நிறுவனம்:பெரியதொடுவாய்ப் பிள்ளையார் கோவில்
பெயர் | பெரியதொடுவாய்ப் பிள்ளையார் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | திருகோணமலை |
முகவரி | பெரியதொடுவாய்ப் பிள்ளையார் கோவில், திருகோணமலை |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
திருகோணமலைப் நகரில் இருந்து நாலரைக் கிலோ மீற்றர் தூரத்திலும், புகையிரத நிலையத்திலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்திலும், உப்புவெளிக் கிராமத்தின் மத்தியில் நிலாவெளிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் இவ்வாலயம் இருக்கின்றது. இந்த ஆலயம் பெரியதொடுவாய்ப் பிள்ளையார் கோவில் எனப் பெயர் பெற்றதற்கோர் காரணம் கூறப்படுகின்றது. முற்காலத்தில் கந்தசுவாமி மலையிலிருந்து ஊற்றெடுத்த சிற்றாற்றின் ஒரு கிளை தற்போது இந்த ஆலயம் இருக்கும் இடத்திற்குச் சமீபமாகப் பாய்ந்ததென்றும், மற்றொருகிளை தற்போதிருக்கும் சின்னத்தொடுவாய்ப் பிள்ளையார் கோவிலுக்குச் சமீபமாகப் பாய்ந்து சமுத்திரத்தில் சங்கமம் ஆகியதென்றும் கர்ண பரம்பரையாகப் பேசப்பட்டு வருகின்றது. எனவேதான் முன்னது பெரியதொடுவாய் என்றும் பின்னது சின்னத்தொடுவாய் என்றும் அழைக்கப்படுகின்றது. இவை இரண்டு கிளைகளுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி படுக்கை எனப்படும். இப்போதும் இப்பிரதேசம் படுக்கையென்ற பெயராலேயே வழங்கி வருகின்றது. இங்கு ஒரு பத்திரகாளி கோவில் இருக்கின்றது. நிலாவெளியிலுள்ள உப்பளங்களில் உற்பத்தியாகும் உப்பு திருகோணமலைக்கு எடுத்துவரப்படும் வழியில் தங்கிச்செல்லும் இடமாய் காணப்பட்டதால் இக்கிராமம் உப்புவெளியென்றும், இங்குள்ள ஆலயம் உப்புவெளிப் பெரிய தொடுவாய்ப் பிள்ளையார் கோவிலென்றும் பெயர் பெற்றது.
சுமார் இருநூற்றைம்பது வருடங்களுக்குமுன் இவ்விடத்தில் பிள்ளையார் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டதென ஊகிக்க இடமுண்டாகின்றது. 1715 ஆம் ஆண்டளவில் தற்போது இவ்வாலயம் இருக்குமிடத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருந்ததாகவும், அதன் கீழிருந்த கல்லைப் பிள்ளையாராகக்கருதி மக்கள் வழிபட்டு வந்ததாக அறிய முடிகின்றது. பின்னர் உயர்திரு. அருணகிரிக் குருக்கள் அந்த இடத்தில் சிறுகோவிலொன்றைக் கட்டி அந்தக் கல்லை வைத்து வழிபாடாற்றி வந்துள்ளார்.
தற்போதுள்ள கற்கோவிலிலும் இந்தக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு முதற்பூசை முடித்தபின்பே மூலஸ்தானப் பூசைகள் செய்யப்பட்டு வருகின்றன. திரு. அருணகிரிக் குருக்களும், அவருடைய மகன் திரு. நல்லதம்பி ஐயரும் ஆதியிலமைக்கப்பட்ட கோவிலில் பல ஆண்டுகள் தொடர்ந்து பூசை செய்து வந்தார்கள். இவர்களுடைய பரம்பரையில் வந்த உயர்திரு ஏரம்பு ஐயர் அவர்களும், அவருடைய மாமனார் திரு. கந்தசாமிக் குருக்களும், மைத்துனர் திரு. நாகலிங்கக் குருக்களும் உப்புவெளிச் சைவப்பெருங்குடி மக்களின் உதவியோடு மடாலயமொன்றைக் கட்டிப் பல திருத்த வேலைகளையும் செய்து ஆலயத்தை முன்னரிலும் சிறப்பாக நடத்திவந்தார்கள். பின்னர் ஏரம்புஐயருடைய மகன் சிவஸ்ரீ விஸ்வலிங்கக் குருக்கள் ஊர்ப் பொதுமக்களின் உதவியோடு தூபி முதலிய ஆலயத் திருப்பணிகளை முறைப்படி செய்து நிறைவேற்றி 18.05.1933 இல் சம்புரோட்ஷண மகாகும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார். 1973 இல் கடைசியாகச் செய்யப்பட்ட கும்பாபிஷேகத்துடன் இவ்வாலயத்தில் நான்குமுறை கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. அண்மையில் ஐந்தாவது கும்பாபிஷேகமும் இடம்பெற்றது.
கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், தரிசனமண்டபம் என்னும் நான்கு மண்டபங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் கருவறையில் விநாயகர் சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. அங்குசம், பாசம், ஒற்றைக்கொம்பு, மோதகங்களைத் தாங்கிய சதுர்ப்புஜங்களோடு ஐங்கரமூர்த்தி, கருணாமூர்த்தியாகக் காணப்படுகின்றார். ஆதியில் வழிபாடு செய்யப்பட்டு வந்த கல்லுப்பிள்ளையார் அர்த்தமண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றார். நாகதம்பிரான், பைரவர் என்னும் பரிவார மூர்த்திகளும் அம்மண்டபத்தில் இருக்கின்றது. மகாமண்டபத்தில் உற்சவ மூர்த்தியும், தரிசனமண்டபத்தில் மூஷிகம், பலி பீடம் என்பனவும், ஆலயத்தின் முன்புறத்தில் மணிக்கோபுரம் உண்டு.
காலைச்சந்தி, மாலைச்சந்தி ஆகிய இரண்டு காலமும் நித்தியபூசைகள் நடைபெற்றுவருகின்றன. ஆனி உத்தரத்தில் அலங்கார உற்சவம் ஆரம்பமாகிப் பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. பதினோராம் நாள் சுவாமி கடலில் தீர்த்தமாடுகின்றார். அடுத்தநாள் பூங்காவன உற்சவத்தை உப்புவெளி இந்துஇளைஞர்கள் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள். இவைகளை விட விநாயக சதுர்த்தி, திருக்கார்த்திகை, பெருங்கதை, சூரன்போர், திருவெம்பாவை முதலிய விசேட பூசைகளும் நடைபெற்று வருகின்றன.
பண்டைக்காலந் தொடக்கம் சைவப் பெருங்குடி மக்கள் பக்திபூர்வமாக ஆதரித்து வந்த இவ்வாலயத்தை இன்றும் அவ்வாறே நடத்தி வருகின்றார்கள். இவ்வாலயத்தில் சிவஸ்ரீ ஏ. விஸ்வலிங்கக் குருக்களும், புலவர் ஸ்ரீ வை. சோமாஸ்கந்தக் குருக்களும் நித்திய, நைமித்திய பூசைகளை நடத்தி வந்தனர். ஸ்ரீ ஏ. விஸ்வலிங்கக் குருக்களால் பாடப்பெற்ற திருவூஞ்சல் பாடல் இவ்வாலயத்தில் இருக்கின்றது.
தற்பொழுது விசேட பூஜைகளுடன் ஆலய கிரியைகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.