுற்றிப் பெரிய புற்று வளர்ந்திருக்கின்றது. புற்றில் நாகபாம்பு இருக்கின்றது. இந்த இடத்தில் மக்கள் நாகதோஷத்திற்கு நேர்கடன் வைத்து பூரண பலனைப் பெற்று வருகின்றர்கள்.
காலை, மாலை இரண்டுகாலம் நித்தியபூசை நடைபெற்று வருகின்றது. ஆடியமாவாசையைத் தீர்த்ததினமாக வைத்து அதற்கு முந்திய பத்து நாட்களிலும் அலங்கார உற்சவம் நடைபெற்றுவருகின்றது. தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், வைகாசி விசாகம், சித்திராபூரணை, ஆனி உத்தரம், ஆவணிமூலம் ஆகிய விசேட தினங்களில் பிள்ளையாருக்கு விசேட அலங்கார விழாக்களும், வருடப்பிறப்பு. பங்குளித் திங்கள், வைகாசிப் பொங்கல், நவராத்திரி என்பன வல்ல பாம்பிகைக்கு விசேட விழாக்களும் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணருக்கு உறியடி உற்சவமும், வீம ஏகாதசி, சுவர்க்க வாயில் ஏகாதசி விழாக்களை நடத்துகின்றார்கள். கோவிலுக்குரிய தீர்த்தக் குளம் பாவிப்புக்குரிய நிலையிலில்லை. அதனால் சுவாமி கடலில் தீர்த்தமாடச் செல்வார். இவ்வாலயத்தில் உருவாடித் திருவாக்குச் சொல்லும் வழக்கம் இருந்து வருகின்றது. இவ்வாலய வரலாற்றைத் திரு. கு. லிங்கராசா அவர்கள் பகிர்ந்து வந்துள்ளார்.