நிறுவனம்:படுக்கைப் பத்திரகாளி கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் படுக்கைப் பத்திரகாளி கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருகடலூர்
முகவரி படுக்கைப் பத்திரகாளி கோவில், திருகடலூர், திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருக்கோணமலையிலிருந்து நிலாவெளிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் திருக்கோணமலைப் நகரத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும், திருக்கோணமலைப் புகையிரத நிலையத்திலிருந்து கால் கிலோமீற்றர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கின்றது. பெரியதொடுவாய்ப் பிள்ளையார் கோவிலுக்கும், சின்னத்தொடுவாய்ப் பிள்ளையர் கோவிலுக்கும் இடையில் கடற்கரையோரமாக திருகடலூர் எனும் இடத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது.

முற்காலத்தில் தொடுவாயாறு என்ற ஒரு ஆறு கந்தசாமி நிலையடிவாரத்தில் உள்ள மனையாவெளிக் குளத்திலிருந்து ஆரம்பித்து தக்கியாக்குளம், செங்கற்பண்ணைக்குளம் என்பவற்றினூடாக ஓடி வீரகத்திப் பிள்ளையார் கோலிலுக்கருகாமையிலுள்ள தாமரைக்குளத்தை நிரப்பி அங்கிருந்து ஓடி இரண்டு கிளைகளாகப் பிரிந்து ஒருகிளை பெரிய தொடுவாய்ப் பிள்ளையார் கோவிலையும், மற்றக்கிளை சின்னத்தொடுவாய்ப் பிள்ளையார் கோவிலையும் தாண்டிச் சென்று கடலை அடைந்தது. இந்த ஆறு இப்பொழுது இல்லையெனினும் முன்னர் அந்த ஆறு ஓடிய நிலப்பகுதி பள்ளநிலமாகக் காணப்படுகின்றது. இந்த இரண்டு கிளைகளுக்கும் இடைப்பட்டபகுதி "படுக்கை" எனப்பட்டது. இந்த இடத்தில் இவ்வாலயம் இருப்பதால் படுக்கைப் பத்திரகாளி கோவில் எனப் பெயர் பெற்றது.

சுமார் நூறு வருடங்களுக்கு முன் குப்பையர்தம்பு என்பவர் புதர்கள் மண்டிக்கிடந்த இந்தப் படுக்கை மேய்சற் தரையில் மாடு மேய்க்கச் செல்வது வழக்கமாம். தீராத நோய் வாய்ப்பட்டிருந்த போதிலும், மாடுமேய்ப்பதை விட்டுவிடவில்லை. தனது நோயைப்பற்றிக் கவலைப்பட்டு அதனைத் தெய்வத்தினிடம் ஒப்படைத்து வாழ்ந்து வந்தவர், ஒரு நாள் மாடுகளை மேயவிட்டு ஒரு மரநிழலில் படுத்துறங்கினார். அப்போது அவருடைய கனவில் பத்திரகாளி பிரசன்னமாகி "உனது நோயைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் அந்த நோயை நீக்கிவிடுவேன்" என்று வாக்கருளினாளாம்.

இந்த அற்புதத்தில் பெருமகிழ்ச்சியடைந்த தம்பு பத்திரகாளி காட்சியளித்த இடத்தில் ஒரு கொட்டில் கட்டி ஒரு சூலத்தை வைத்து வழிபட்டுவந்தார். அக்காலத்தில் அவருடைய மைத்துனர் ரெங்கசாமி முத்துச்சாமி என்பவரும் சேர்ந்து இந்தக் கோவிலைச் சிறப்பாக நடத்தக் கருதி சுதையாற் செய்யப்பட்ட துர்க்காதேவியின் சிலையொன்றை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்துவந்தார்கள்.

தம்புவின் நோய் நீங்கியதையறிந்த மக்கள் இந்த ஆலய சூழலில் சென்று குடியேறி பத்திரகாளி கோவிலை ஆதரிக்கத் தொடங்கினார்கள். பக்தர்களிடம் நம்பிக்கையும் விசுவாசமும் பெருகப் பெருக வழிபாட்டின் மூலம் அம்பாளின் அருளையும் அனுபவிக்கத் தொடங்கினார்கள். சிறு தெய்வ வழிபாடு போல இங்கு நடைபெற்று வந்த வழிபாட்டில் உருவாடித் திருவாக்குக் கூறும் வழக்கமிருந்துவந்தது. பக்தர்கள் "தாயார்" என்று பக்தியோடு அழைத்து வழிபாடுசெய்வார்கள். இப்போது சிறு தெய்வவழிபாட்டைக் கைவிட்டு உற்ச வங்களை நடத்தி வருகின்றார்கள். முற்காலத்தில் இவ்வாலயத்தில் ஏற்றிவைக்கப்பட்ட விளக்கு எரிந்துகொண்டிருக்க ஒலையால் கட்டப்பட்டிருந்த கொட்டிற்கோவில் எரிந்து விட்டதாம். பக்தர்கள் கவலைப்பட்டு மீண்டும் கட்டினார்கள். சிலகாலத்தின் பின் மீண்டும் எரிந்துவிட்டது. இவ்வாறு பல தடவை நடைபெற்றதாம்.

இதன் காரணத்தைத் தாயாரிடமே கேட்டார்களாம். "திருக்கோணமலை ஆலடியிலிருக்கும் ஸ்ரீபத்திரகாளியே மக்களின் நலங்கருதி இவ்வாலயத்திற்கு எழுந்தருளி வருகின்றாள். மக்களிடம் கொடிய வியாதிகள், தொற்றுநோய்கள் பரவும் சமயங்களில் நானே அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு ஆலயத்தை எரியச்செய்து மக்களுடைய நோய் துன்பங்களை எரித்துவருகின்றேன்" என்று திருவாக்கருளினாளாம். இதனால் மக்களுடைய பக்தி மேலும் மேலும் வளரத்தொடங்கியது.

ஆலயத்திலிருந்த சுதைத்திருவுருவம் பழுதடைந்த நிலையிலிருந்ததால் மக்கள் அந்த இடத்தில் அழகிய கற்கோவிலொன்றைக்கட்டி பத்திரகாளியம்பாளின் சிலை விக்கிரகமொன்றை ஸ்தாபித்து வழிபட்டு வருகின்றார்கள். கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், தரிசன மண்டபங்களைக்கொண்ட மடாலயமாக இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. கருவறையிலுள்ள பத்திரகாளி ஒருகையில் பாசமும், ஒருகையில் உடுக்கும், மற்றிருகைகளிலும் சூலமும், கபாலமும் தரித்து பத்ம பீடத்தில் ஒருகாலை மடித்து மறு காலைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள்.

இங்கு காலைச்சந்தி, மாலைச்சந்தி ஆகிய இரண்டுகால நித்திய பூசைகள் நடைபெற்று வருகின்றன. ஆடிப்பூரத்தைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்துநாள் அலங்கார உற்சவமும், பதினோராம் நாள் தீர்த்தோற்சவமும் நடைபெற்று வருகின்றது. தைப்பூசம், சிவராத்திரி, சித்திராபர்வம், வைகாசிப் பொங்கல், நவராத்திரி, ஐப்பசிக் கும்பாபிஷேக தின மணவாளக் கோலவிழா, திருவெம்பாவை என்பன விசேடபூசை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன. இவ்வாலயம் பரிபாலனசபையால் பராபரிக்கப்பட்டு வருகின்றது.