நிறுவனம்:பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் பாலம்போட்டாறு
முகவரி பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயம், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு விசேடமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். திருகோணமலையிலிருந்து கொழும்பு, கண்டிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் பதினாறு கிலோ மீற்றர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கின்றது. இவ்வாலயத்திற்குப் பக்கமாக ஒரு ஆறு ஓடுகின்றது. இது களு முட்டியான் குளத்திலிருந்து ஊற்றெடுத்துப் பாய்ந்து திருகோணமலைத் துறைமுகத்தில் 'கப்பல்துறை" என்ற இடத்தில் கடலோடு சங்கமமாகின்றது. இந்தக் கோவிலுக்குச் சமீபத்தில் இந்த ஆற்றுக்கு மேலே உள்ள பாலம் ஊடாக கொழும்பு செல்லும் பாதை செல்கின்றது. இதனால் இக்கோவில் பாலம்போட்டாறு பத்தினியம்மன் கோவில் எனப்படுகின்றது. தூர இடங்களுக்கு பயணம் செய்பவர்கள் இவ்விடத்தில் வழிபட்டு செல்வது வழக்கம்.

இற்றைக்குச் சுமார் நூறு வருடங்களுக்கு முன், இக் கோவிலிருக்கும் காட்டுப் பிரதேசத்தில் மரம் வெட்டச் சென்றவர்கள், பயபக்தியினாலே தங்கள் தொழிலுக்குப் பாதுகாப்பாயிருந்து காக்கும்படி வேண்டுதல் செய்து காளியம்மன் ஆலயத்தைக் கொட்டில் கோவிலாகக் கட்டி வழிபாடு செய்து வந்தார்கள். அக்காலத்திலிருந்து இவ்வாலயத்தில் பலியிடும் வழக்கம் இருந்து வந்தது. பத்தினித் தெய்வ வழிபாட்டுக்கு முக்கியமான தினம் வைகாசித் திங்கள். ஆதலால் வருடத்தில் ஒருமுறை வரும் வைகாசித்திங்கள் நாளில் இவ் வாலயத்தில் பொங்கல்விழா நடத்திப் பலியிட்டுப் பூசை செய்து வந்தனர்.

பிற்காலத்தில் சிவஸ்ரீ கா. யோகீஸ்வரக் குருக்கள் பொதுமக்களின் உதவியோடு கோவிலைக் கல்லால் கட்டுவித்து காளியம்மன் சிலையைப் பிரதிஷ்டை செய்து பூசையை நடத்திவந்தார். ஆனால் வழக்கம்போல முன்பு பூசை செய்துவந்த பூசாரிமார்களுடைய பலியிடும் பூசையும் நடைபெற்று வந்தது. திரு. அப்பையர் என்பவர் பலியிடும் பூசையைச் செய்து வந்தார். பொங்கல் பூசை மூலஸ்தானத்தில் நடைபெற்றபின் கோவிலுக்கு வெளியே விடியற் சாமத்தில் ஆடு, கோழி பலியிட்டு வந்தார்கள். இப்போது பலியிடும் வழக்கம் நிறுத்தப்பட்டுவிட்டது.

இவ்வாலயத்திற்குரிய எழுந்தருளி அம்பாளைப் பாதுகாப்பின் நிமித்தம் தம்பலகாமம் கோணேசர் கோவிலில் முன்னர் வைத்திருந்தனர். வைகாசித் திங்களன்று அங்கிருந்து மங்கல வாத்தியங்களோடு எழுந்தருளச் செய்து கோவிலில் வைத்துப் பொங்கல் பூசை நடத்தி வந்தனர். மறுநாள் மீண்டும் தம்பலகாமம் கோணேசர் கோவிலுக்குக் கொண்டு போய் வைத்துவிடுவார்கள். தற்பொழுது ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அம்பாள் அருள் பாலிக்கின்றார்.

சிவஸ்ரீ யோகீஸ்வரக் குருக்கள் சிவபதமடைந்தபின் அவருடைய மகள் ஆலயத்தைப் பராமரித்து வந்தார். திருகோணமலை பத்திர காளியம்பாள் தேவஸ்தானக் குருக்கள் பூசைகளைச் செய்து வந்தார். தற்பொழுது பத்திர காளியம்பாள் ஆலய பராமரிப்பில் இவ்வாலயம் உள்ளது. வைகாசித் திங்களன்று திருகோணமலைப் பத்திரகாளி கோவிலில் இருந்தும், மாரியம்மன் கோவிலில் இருந்தும் பெண்களும், ஆண்களும், பிள்ளைகளும் பாற்செம்பு, கும்பம், கரகம், காவடி எடுத்துப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்திமயமான பாதயாத்திரை செல்வார்கள். வழியெங்கும் மக்கள் நிறைகுடம் வைத்து வரவேற்று ஆதரித்துப் பக்தர்களை வழியனுப்பி வைப்பார்கள்.

பத்தினியம்மன் கோவிலில் இரவு பூராகவும் பொங்கல் விழா நடைபெறும். ஒரு வருடத்தில் ஒரு நாளில் மாத்திரம் நடைபெறும் இவ்விழாவில் பல ஆயிரம் மக்கள் பயபக்தியோடு வழிபாடு செய்யக் கூடுவதைச் சிந்திக்கும் போது இந்தப் பத்தினியம்பாளுடைய சக்தி மகத்துவமானது என்பது புலனாகின்றது. இந்த அம்பாளுக்கு நேர்த்திக்கடன் வைத்து எண்ணியதை எண்ணியவாறு எய்தப் பெறுவதால் மக்களின் நம்பிக்கை வளர்ந்துகொண்டே வருகின்றது.

தியாகி ராஜகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சத்தியாக்கிரக முயற்சியினாலும், ஆலய நிர்வாகிகளுடைய ஒத்துழைப்பினாலும் பலியிடும் வழக்கம் நின்றது போற்றத்தக்க சம்பவமாகும்.